

வ. ரங்காசாரி
கேரளத்தின் பாரதப் புழை (பொன்னானி) ஆற்றங்கரையில் திருநாவாய் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளுக்கும் ஆலயம் உள்ள ஊர் இது.
கும்பகோணம் போல் இந்த ஊரிலும் 12 ஆண்டுகளுக்கொரு முறை ‘மகாமகம்' நடைபெறும். இவ்வூரையடுத்த மேல்பத்தூரில் சம்ஸ்கிருதமும் வானவியலும் நன்கறிந்த மாத்ரு தத் பட்டத்ரி வாழ்ந்துவந்தார். அவருடைய இரண்டாவது மகனாகத் தோன்றியவர் நாராயண பட்டத்ரி. நாராயணர் தந்தையையே முதல் ஆசிரியராகக் கொண்டார்.
பிறகு மாதவன் நம்பூதிரியிடம் ரிக் வேதமும் கணக்கியலும் பயின்றார். நாராயணனின் அண்ணன் தாமோதரன் தர்க்க சாஸ்திரத்தில் விற்பன்னர். அண்ணனிடமே தர்க்கமும் பயின்றார். பிறகு அச்சுத பிஷாரடி என்பவரிடம் வியாகரணம் (இலக்கணம்) பயின்றார்.
நாராயண பட்டத்ரிக்கு கவிபாடும் ஆற்றலும் இருந்தது. இதை மற்றவர்கள் அறியாதிருந்தனர். ஒரு நாள் பிஷாரடி அவரிடம் ‘உனக்கு இலக்கண வேற்றுமைகள் தெரியுமா?’ என்று கேட்டார். அழகான சமஸ்கிருத கவிதையால் வேற்றுமையை விவரித்தார் நாராயணர். அவருடைய திறமை கண்டு வியந்த பிஷாரடி, தனது சகோதரி மகளை அவருக்கு மணம் செய்வித்தார்.
திருமணமானதும் சுகபோகங்களில் மூழ்கினார் நாராயணர். தனது குலத்துக்குரிய ஆச்சாரங்களிலிருந்தும் விலகினார். ஒரு நாள் தூங்கி எழுந்து நீராடாமலேயே பிஷாரடியிடம் பாடம் கேட்கச் சென்றார். அவரது முகத்தைப் பார்த்ததுமே மனம் நொந்த பிஷாரடி, சிற்றின்பத்தில் மூழ்கினால் முன்னுக்கு வரமுடியாது என்று போதித்தார்.
தவறை உணர்ந்த நாராயணர், வருந்தி, நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும் என்று பணிந்தார். பிறகு குருவின் ஆசியைப் பெற்று கல்வியில் கவனம் செலுத்தி சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.
இந்த நிலையில் பிஷாரடியை வாதநோய் கடுமையாகத் தாக்கியது. செயலற்று விழுந்தார் பிஷாரடி. தனக்கு கல்வி கற்றுத்தந்த குருவுக்கு உதவுவது தனது கடமை என்று முடிவு செய்த நாராயணர் எந்த வழியில் உதவுவது என்று புரியாமல் தவித்தார். மருத்துவம், சோதிடம் இரண்டிலும் வல்லவரான பிஷாரடி மருத்துவ முறைகளைக் கையாண்டார்.
நோய் குறையவே இல்லை. பிறகு சோதிடப்படி உலோகத்தில் தன்னைப் போலவே சிலை செய்து, தன்னுடைய நோயை அதற்குள் செலுத்தினார். அந்தச் சிலையை யாராவது தானம் வாங்கிக் கொண்டால்தான் நோய் நீங்கும், அதே வேளை அதைப் பெறுகிறவரும் உரிய தகுதிகள் உள்ளவராக இருந்தால் நல்லது என்று நினைத்தார்.
அவருடைய உள்ளத்தைக் குறிப்பால் உணர்ந்த நாராயண பட்டத்ரி அதைத் தானமாகப் பெற்றார். பெற்றவுடன் பிஷாரடியின் நோய் முற்றிலும் தீர்ந்தது, நாராயண பட்டத்ரி வாதத்தில் வீழ்ந்தார். கை, கால்கள் செயல்படவில்லை. இருபத்தாறு வயதில் பட்டத்ரிக்கு தன்னால் இப்படியாகிவிட்டதே என்று பிஷாரடியும் மனம் வருந்தினார். தானம் பெறுகிறவர்கள் நோயுற்றவர்களுக்கு உதவுவதால் அவர்களுக்குப் புண்ணியமே கிடைக்கும். தன் மாணவருக்கு மட்டும் ஏன் இப்படியானது என்று பிஷாரடி வியப்புற்றார்.
நாராயண பட்டத்ரியோ மனம் தெளிந்தார். தனக்கு குருவாகவும் வழிதவறியபோது வழிகாட்டியாகவும் இருந்தவருக்கு உதவியதற்காக இது வரவில்லை, இது இறைவனின் திருவிளையாடலே என்று முடிவுசெய்தார். குருவாயூரில் உள்ள கண்ணனின் திருவருளால் நோய் நீங்கும் என்று நம்பினார்.
ஒரு நாளைக்கு பத்து பாடல்கள் வீதம் அவர் மீது நூறு நாள்களுக்கு பாடினார். நாராயணரைக் குறித்துப் பாடியதால் இது ‘நாராயணீயம்' என்று பெயர் பெற்றது. கடைசிப் பாடலைப் பாடி முடித்ததும் நாராயணர் அவர் முன் தோன்றினார். நோய் முற்றிலும் நீங்கியது. நமக்கும் நல்ல இலக்கியம் கிடைத்தது.
சில நாள்கள் பத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதால் மொத்தம் 1,034 சேர்ந்தது. இப்பாடல்கள் முழுக்க பாகவதத்தின் சுருக்கம். இதைப் பாடும்போது உடல்நோய், மனநோய் அனைத்தும் நீங்கி தெய்வத்திருவருள் கிட்டும். இதைத் தனியாகத்தான் பாட வேண்டும் என்றில்லை, குழுவாகவும் பாடலாம். இந்த வரலாற்றை இனிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார் செல்லப்பா யக்ஞஸ்வாமி. சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட மூல நூல் நானூறு ஆண்டுகளாகப் பாராயணம் செய்யப்படுகிறது.
கண்ணனின் மகிமையில் தொடங்கி அஷ்டாங்க யோகம், விராட புருஷன் தோன்றல், பிரளயமும் படைப்பும், வராக அவதாரம், ஹிரண்ய வதம், கபில கீதை, நர-நாராயணியர் கதை, துருவன் சரிதம், பிருது சரிதம், ரிஷபர், அஜாமிளர், சித்ரகேது ஆகியோரின் கதை, பிரகலாதன் சரித்திரம், நரசிம்மாவதாரம், கஜேந்திர மோட்சம், மோகினி அவதாரம், வாமன அவதாரம், ஸ்ரீராமர் பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரங்கள் என்று 100 அத்தியாயங்களுக்கு நீள்கிறது இந் நூல். இறுதியில் பரப்ரம்ம தத்துவம், வேதஸ்வரூபம் என்று முடிகிறது.
| நூல்வெளி: ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி, உரை |