வள்ளலார் வாழ்ந்த சென்னை இல்லம்

வள்ளலார் வாழ்ந்த சென்னை இல்லம்
Updated on
2 min read

பனையபுரம் அதியமான்

தைப்பூசம்: பிப்ரவரி 8

முருகப்பெருமானும், சிவபெருமானும் குருவாக வாய்க்கப் பெற்ற அருளாளர். சிவபெருமானே அடியெடுத்துத் தந்து பாடுமாறு பணிக்கப்பட்டவர். திருவருட்பாவின் ஈற்றடியைச் சிவபெருமானே முடித்துத் தந்த பேறு பெற்றவர். திருவொற்றியூர் வடிவுடையம்மன், அண்ணியார் வடிவில் வந்து பசிப்பிணி நீக்கிய பேறுபெற்றவர். ஐந்து திருமுறைகள் எழுதிய இல்லம். திருமணம் முடித்தது, துறவறம் பூண்டது என பல்வேறு நிகழ்வுகள் நடந்த இல்லம் இன்றும் கோயிலாக வணங்கப்பட்டு வருகிறது.

கி.பி. 1823ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதியன்று சிதம்பரத்தை அடுத்த மருதூரில், பிறந்தார் ராமலிங்கம். ஆறு மாதத்தில் தந்தை காலமாக, தாயாரின் சொந்த ஊரான பொன்னேரியை அடுத்த சின்னக்காவணம் வந்தனர்.

பின்பு இவருடைய இரண்டு வயதில் தங்கசாலை அருகேயுள்ள வீராசாமிப்பிள்ளைத் தெருவில் அண்ணனோடு குடியேறினர். அது முதல் 33 ஆண்டுகள் இந்த இல்லத்தி லேயே சுவாமிகளின் வாழ்க்கை பயணித்தது.

நாள்தோறும் கந்தக்கோட்டம் முருகப்பெருமானையும், திருவொற்றியூர் வடிவுடையம்மனை யும் தரிசிப்பது வழக்கமானது. ஒரு சமயம் திருவொற்றியூரில் இருந்து வீடு திரும்ப நேரம் ஆகிவிட்டது. அண்ணியை எழுப்ப விரும்பாத ராமலிங்கம், வெளியில் உள்ள திண்ணையில் பசியோடு உறங்கினார்.

அப்போது அண்ணியின் வடிவில் வந்த வடிவுடையம்மை இவருக்கு உணவு தந்துப் பசியாற்றினார். விடிந்ததும் அண்ணியார் இவரை எழுப்பி இரவு சாப்பிடவில்லையே என்று கேட்க, அண்ணியிடம், “இரவு நீங்கள் தானே சாப்பாடு தந்தீர்கள். சாப்பிட்ட இலைகூட இதோ கீழே இருக்கின்றது” என்று காட்டினார். மற்றொரு சமயம் சிவபெருமான் இவருக்குத் திருநீறு தந்தது, மலர் தந்தது என பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்தன.

அம்மையும் அப்பனும் அமுதூட்டிய அருளாளர்

திருவொற்றியூர் கோயிலில் ஒருமுறை பசி மயக்கத்தோடு மயங்கிவிட, சிவபெருமானே நேரில் வந்து பசிப்பிணி நீக்கினார். இதனை சுவாமிகள் தமது திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீட்டில்தான் சுவாமிகள் திருவருட்பாவின் ஐந்து திருமுறைகளை எழுதி முடித்தார். ஒரு சமயம் இவர் அறையில், இருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் திருத்தணி முருகன் காட்சி தந்து ஆட்கொண்டார்.

குடும்ப வாழ்க்கை, துறவறம்

இந்த இல்லத்தில் இருந்தபோது இவருடைய 27வது வயதில் தன் தாய், அண்ணன், அண்ணியார் வலியுறுத்தியதால், தனக்கோட்டி என்பவரைத் திருமணம் புரிந்தார். கி.பி. 1858இல் அவருடைய 35ஆவது வயதில் தாயும், தாரமும் காலமானார்கள்.

அதே ஆண்டில் தான் அண்ணன் பரசுராமன் விருப்பப்படி, சிதம்பரம் சென்றார். அதன்பின் சமரச சன்மார்க்கத்தினை வலியுறுத்தினார். குழந்தைப் பருவம், இளமைப் பருவம், வாலிபப் பருவம், குடும்பத் தலைவர், துறவி என பல்வேறு நிலைகளையும் கண்ட இடமாக விளங்கிய இல்லம், சென்னை தங்க சாலையில் அமைந்துள்ளது.

இந்த வீட்டை வள்ளலாரின் காலத்துக்குப் பின்பு, நான்காவது நபராக சென்னை எத்திராஜுலு நாயுடு என்பவர் விலைக்கு வாங்கினார். இன்று அவருடைய வாரிசுகளில் ஒருவரான பதி என்பவர் இந்த இல்லத்தைத் திறம்பட நிர்வகித்து வருகிறார்.

இங்கு நாள்தோறும் நண்பகலில் சுமார் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இது தவிர, சுவாமிகளின் அவதார நாளான அக்டோபர் 5 மற்றும் தைப்பூசத் தினத்தன்று சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றுவருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in