Published : 20 Feb 2020 12:53 pm

Updated : 20 Feb 2020 12:54 pm

 

Published : 20 Feb 2020 12:53 PM
Last Updated : 20 Feb 2020 12:54 PM

அகத்தைத் தேடி 20: நாளை மலரும் நம்பிக்கை கொள்க

hope

தஞ்சாவூர்க்கவிராயர்

பல ஆண்டுகளுக்கு முன்னால் தேமொழியார் சுவாமிகளைப் பற்றி கேள்வியுற்று அவரைப் பார்க்க செங்கல்பட்டு போயிருந்தேன். நல்ல வெயில்வேளை, கறுத்த தேகமும் வெள்ளை வேட்டியுமாய் என்னை வரவேற்றார் தேமொழியார்.


பக்கத்து அறையிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண்மனி வெளிப்பட்டார். அவர் பெயர் மார்கரெட்; அமெரிக்கர். என்னைப் பார்த்து முறுவலித்தார். சுவாமிகளைப் பார்க்க இன்னொரு அன்பரும் வந்திருந்தார். சுவாமிகள் உட்கார்ந்தார்; உரையாடினார். அவர் சொன்ன ஒரு கருத்து முப்பது ஆண்டுகள் ஆகியும் மறக்கவில்லை.

அன்பர் கேட்டார்:

‘‘ஐயா தாங்கள் செல்லுமிடமெல்லாம் திருக்குறளின் அருமை பெருமைகளைச் சொல்லி வருகிறீர்கள். கேட்பவர்களில் ஒரு சிலரே அதைக் கடைபிடிப்பதாகத் தோன்றுகிறது. மற்றவர்களும் அவர்களோடு உட்கார்ந்துதான் கேட்டார்கள். அவர்களிடம் மாற்றமில்லையே ஏன்?’’

சுவாமிகள் பதிலளித்தார்.

‘‘ஒரு குளம், அதிலே ஏராளமான தாமரை மொக்குகள் நீர்பரப்பின்மேல் நீண்டிருக்கின்றன. கதிரவன் உதிக்கிறான். தன் கிரணங்களை அவற்றின் மீது பொழிகிறான். எல்லா மொக்குகளும் மலர்ந்து விடுவதில்லை. ஒரு சில அப்படியே உள்ளன. மலராத மொக்குகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். அவை நாளை மலரும்! மனிதர்களுக்கும் இது பொருந்தும்!’’

ஒரு மனிதன் எந்த மரபில் வந்தவன் என்பதற்கும் அவனுக்கும் கல்வி நாட்டமும் ஞானத் தேடலும் ஏற்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பார் சுவாமிகள். செஞ்சிக்கு அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தேமொழியார் பிறந்தார். வறட்சியான பகுதி அது. "என் பரம்பரையில் யாருக்குமே கல்வி அறிவு இல்லை. பாட்டனாருக்கும் இல்லை. பங்காளிகளுக்கும் இல்லை. உடன்பிறந்தாருக்கும் இல்லை. நான் தேடினேன், கிடைத்தது’’ என்பார் சுவாமிகள். பழம்பெரும் தமிழ் அறிஞர்களைத் தேடிச் சென்று பாடம் கேட்டார்.

அழகர் அடிகளின் தமிழ்க் கல்லூரி முதல்வராக உயர்ந்தார். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளைதான் இவரது இயற்பெயரான செயராமன் என்பதற்கு பதிலாக தேமொழி என்று பெயர் சூட்டினார். தமது பாண்டித்யத்தை மறைத்துக் கொண்டு பாமரருக்கும் புரியும் எளிய தமிழில் உரையாடுவார், எழுதுவார். ஆழமான இலக்கிய, இலக்கண நூல்களின் கருத்துக்களை அன்றாட வாழ்க்கையோடு ஒப்பிட்டு உரை நிகழ்த்துவார்.

இளமையில் வறுமை வாட்டினாலும் கற்பதைக் கைவிடவில்லை. ஆரம்பத்தில் பர்மாஷெல் நிறுவன உணவகத்தில் பணியாளராகப் பணிபுரிந்தார். மாவாட்டும் போதே எதிரே சுவரில் தொல்காப்பியம், நன்னூல் சூத்திரங்களை எழுதித் தொங்கவிட்டு மனப்பாடம் செய்வார். மாவாட்டும் போதே தொல்காப்பியமும் நன்னூலும் இவருக்கு முழுமையாக மனப்பாடம் ஆகிவிட்டன. துணைவியார். மூன்று குழந்தைகள்.

