

க.முருகன்
பிள்ளைப் பிராயத்திலே பெரிய பெயர்பெற்றவனை கந்தன் என்றும் முருகன் என்றும் பக்தர்கள் கொண்டாடி வணங்கினர். உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும்போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது அவன் அருளே என அவன் கருணையைக் கண்டுகொண்டனர். ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தபோது, அழகன் அவன் முருகன் என இனிய பெயர் வைத்து வழிபட்டனர். அந்த ஆறு முகமும் ஒருமுகமாகி அமர்ந்திருக்கும் மலையே கழுகுமலை.
சிவயோகிகளின் தியான மூர்த்தியாக வடிவமைக்கப்பட்டு வானமும் நீரும் சூழ்ந்த தனியிடமான கழுகுமலைக் குகையினுள் வழிபடப்படும் முருகப் பெருமானின் ஆறுமுகங்கள், யோக ஆதாரங்கள் ஆறையும் குறிப்பிடுகின்றன. மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மனியூரகம், அனாகதம், விசுக்தி ஆக்ஷா ஆகிய ஐந்து ஆதாரங்களில் மூலாதாரத்திலுள்ள யோக நெருப்பு மற்ற அனைத்து ஆதாரங்களையும் கடந்து ‘ஆக்ஞா’ எனப்படும் ஆறாம் யோக ஸ்தானமாகிய புருவ நடுவில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். ஐந்து ஆதாரங்களும் ஒன்றாகி ‘ஆக்ஞா’ என்ற நெருப்பு மையத்தில் குவியும் சூரிய நிலையே கழுகுமலையில் குடியிருக்கும் கழுகாசலமூர்த்தியின் ஒருமுகமாக ஒளிவீசுகிறது.
மாயையில் இருந்து காக்கும் ஆயுதம்
யோக சிலையில் சுழிமுனை நாடியில் பிரம்மகிரந்தி, விஷ்ணுகிரந்தி, ருத்ரகிரந்தி ஆகிய மூன்று விதமான முடிச்சுகள் உள்ளன. யோகிகள் இந்த மூன்று முடிச்சுகளை உடைத்து அறுத்தெறிவது அரிய செயல். அதனால்தான் கழுகாசலமூர்த்தி கத்தி, குலிசம், வஜ்ரம் ஆகிய மூன்று ஆயுதங்களால் இந்தக் கிரந்த முடிச்சுகளை அறுத்தெறிவதுடன் மாயையின் பிடியில் சிக்காதபடி கேடயத்தால் பாதுகாத்து அருள்கிறார். மந்திர வடிவமான வேதமயில் மீது அமர்ந்து ஞானமாகிய நெடுவேலால் சிவயோகம் சித்தியாகி, ஏழாம் ஞான பூமியான ஸ்கஸ்தளத்துக்கு உயர்த்தும் பொருட்டு அருள்பாலிக்கிறார்.
இந்தக் கழுகாசலமூர்த்தி வேதமூர்த்தியாகவும் யோகமூர்த்தியாகவும் ஞானமூர்த்தியாகவும் விளங்குகிறார். இங்கே முருகப் பெருமான் ஏறியமர்ந்த மயிலின் முகம் அவருக்கு இடப்புறமாக அமைந்துள்ளதும் யோக ரகசியம். வலப்புறம் கர்மயோகம் என்றும் இடப்புறம் ஞானயோகம் என்றும் கூறப்படும்.
வேதமார்க்கம் கர்மயோகம், ஞானயோகம் இரண்டையும் குறிப்பதால் யோகிகள் ஞானம்பெறும் பொருட்டு மயில் முகத்தை இடப்புறம் அமைத்தனர். வள்ளி நாயகி இடப்புறம் அமர்ந்து ஞான சக்தியாகச் செயல்படுகிறார். தெய்வானை வலப்புறம் அமர்ந்து இச்சா சக்தியாகச் செயல்படுகிறார்.
