Published : 27 Feb 2020 08:03 AM
Last Updated : 27 Feb 2020 08:03 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 113: உயிரே சேரிடம் அறிந்து சேர்

கரு.ஆறுமுகத்தமிழன்

சங்க இலக்கியப் பரப்பில் சில புலவர்களின் இயற்பெயர்கள் பதிவில் இல்லை. பெயரில்லாமல் பாட்டைப் பதிவிட்டால் எழுதியவர் யார் என்று கேட்கமாட்டார்களா? ஆகையால் சங்கப் பாடல்களைத் தொகுத்தவர்கள், குறிப்பிட்ட புலவர்களின் பாடல்களில் இடம்பெறும் உவமை அல்லது தொடரைக்கொண்டே அவர்களுக்குப் பெயர் சூட்டினார்கள்: குப்பைக் கோழியார், அணிலாடு முன்றிலார், செம்புலப் பெயல்நீரார்...

‘அதென்ன குப்பைக் கோழியார்?’ என்போர் கேட்க: குப்பையைக் கிளறும் கோழிகள் இரண்டு தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டால், அவற்றை விலக்கிவிட யார் வருவார்? அவை தாமாக விட்டுக்கொடுத்துச் சண்டையை நிறுத்திக்கொண்டால்தான் உண்டு. தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான ஊடலிலும் அவ்வாறே. ஊடலுக்குக் காட்டாகக் குப்பைக் கோழிகளின் சண்டையை வைத்ததால், இப்பாட்டை (குறுந்தொகை 305) எழுதியவர் குப்பைக் கோழியார் ஆயினார்.

‘அதென்ன அணிலாடு முன்றிலார்?’ என்போர் கேட்க: திருவிழா முடிந்து வந்தவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். ஆளும்பேருமாக ஆடித் திரிந்த முற்றம் வெறிச்சோடி, அதில் அணில் ஆடுகிறது. தலைவன் பிரிந்து போய்விட்டான்; அவன் நினைவு நெஞ்சில் ஆடுகிறது (குறுந்தொகை 41). ‘முற்றத்தில் ஆடும் அணிலே! தலைவியின் தனிமையை ஆழமாக்குகிறாய்!’ என்று உணர்வு பாடிக்காட்டியவரின் பெயர் அணிலாடு முன்றிலார் ஆயிற்று.

‘அதென்ன செம்புலப் பெயல்நீரார்?’ என்போர் கேட்க: மழைநீருக்கு என்ன நிறம்? எந்தப் புலத்தில் விழுகிறதோ அந்தப் புலத்தின் நிறம். செம்புலத்தில் விழுந்தால் செந்நிறம்; கரும்புலத்தில் விழுந்தால் கருநிறம்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

(குறுந்தொகை, 40)

உன் தாய்க்கும் என் தாய்க்கும் அறிமுகம் உண்டா? இல்லை. உன் தந்தையும் என் தந்தையும் உறவினரா? அல்லர். நானும் நீயுமாவது ஒருவர்க்கொருவர் அறிமுகமானவர்களா? அல்லோம். ஆனாலும் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர்போல, அன்புடைய நம் நெஞ்சங்கள் ஒன்றிவிட்டனவே என்று நெஞ்சக் கலப்புக்குச் செம்புலப் பெயல்நீர்க் கலப்பை உவமை வைத்துப் பாடியதால் அவர் செம்புலப் பெயல்நீரார்.

உயிர்களின் இயல்பு

இந்தச் செம்புலப் பெயல்நீர் உவமையில் ஒரு மெய்யியல் கருத்துண்டு: நீர் நெகிழ்வுடையது. எதைச் சார்கிறதோ அதன் தன்மையைப் பெற்றுக்கொள்ளும் —வடிவத்தால், நிறத்தால், சுவையால். உயிரும் அதைப் போன்றது. எதைச் சார்கிறதோ அதன் தன்மையைப் பெற்றுக்கொள்ளும். ‘உயிர்களின் இயல்பு சார்ந்ததன் வண்ணமாதல்’ என்று உயிர் இயல்பை வரையறுக்கிறது சைவசித்தாந்தம். உயிர் செம்பொருளோடு சேர்ந்தால் தானும் செம்பொருள். கரும்பொருளோடு சேர்ந்தால் தானும் கரும்பொருள்.

களிம்புஅறுத் தான்எங்கள் கண்நுதல் நந்தி;

களிம்புஅறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்

களிம்புஅணு காத கதிர்ஒளி காட்டிப்

பளிங்கில் பவளம் பதித்தான் பதியே.

(திருமந்திரம் 114)

கதிர்ஒளி படாத இடம்; களிம்பு படிந்து கிடக்கிறது பயன்பாடற்ற பளிங்கு. களிம்பைத் துடைத்துப் பளிங்கில் ஒரு பவளமும் பதித்து, அதில் கதிர்ஒளியும் காட்டினால், பளிங்கு செம்மையாக ஒளிராதா? உயிர்ப் பளிங்கின் களிம்பைத் துடைத்து, அதில் சிவச் செம்பொருள் பதித்தால், ஜீவன் சிவனாக மிளிராதா?

சீவன் எனச்சிவன் என்னவேறு இல்லை;

சீவ னார்சிவ னாரை அறிகிலர்;

சீவ னார்சிவ னாரை அறிந்தபின்,

சீவ னார்சிவன் ஆயிட்டு இருப்பரே.

(திருமந்திரம் 2017)

சீவனும் சிவனும் வேறுவேறா? அல்லவே? ஒன்றி இருப்பவைதாமே? தன்னோடே ஒன்றி இருக்கும் சிவனாரைச் சீவனாருக்கு அறியத் தெரியவில்லை; சீவனார் சிவனாரை அறிந்துகொண்டபின், சீவனார் தன்னைச் சிவனாராகவே பாவித்துக்கொள்வார்.

நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றுஆகும் மாந்தர்க்கு

இனத்துஇயல்புஅது ஆகும் அறிவு.

(குறள் 452)

நிலத்தின் இயல்புக்குத் தக நீரின் இயல்பு (நிறத்தால், சுவையால்) வேறுபடும்; அவ்வாறே சேரும் இனத்தின் இயல்புக்குத் தக உயிர்களுக்கு அறிவின் தன்மை வேறுபடும்.

உயிர் நீர்மை உள்ளது; சார்ந்ததன் வண்ணமாவது; தான் ஒன்றிய பொருளுக்குத் தன்னைக் கொடுத்து அதன் இயல்பைத் தன் இயல்பாக ஈடு பெற்றுக்கொள்வது. ஆதலால் உயிரே! சேரிடம் அறிந்து சேர். (ஆத்தி சூடி 51)

தொடர்புக்கு: arumugatamilan@gamil.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x