இவரது திருக்கோவையார் சிந்தனை உரைகளை அன்பர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். செங்கல்பட்டுக்கு நான் சென்றிருந்தபோது கண்ட மார்கரெட். இவரது கருத்துக்களில் பெரிதும் மரியாதை வைத்திருந்தார்.

தேமொழியாரை அமெரிக்காவுக்கே அழைத்துச் சென்று அமெரிக்கருக்கு மத்தியில் திருக்கோவையார் சிந்தனைகளைப் பற்றி சொற்பொழிவு ஆற்ற ஏற்பாடு செய்தார். மூன்று மாத காலம் தேமொழியாரின் சொற்பொழிவை சிராகஸ் பல்கலைக்கழகம் செவிமடுத்தது. அங்கிருந்த அறிஞர் பெருமக்களுக்கு திருக்கோவையார் சிந்தனைகளை சுவாமிகள் சொல்லி வரும்போதே, அன்பர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதனை அப்பல்கலைக்கழகம் ‘Love in south india’ என்ற நூலாக வெளியிட்டது. அமெரிக்காவுக்கும் வேட்டித்துண்டுடன் சென்றார் இந்த செங்கல்பட்டுத் தமிழர்.

கல் கனியானது

மார்கரெட்டின் தந்தை அமெரிக்காவிலிருந்து தேமொழியாருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் இப்படி முடிந்தது. ‘‘என் மகள் கல்லாக இருந்தாள். அவளைக் கனியாக மாற்றிவிட்டீர்கள்!’’

உலகியலில் உழல்வதை விடுத்து உண்மையான ஆன்மிகத் தேடலில் ஈடுபட வேண்டும் என்பார் சுவாமிகள். இதைப் ‘பராக்குப் பார்க்காதீர்கள்’’ என்று குறிப்பிடுவார். இதனை விளக்க ஒரு கதை சொல்வார்.

முனிவர் ஒருவர் ஆற்றங்கரையில் தியானத்தில் அமர்ந்திருந்தார். ஆற்றங்கரை ஓரமிருந்த அரசமரத்தின் இலைகள் காற்றில் சலசலத்தன. சற்றே கண் திறந்தார். அரச மரத்திலிருந்து ஒரு இலை கீழே விழுந்தது. விழுந்த இலை பாதி தண்ணீரிலும் பாதி கரையிலுமாகக் கிடந்தது. தண்ணீரில் விழுந்த பகுதி மீனாக மாறியது. தரையில் விழுந்த பகுதி பறவையாக மாறியது.

தண்ணீருக்கும் போக முடியாமல் பறக்கவும் முடியாமல் துடித்த அந்த விசித்திரப் பிறவியை வேடிக்கை பார்ப்பதில் அவர் கவனம் கலைந்தது. அப்போது அந்தப் பக்கமாக வந்த பூதம் அவரை விழுங்கிவிட்டுப் போய்விட்டது. முனிவராக இருந்தாலும் பராக்குப் பார்த்தால் இதுவே முடிவு என்றார் சுவாமிகள். பாம்பின் வாய்த் தேரைபோல பலப்பல நினைக்கின்றேனே என்கிறார் அப்பர். உலகியல் ஆசை என்ற பாம்பின் வாயில் சிக்குண்ட சீவன் என்னென்னவோ நினைத்துத் துடித்தும் பயனில்லை. பாம்பு விழுங்கியே தீரும்.

காதலின் வாசனை

தொல்காப்பியச் சூத்திரங்களுக்கு ஆழமாகப் பொருள் கூறுவதில் வல்லவர் சுவாமிகள். ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்விலும்’(3:24) என்ற தொல்காப்பியச் சூத்திரத்தில் பெண் குழந்தைக்கு ஒவ்வொரு பருவத்திலும் ஒரு மலர்ச்சியும் வாசனையும் வரும். பிறந்ததும் ஒரு மலர்ச்சி வாசனை, பருவம் வரும்போது ஒரு மலர்ச்சி வாசம். காதல் கொண்டுவிட்டால் வரும் மலர்ச்சி வாசனை.