மயில் மேல் ஏறியமர்ந்த திருக்கோலம் கழுகாசலநாதன் வேதமும் கடந்தவன் என்ற பொருளைத் தருகிறது. ஞான அக்னியைத் தலைக்கு மேல் ஏற்றிச் சமாதி நிலை பெறவேண்டி மூலவரின் தலைக்கு மேல் 300 அடி உயரக் குன்று அமையும்படி யோகிகளால் வடிவமைக்கப்பட்ட திருமேனி, ஏனைய முருகன் கோயில்களில் இல்லாதபடி மாறுபட்டு விளங்குகிறது. யுகங்கள் கடந்த பின்னரே இம்மூர்த்தியை மனிதர்கள் வழிபட ஆரம்பித்தனர்.
ராமாயணத்தில் இடம்பெறும் சம்பாதி என்ற கழுகு முனிவர் வழிபட்ட தலம் கழுகுமலை எனப்படுவதால் இந்த மலை திரேதாயுகம் தொட்டே இருப்பதாக நம்பப்படுகிறது. வாலியும் சுக்ரீவனும் போர் புரியும் காட்சியும் மறைந்திருந்து ராமன் வாலியைத் தாக்கும் காட்சியும் கோயில் தூணில் செதுக்கப்பட்டுள்ளன. மலையின் பின்புறம் சமணர்களின் பள்ளி அமைந்துள்ளது.
சித்தர் வணங்கும் சொரூபம்
இத்திருத்தலத்தில் அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், செவல்குளம் கந்தசாமிப் புலவர் ஆகியோர் பாடல் பல பாடி வழிபட்டுள்ளனர். கவி அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து பாடினார். ஊத்துமலை மன்னர் வள்ளல் இருதாலய மருதப்பதேவர் காவடி சுமந்து நடைப்பயணமாகவே வந்து கழுகாசலமூர்த்தியை வணங்கினார்.
இம்மூர்த்தி யோக ஞானமயமாய் விளங்குவதால் ஒளியுடலில் வாழும் சித்தர்கள் அதிகாலை மூன்று மணிக்கு மேல் இன்றளவும் வந்து வணங்கிச் செல்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு காலையில் நடை திறந்து பார்த்தபோது மூலவர் திருமேனியில் பல அரியவகை மலர்களைக் கண்டதாகப் பரம்பரை அர்ச்சகர் மரபில் வந்த முதியவர்கள் சொல்லியிருக்கின்றனர்.
முருகனின் அரச பீடம்
மூலவர் நெருப்பு மயமாக விளங்குவதால் அவரது நெருப்பாற்றலைத் தணிக்கும் விதமாகப் பின் நாட்களில் வள்ளி, தெய்வானையை பிரதிஷ்டை செய்தனர் என்று கூறப்படுகிறது. இவ்விரு விக்கிரகங்களும் சற்று மறைவாகவே அமைக்கப்பட்டிருக்கும். கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி மகம் ஆகியவை இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பௌர்ணமி கிரிவலமும் விமரிசையாக நடைபெறுகிறது. செவ்வாய் தோஷம் போக்கித் திருமணம், குழந்தைப்பேறு ஆகியவற்றையும் ஒரு சேரத் தரும் தலமாக இது விளங்குகிறது.
பொதுவாக ஆலயங்கள் கிழக்கு முகமாகவே கட்டப்படும். மேற்கு பார்த்த சிவாலயங்கள் உண்டு. கழுகுமலைக் குகைக்கோயில் மூலவர் தென்மேற்குத் திசை நோக்கியவாறு அமர்ந்துள்ளார். அகத்திய முனிவரால் வழிபடப்பெற்று, அவர் தென்மேற்கில் உள்ள பாபநாசம் பொதிகை மலைக்குச் சென்றதால் அகத்திய முனிவரைக் கருணைவிழிச் செய்யும் பொருட்டு தென்மேற்கில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் மேற்கே 20 கி.மீ. தொலைவில் அலைந்துள்ள கழுகுமலை, கழுகாசலமூர்த்தியின் தனி சாம்ராஜ்யமாக விளங்கும் அரசபீடமாகத் திகழ்கிறது.