

தஞ்சாவூர்க் கவிராயர்
சிறுவன் சுப்பிரமணியனுக்குப் பன்னிரண்டு வயதுகூட நிரம்பவில்லை. அதற்குள் அகத்தைத் தேடி புறப்படுமாறு அழைப்பு வந்துவிட்டது. உற்றார் உறவினர் பற்றறுத்து வடதிசை நோக்கி கால்போன போக்கில் நடந்தவன் சேர்ந்த இடம் பண்டரிபுரம். சற்றுத் தூரத்தில் சந்திரபாகா நதி. அதிலே சலசலக்கும் நீல நீர் அலைகள். இறங்கி நீராடினான். பாண்டுரங்கனைப் பாடி பரவசம் அடைந்தான்.
பண்டரிபுரத்தில் முகாமிட்டிருந்த காஷ்மீரத்துச் சுவாமிகள் என்கிற ஜோதிர்மட பீடாதிபதி சிவரத்னகிரி சுவாமிகள் அவனை ஆட்கொண்டார். அவருக்குப் பிறகு சுப்பிரமணியனுக்கு ஞானானந்தகிரி என்று நாமம் சூட்டி பீடாதிபதியாக்கினார்.
அங்கிருந்து வெளியேறி சில காலம் மட்டும் அங்கிருந்த சுவாமிகள் இமாலயத்தில் தனிமைத் தவத்தில் ஈடுபடலானார். இமயமலையில் இருந்த ரிஷிகள் காயகல்ப பிரயோகம் செய்தனர்.
காஷ்மீரத்தில் 25 ஆண்டுகள், இலங்கை கதிர்காமத்தில் 60 ஆண்டுகள், கங்கோத்ரி இமய மலைச்சாரல் குகைகளில் 30 ஆண்டுகள் தவம். திபெத், பூடான், பர்மா ஆகிய இடங்களின் புத்த மடாலங்களில் பல ஆண்டுகள் என பாத யாத்திரையாகவே இமையம் முதல் குமரிவரை இவரது தேடல் தொடர்ந்தது.
பாரதியாரின் குள்ளச்சாமி
வடக்கில் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் புதுவையில் அரவிந்தர், வடலூரில் வள்ளலார் ஆகியோரைச் சந்தித்து உரையாடியிருப்பதாகக் கூறப்படுகிறது. ரமண மகரிஷி, சுத்தானந்த பாரதியார் என்று இவர் சந்தித்த மகான்களும் ஆளுமைகளும் பலர். பாரதியார் குறிப்பிடும் குள்ளச்சாமி இவராக இருத்தல் கூடும். இவரது ஆயுட்காலப் பரப்பு என்பது பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்திருந்த மகான்களின் சந்திப்பை வைத்து கணக்கிடும்போது பிரமிக்க வைக்கிறது. இந்தப் பிரமிப்பே வேண்டாம் என்கிறார் ஸ்வாமிகள்.
“இறந்த காலத்தைப் பற்றி எண்ணா தீர்கள். சடப்பொருளின் வயது எல்லையை அறிய அவாகொள்தல் பேதமை. இதை அறிந்துகொள்வதில் பயனில் காலம் கழிக்காதீர்கள்” என்று சொல்கிறார் ஸ்வாமிகள். ஆனால், இவர் வாழ்க்கை வரலாறு குறித்து எவ்விதத் தடயமும் கிடைக்கவில்லை என்றே கி.வா.ஜ. கூறுகிறார்.
இட்டிலிப்பிரியனும் தோசைப்பிரியனும்
இட்டிலிப்பிரியனும் தோசைப் பிரியனும் அடித்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறீர்களா? இட்டிலிப் பிரியன் இட்லிதான் சுவையானது என்பான்.தோசைப்பிரியன் தோசைதான் சுவையானது என்பான். இரண்டு பேரும் அடித்துக் கொளவதைப் பார்த்து பட்சண வியாபாரி சிரிப்பான். இரண்டுக்குமே மாவுதான் மூலப்பொருள். அதைப் போலவே மதங்கள் எல்லாவற்றுக்கும் மூலப்பொருள் இறைவன்தான். மதச் சண்டைகளைப் பார்த்து கடவுள் சிரிக்கிறார்.