உடலிலே புதுஎழில் புதுக்கி ஒளியினைப் பாய்ச்சும் மலர்ச்சி. காதல் கொள்ளும்போது வரும் வாசனை பெற்றோருக்குப் புரியாது. பாட்டிக்குத்தான் தெரியும் குழந்தை யாரையோ விரும்புகிறது என்று தெரிந்து அவளைப் பாதுகாப்பதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துவாள்’ என்பார்.

திருக்குறளும் பலாப்பழமும்

திருக்குறள் விளக்கச் சொற்பொழிவினை கந்தக் கோட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நிகழ்த்திவந்திருக்கிறார். திருக்குறளில் இவர் காட்டும் பொருள் புதிது. சுவை புதிது, பார்வையும் புதிது. ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்’ (தெரிந்து தெளிதல்: 503) இக்குறளில் வரும் மிகை என்பது அதிகம் என்பதைக் குறிக்காது. பலாப்பழத்தில் தோலும் சக்கையும்தான் அதிகம் சுளைகளோ குறைவு. ஆகவே மிகையை நாடமுடியுமா? மிகை என்றால் நன்மை என்ற பொருளும் உண்டு. இக்குறளில் ‘நன்மையைத் தேர்க’ என்றால் சரியாகப் பொருள்படும்’ என்பார் சுவாமிகள்.

கந்தகோட்டத்தில் சுவாமிகள் நிகழ்த்திய திருக்கோவையார் சிந்தனைகள், திருமூலர் சிந்தனைகள், சேக்கிழாரின் பெரியபுராணச் சொற்பொழிவுகள்- இவையெல்லாம் சொற்பொழிவுக்கு மறுநாளே ஆங்கில இந்து நாளேட்டில் கடைசிப் பக்கத்தில் தொடர்ந்து 14 ஆண்டுகள் வெளிவந்தன.

காலில் விழலாமா?

சுவாமிகள் சொற்பொழிவாற்றி முடித்தவுடன் வயது வேறுபாடின்றி பலரும் இவர் காலில் விழுந்து வணங்குவார்கள். சுவாமிகளுக்கு அப்போது நடுத்தர வயதுதான். அவ்வாறு வணங்க வேண்டாம் என்று தடுத்தும் பயனில்லை. இதைச் சொல்லி வருந்தினார் சுவாமிகள். பக்கத்திலிருந்த பெரியவர் ‘இதற்காக வருந்த வேண்டாம். இது போன்ற சமயங்களில் சிவசிவா என்று சொல்லுங்கள். அவர்கள் உங்களில் இருக்கும் சிவனை வணங்குவதாக எண்ணிக் கொள்ளுங்கள்!’ என்றார். அன்று முதல் யார் காலில் விழுந்து வணங்கினாலும் சிவசிவா’ என்று சொல்ல ஆரம்பித்தார்.

இறுதிச் செய்தி

சுவாமிகளின் இறுதிக் காலத்தில் கடும் நோய் ஒன்று அவரைப் பற்றியது. எந்த சிகிச்சைக்கும் பலனின்றி நோய் வளர்ந்தது. உத்திரமேரூர் செல்லும் வழியில் உள்ள புக்கத்துறை அருகில் அவர் நிறுவிய அருள்ஞானப் பெருவெளி நிலையத்தில் தம்மை கொண்டு வைக்கக் கூறிவிட்டார். அவரது அணுக்கத் தொண்டராகப் பணிவிடை செய்த சாந்தகுமார் அடிகளாரும் மேலும் பல அன்பர்களும் அவரைச் சூழ்ந்து நின்று மனம் கலங்கினார்.

எங்களுக்கு இறுதி அறிவுரையாக என்ன கூற விரும்புகிறீர்கள் என்று பேராசிரியர் அரங்க இராமலிங்கம் கேட்டபோது கையை உயர்த்தி ‘இயல்பாக இரு’ என்றார். அவ்வளவில் அவர் உயிர் அமைதியாகப் பிரிந்தது.

(இயல்பில் மலர்வோம்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com


நம்பிக்கைHopeசுவாமிகள்தேமொழியார் சுவாமிகள்மனிதன்கல்கனிமுனிவர்காதலின் வாசனைதிருக்குறள்பலாப்பழம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author