

எஸ்ஆர். நஃப்பீஸ் கான்
பொ.ஆ. (கி.பி. 631-ல், அபூபக்ர் தலை மையில் 300 இஸ்லாமியர்களை ஹஜ் பயணத்துக்கு இறைத்தூதர் அனுப்பிவைத்தார். இந்தக் காரணத்தால், இஸ்லாமியர்களின் முதல் ‘அமிர் உல் ஹஜ்’ (புனிதப் பயணத்தின் தலைவர்) என்று அபூபக்ர் அழைக்கப்பட்டார்.
புனிதப் பயணத்துக்கான பிரிவு உபசார நிகழ்வுக்குப் பிறகு (‘ஹஜ்ஜதுல் விதா’) 632-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறைத்தூதர் பாதிக்கப்பட்டார். அதனால், அபூபக்ரை இறைவழிபாட்டுக்கான தலைவராக நியமித்தார். தன் தந்தை கருணை நிறைந்த உள்ளம் படைத்தவர், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர் என்பதால், அவரால் இறைவழிபாட்டைத் தலைமையேற்று நடத்த முடியாது என்று நினைத்தார் அபூபக்ரின் மகள் ஆயிஷா.
வழிபாட்டை வழிநடத்துவதற்குச் சரியான நபர் அபூபக்ர்தான் என்று இறைத்தூதர் உறுதியாக இருந்தார். அதனால், இறைத்தூதரின் வாழ்நாளிலேயே இஸ்லாமில் உயரிய பணி அபூபக்ருக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்து சிறிது காலத்தில் இறைத்தூதர் காலமானார். அனைவரும் கடுந்துயரத்தில் ஆழ்ந்தனர்.
‘இறைத்தூதர் காலமாகிவிட்டார் என்று சொல்பவர்களைக் கொன்றுவிடுவேன்’ என்று சொல்லும் அளவுக்கு உமர் பெருந்துயரத்தில் ஆட்பட்டிருந்தார். இந்தக் இக்கட்டான சூழ்நிலையில், அபூபக்ர் தன் சொல்வன்மையால் மக்களை அமைதிபடுத்தினார். “நான் சொல்வதைக் கேளுங்கள், மக்களே.
இறைத்தூதர் உயிருடன் இருக்கிறார், அவர் என்றென்றும் வாழ்வார் என்பது அல்லாவை வழிபடுபவர்கள் அனைவருக்கும் தெரியும்,” என்று சொன்னார் அபூபக்ர். திருக்குர்ஆனின் வரிகள் சிலவற்றை அவர் மேற்கோள் காட்டிப் பேசினார். இது மக்களிடம் அமைதியை ஏற்படுத்தியது.
அந்தச் சூழ்நிலையில், புதிய தலைவரை உடனடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அன்சார்கள் (மதினாவின் மக்கள்), முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து மதினாவுக்குக் குடிபெயர்ந்தவர்கள்) ஆகிய இருவர் மத்தியிலும் யார் கலீஃபாவாக வேண்டும் என்ற விவாதங்கள் உருவாயின. சூழ்நிலை தீவிரமடைவதற்கு முன்னர், உமர், அபூ உபைதாவும் அபூபக்ரிடம் பேசினார்கள், ‘ ஓ, சித்தீக், இஸ்லாமியர்களில் நீங்கள் சிறந்தவர். குகையில், இருந்த ‘இரண்டாம் நபர் நீங்கள்’ (9:40).
நீங்கள் ‘அமிர் உல் ஹஜ்’ஜாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். இறைத்தூதர் உடல்நலக் குறைவோடு இருந்தபோது, உங்களைத் தான் வழிப்பாட்டைத் தலைமையேற்று நடத்தச்சொன்னார். இறைத்தூதரின் தோழர்களில் நீங்கள்தான் அவர் மனத்துக்கு நெருக்கமான தோழர். நீங்கள்தான் எங்களை வழிநடத்த வேண்டும்!’
உமர், அபூ உபைதாவின் ஆலோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். அபூபக்ர், தனக்கு ஆதரவளிக்கும்படி மக்களிடம் பேசினார், “அல்லா, இறைத்தூதருக்கு நான் கீழ்படிந்து நடக்கும்வரை நீங்கள் நான் சொல்வதைக் கேளுங்கள். ஒருவேளை, அல்லாவுக்கும், இறைத்தூதருக்கும் நான் கீழ்படிந்து நடக்கவில்லை என்றால் நான் சொல்வதை நீங்கள் கேட்க தேவையில்லை.”
- தொடரும்
தமிழில்: கனி
(நன்றி: குட்வர்ட் பதிப்பகம்)