உட்பொருள் அறிவோம் 48: துன்ப மண்டலத்திலிருந்து விடுதலை

உட்பொருள் அறிவோம் 48: துன்ப மண்டலத்திலிருந்து விடுதலை
Updated on
2 min read

சிந்துகுமாரன்

பிரபஞ்சம் (Cosmos), அகிலம் (Universe) என்று நாம் சொல்லும்போது நமது கல்வி நம் மனத்தில் ஏற்படுத்தியுள்ள பிம்பம், வானவெளி, தாரகைகள், நட்சத்திர மண்டலங்கள் (Constellations), நட்சத்திரக் கூட்டங்கள் (Galaxies), எல்லையற்ற நீள்வெளி, இவையெல்லாம்தான். அகிலம் என்பது இவைமட்டும்தானா? பிரபஞ்சம் வெறும் பருப்பொருளும் சக்தியும்தானா? பௌதிகப் பரிமாணம் மட்டும்தான் பிரபஞ்சமா? அல்லது வேறு பரிமாணங்கள் இருக்கின்றனவா?

நம் பௌதிக உடல் பௌதிகப் பிரபஞ்சத்தின் அங்கம். நமக்கு மனம், ‘நான்’ என்ற உயிருணர்வு இருக்கிறது. அதுபோல் பிரபஞ்சத்துக்கு மனம் இருக்கிறதா? ‘நான்’ உணர்வு இருக்கிறதா? பிரபஞ்சத்துக்குத் தான் இருப்பது தெரியுமா என்பதுதான் கேள்வி.

அறிவியல் பிரபஞ்சத்தின் பௌதிகப் பரிமாணத்தை மட்டும்தான் ஆராய்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், பிரபஞ்சத்துக்கு நாம் இன்னும் அறியாத பல்வேறு பரிமாணங்கள் இருக்கின்றன. பிரபஞ்சத்துக்கு மனம் இருக்கிறது. அதற்கும் ‘நான்’ உணர்வு இருக்கிறது. நம் மனம் என்று நாம் நினைக்கும் இயக்கம் பிரபஞ்சப் பெருமனத்தின் அங்கம்தான்.

சொல்லப்போனால், பிரபஞ்சத்தின் பேரியக்கமாக நாம் பேராச்சரியத்துடன் பார்க்கும் இயற்கை என்பதே அந்தப் பெருமனத்தின் இயக்கத்தைத்தான். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் என்பவர், ‘நவீன அறிவியலின் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, இந்தப் பிரபஞ்சம் ஒரு பெருமனத்தில் இருக்கும் ஒரு மாபெரும் எண்ணமாகத் தெரிகிறது,’ என்று சொல்லியிருக்கிறார்.

பிரபஞ்சத்துக்குத் தான் இருப்பது தெரியுமா என்ற கேள்விக்கு நேரடியான விடை சொல்வது சுலபமில்லை. பிரபஞ்சத்துக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. சிருஷ்டியின் எல்லைகளுக்குள் அடங்கும் பிரபஞ்சம். இது காலவெளிப் பரிமாணத்துக்குள் செயல்படுவது. மாற்றம் இதன் அடிப்படை இயக்கம். இந்தக் கோணத்தில் பார்த்தால், பிரபஞ்சம், தான் இருப்பதைத் தெரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லலாம்.

மனிதன் தோன்றும் வரையில் பிரபஞ்சத்துக்குத் தன்னைத் தெரியாது என்று கொள்ளலாம். மனிதப் பிரக்ஞையின் வழியாகத்தான் முதன்முதலில் பிரபஞ்சம் தான் இருப்பதைத் தெரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது. இந்தப் பரிமாணத்தில் பிரபஞ்சம், தான் இருப்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள இன்னும் மிக நீண்ட காலம் ஆகும். இந்தத் தெரிந்துகொள்ளுதல்தான் பரிணாமம்.

முழுமையாக அறிந்துகொள்ளும்

இன்னும் மனிதனே தன்னை முழுமையாக அறிந்துகொள்ளவில்லை. மனிதன் தன்னை முழுமையாகத் தெரிந்துகொள்ளும் போதுதான் பிரபஞ்சம் தன்னை முழுமையாக அறிந்துகொள்ளும். அதாவது மனிதன் தன்னைப் பிரபஞ்சமென அறிந்துகொள்வான். இந்தச் செயல்முறை தொடங்கியாகிவிட்டது.

