ஜென் துளிகள்: உயிர்பெற்ற ஓவியம்

ஜென் துளிகள்: உயிர்பெற்ற ஓவியம்
Updated on
1 min read

ஒரு புகழ்பெற்ற ஓவியரிடம் பயிற்சி பெறுவதற்காக இளம் ஓவியர் ஒருவர் வந்தார். அந்த இளம் ஓவியரிடம் இயல்பாக இருந்த ஓவியத்திறனைப் பார்த்த மூத்த ஓவியருக்கு அந்த இளைஞர் மீது பொறாமை வந்தது. “இல்லை, இதை இப்படி வரையக் கூடாது!” என்று அவர் கத்துவார். “நீ ஓவியம் வரைவதைவிட வீடுகளுக்கு வெள்ளையடிப்பதைத்தான் சிறப்பாகச் செய்வாய்!” என்று வகுப்பில் அனைவர் முன்னிலையிலும் இளைஞரை ஓவிய ஆசிரியர் கடிந்துகொள்வார்.

இளைஞரின் தன்னம்பிக்கை குறைய ஆரம்பித்தது. என்னதான் முயன்று ஓவியம் வரைந்தாலும், ஓவிய ஆசிரியர் அதில் குற்றம் கண்டுபிடித்து, மற்ற மாணவர்கள் முன் இளைஞரை அவமானப்படுத்துவதே அவர் நோக்கமாக இருந்தது. ஒருநாள் மாணவர்கள் அனைவரையும் தங்கமீனை வரையமாறு சொன்னார் ஆசிரியர்.

அந்த இளைஞர் தன் கண்களை மூடி, குளத்துக்குள் இருந்த கொழு கொழு தங்கமீனைத் தன் கண்முன்னே வருமாறு அழைத்தார். அதைப் பார்த்து அப்படியே வரைந்தார் இளைஞர். “இல்லை, இது இல்லை, நான் வரையச் சொன்னது” என்று கத்திய ஆசிரியர், இளைஞர் வரைந்த ஓவியத்தைக் குளத்தில் தூக்கிப்போட்டார். யாருமே எதிர்பார்க்காத வகையில், ஓவியத்தில் வரைந்திருந்த மீனுக்கு உயிர்வந்து துள்ளி நீந்தத் தொடங்கியது.

பட்டாம்பூச்சியாகும் கனவு

தாவோ தத்துவ குரு சுவாங் ட்சு, தான் பட்டாம்பூச்சியாக மாறி அங்கேயும் இங்கேயும் ஆனந்தமாகப் பறந்துகொண்டிருப்பதாகக் கனவுகண்டார். அவருடைய கனவில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாகவே அவர் இருந்தார். கனவுகாணும் தனது அடையாளத்தைப் பற்றி அவருக்கு உணர்வே இல்லை. திடீரென்று விழிப்புவந்து விழித்துப்பார்த்த சுவாங்கு ட்சு, படுத்திருக்கும் தன்னை உணர்ந்தார். ஆனால், அவர் இப்படி நினைத்தார், “ நான், இதற்குமுன் பட்டாம்பூச்சியைக் கனவுகண்ட ஒரு மனிதனா. அல்லது பட்டாம்பூச்சியாக இருக்கும் நான், மனிதனாக இருப்பதைப் பற்றி கனவு காண்கிறேனா?”

- கனி

“மீன்வலையின் பயன்பாடு என்பது மீனைப்பிடிப்பதாகும். மீன் பிடிப்பட்டவுடன், வலை மறக்கப்பட்டுவிடும்.
முயல்பொறியின் பயன்பாடு என்பது முயல்களைப் பிடிப்பதாகும். முயல்கள் பிடிபட்டவுடன் முயல்பொறி மறக்கப்பட்டுவிடும்.
சொற்களின் பயன்பாடு என்பது கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதாகும். கருத்துகள் பிடிபட்டவுடன், சொற்கள் மறக்கப்பட்டுவிடும். சொற்களை மறந்த மனிதன் எங்கே இருக்கிறான்? அவனிடம்தான் நான் பேசவிரும்புகிறேன்.”

- சுவாங் ட்சு, சீனத் தத்துவ அறிஞர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in