

ஒரு மடாலயத்தில், குருவும் மாணவர்களும் மாலை நேர தியானத்தைத் தொடங்கும்போதெல்லாம், அங்கிருந்த பூனை அவர்களுக்குள் புகுந்து, அவர்களைத் தியானத்தில் நிலைக்க முடியாமல் திசைதிருப்பியது.
அதனால், மாலைநேரத்தில் பூனையைக் கட்டிப்போடும்படி அந்தக் குரு உத்தரவிட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த குரு இறந்துபோனார். அப்போதும் அந்த மடாலயத்தில் மாலை நேர தியானத்தின்போது பூனையைக் கட்டிப்போடும் வழக்கம் தொடர்ந்தது. இன்னும் சில ஆண்டுகளில் அந்தப் பூனையும் இறந்துபோனது.
அதற்குப் பிறகு, வேறொரு பூனையைக் கொண்டுவந்து மடாலயத்தில் கட்டிப்போட்டனர். நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தியானத்தின்போது பூனையைக் கட்டிப்போடும் இந்த வழக்கத்தின் பின்னணியில் உள்ள முக்கியத்துவத்தைப் பற்றி பல ஜென் குருக்கள் ஆய்வுப்பூர்வமான கட்டுரைகளை எழுதினர்.
இயற்கையின் சமநிலை
ஒரு புத்திசாலித் தவளை, குட்டித் தவளைகளுக்கு இயற்கையின் சமநிலையைப் பற்றி விளக்கிக்கொண்டிருந்தது. “அந்த ஈ, குட்டிப் பூச்சி ஒன்றைச் சாப்பிடுவதைப் பார்க்கிறீர்கள் அல்லவா? அந்த ஈயை நான் சாப்பிடுகிறேன். இது எல்லாமே இயற்கையின் பெருந்திட்டங்களின் ஒரு பகுதியாகும்,” என்றது தவளை. “நாம் வாழ்வதற்காக மற்றவர்களைக் கொல்வது பாவமில்லையா?” என்று கேட்டது ஒரு குட்டித் தவளை. “அது எதைப் பொருத்தது என்றால்…” இந்த வாக்கியத்தை தவளை முடிப்பதற்கு, ஒரு பாம்பு லபக்கென்று அதை விழுங்கியது.
“எதைப் பொருத்தது” என்று குட்டித்தவளைகள் கத்தின. “அது நீங்கள் விஷயங்களை வெளியிலிருந்து பார்க்கிறீர்களா, அல்லது உள்ளிருந்து பார்க்கிறீர்களா என்பதைப் பொறுத்தது,” என்று பாம்பின் வயிற்றிலிருந்து பதில் வந்தது.
- கனி