ஞானிகள் என்று நாம் அழைக்கும் மனிதர்கள் இந்த உண்மையை முழுமையாக அறிந்துகொண்டவர்கள். வேதகாலத்து ரிஷிகள், புத்தர், இயேசு, நபிகள் நாயகம் போன்றவர்களை இவ்வாறு நாம் புரிந்துகொள்ளலாம். தற்காலத்தில் ரமண மகரிஷி, நிசர்கதத்த மஹராஜ், ஜே. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் இந்த நிலையை அடைந்தவர்கள்.

இன்னும் வெளியே பெயர் தெரியாத பலர் இருக்கக் கூடும். தானே பிரபஞ்சம் என்று முழுமையாகத் தெரிந்து கொண்டவர்கள் இவர்கள். அதாவது, இவர்கள் பேசும்போது பிரபஞ்சத்தின் ஆன்மாதான் பேசுகிறது.

இதன் இன்னொரு பரிமாணம் சிருஷ்டியின் எல்லையைக் கடந்த சுத்தப் பிரக்ஞை. சிருஷ்டிக்கே ஆதாரமாக உள்ளது இது. காலத்துக்கு அப்பாற்பட்டது. இதுதான் பிரபஞ்சத்தின் அடிப்படையான பரிமாணம்; மற்ற எல்லாப் பரிமாணங்களையும் கடந்தது; உள்ளடக்கம் ஏதும் இல்லாத எல்லையற்ற பரவெளி; எங்கும் எப்போதும் உள்ளது. சிருஷ்டியைப் பொறுத்தவரையில் ‘இருந்தது, இருப்பது, இருக்கப் போவது’ என்ற மூன்று காலங்களுக்கு உட்பட்டது அது.

ஆனால் காலப் பரிமாணத்தைக் கடந்த சுத்தப்பிரக்ஞை ‘உள்ளது’ என்னும் தன்மை கொண்டது. சிருஷ்டி உருக்கொண்டு, இருந்து, அழியும் செயல்முறையைத்தான் பிரளயம் என்று சொல்லியிருக்கிறார்கள். எது உள்ளதோ அதற்கு இறந்தகாலம்-நிகழ்காலம்-எதிர்காலம் இல்லை. தோற்றமும் அழிவும் இல்லை!

உலக அனுபவம் துக்கம்

சிருஷ்டி பல நுட்பமான பரிமாணங்களும் தளங்களும் கொண்டது. இவற்றைப் பற்றிப் புராணக்கதைகள் பல குறிப்புகள் தந்திருக்கின்றன. உயர்தளத்திலிருக்கும் ஒரு ஜீவன், அந்தத் தளத்தின் விதிகளை மீறும்போது கீழே பூலோகத்தில் பிறந்து, அனுபவம் கொண்டாக வேண்டும் என்று பல கதைகள் சொல்கின்றன.

கர்மவினை, பிறப்பு, இறப்பு குறித்த பல கதைகள் இந்த அடிப்படையிலேயே அமைந்துள்ளன. அப்படியென்றால், கீழ்த்தளங்களில் நாம் கற்கும் விஷயம் நம்மை மேல்தளங்களுக்குக் கொண்டு செல்லும் என்று கொள்ளலாம் அல்லவா? இந்தக் கருத்துகளின் அடிப்படையில், உலக வாழ்க்கையின் அனுபவங்களும், அதன் ஆழமான துன்பங்களும் எவ்வாறு உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்குச் சாதனமாகச் செயல்படுகின்றன என்று பார்க்கலாம்.

புத்தர் ஒளிகொண்ட(Illumination) பிறகு, அதாவது சித்தார்த்தன் என்னும் இளவரசன் புத்தனான பிறகு, தன் முதல் உபதேசமாக நான்கு மேன்மையான உண்மைகளை எடுத்துரைத்தார். அவற்றில் முதலாவது உண்மை, ‘உலகம் துக்கம் நிறைந்தது,’ என்பதுதான். பொதுவாக இதைப் படிக்கும்போது பெரும்பாலானோருக்கு, ‘இது தெரிந்ததுதானே” என்று தோன்றும். எளிமையான சொற்களில் சொல்லப்பட்டிருக்கும் இந்த உண்மை மிகவும் ஆழமானது. ‘வாழ்க்கையில் துக்கமான சம்பவங்கள் நிறைந்திருக்கின்றன,’ என்றுதான் நாம் இதைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், புத்தபிரான் சொல்வது, ‘உலக அனுபவம் என்பதே துக்கம்,’ என்பதைத்தான்.

(துக்க விசாரணை தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in