சாமான்கள் வைக்கும் ஒரு பெட்டியில் ஒரு காலணாவைப் போட்டு விடுகிறோம். அந்தப் பெட்டியில் உள்ள சாமான்களை அகற்றி வெளியே வைத்தால் அடியில் கிடக்கும் காலணா நமக்கு எப்படிக் கிடைக்கிறதோ அதே போல அகங்காரம், காமம், குரோதம் போன்றவற்றை மனத்திலிருந்து வெளியே போட்டுவிட்டால் பரம்பொருள் கிடைக்கும்.
சத்குரு சீடனின் தகுதியைச் சோதித்து அறிந்து, ஏழாம் அறிவான அறிவை அறியும் அறிவைத் தருவார். ஒரு குளவி முதலில் பச்சைப் புழுவைக் கொட்டிப் பார்க்கும். தலையைத் தூக்கினால் அதுவே தன்மயமாகும் புழு என்று தீர்மானித்து அதைத் தன் கூட்டில் வைத்து துவாரத்தை மூடிவிடும். கொட்டும் போது தலையைத் தூக்காத இறந்த புழுக்களை மற்றதற்கு ஆகாரமாக வைத்துவிடும். தலையைத் தூக்கிய புழு குளவியின் ரீங்காரத்திலேயே அசையாது நிலைத்து, அதே ஸ்மரணையில் இருந்து குளவி கொட்டிய வலியை அறியாமல் சிறிது காலம் கழித்து, அந்தப் புழு தன்மயமான குளவியாக மாறுகிறது. சத்குருவின் ஞானத்தோடு சீடன் இரண்டறக் கலப்பதும் இப்படித்தான்.
மூட்டையா, மகானா?
ஆற்றின் மறுகரையில் ஒரு மகான் இருந்தார். பக்தன் அவரை தரிசனம் செய்யச் சென்றான். வெள்ளம் அதிகமாக இருந்தது. அச்சமயம் ஒரு பரிசல்காரன் வந்தான். இருவருக்கும் நடந்த உரையாடல்: “என் மூட்டைகளில் படுக்கை, உணவு, புஸ்தகம் எல்லாம் இருக்கின்றன. இவற்றை விட்டு வரமுடியாது. எப்படியாவது மகானிடம் என்னைக் கூட்டிப்போ”.
“நான் உன்னை ஏற்றிக்கொள் கிறேன். உன் கையில் உள்ள மூட்டை முடிச்சுகளை எறிந்துவிட்டு தனி ஆளாக வந்தால் ஏற்றிப் போகிறேன்.” எனப் பரிசல் ஓட்டி சொன்னான்.
மூட்டை வேண்டுமானால் இங்கேயே இருந்துகொள். ஸ்வாமி தரிசனம் வேண்டுமா? தனியே வா மூட்டையா, ஸ்வாமியா முடிவு செய்துகொள்.
சட்டையைக் கழற்ற வேண்டியதுதான்
இன்று பெண்ணை ஆற்றங்கரையில் மரங்கள் அடர்ந்த தெய்விகச் சூழ்நிலையில் உள்ளது ஞானானந்த தபோவனம். அங்கு கவிந்திருக்கும் அமைதி பிரபஞ்ச வெளியிலிருந்து கீழிறங்கி மனசை மூழ்கடிக்கிறது. சுவாமிகள் இங்கிருந்தபடிதான் மறைந்தார்.
சுவாமிகள் சுகவீனமுற்ற வேளையில் குளிக்க ஆயத்தமானார். சுவாமிகள் அணிந்திருந்த அவருடைய சீடர் கம்பளிச் சட்டையைக் கழற்றி விடுகிறேன் என்றார்.
“ஆமாம் சட்டையைக் கழற்றிவிட வேண்டியதுதான்” என்றார் ஸ்வாமிகள் திட்டவட்டமாக.
குளிக்க உட்கார்ந்தார். அப்படியே உட்கார்ந்த நிலையில் உயிரை நீத்தார்.
ஆம், சொன்னபடியே சட்டையைக் கழற்றிவிட்டார் சுவாமிகள்.
(தேடல் தொடரும்...)
தஞ்சாவூர்க் கவிராயர்.
தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com