Published : 30 Jan 2020 11:53 AM
Last Updated : 30 Jan 2020 11:53 AM

அகத்தைத் தேடி 17: நூல் அறுந்து போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

தஞ்சாவூர்க்கவிராயர்

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் நாகுல வெல்லடூர் என்ற குக்கிராமம். மதிய வேளை கோடைவெயில் கொளுத்துகிறது. புழுதி பறக்கும் தெருவில் புரண்டோடி வருகிறான் ஒரு இளைஞன். திண்ணையில் உட்கார்ந்தபடி கை கொட்டிச் சிரிக்கிறார்கள் தெருவாசிகள்.

“இதோ பைத்தியக்கார வெங்கையா! வெங்கையா இங்கே வா”

ஓடி வந்து நிற்கிறான்.

காட்டிலே தனியாக என்ன பண்ணுகிறாய்?

“சாகலியோகம்! மங்கலியோகம்! டுபுக்... டுபுக்..”

வாயைக் கோணிக்கொண்டு சொல்கிறான் வெங்கையா. கூட்டமே கொல்லென்று சிரிக்கிறது.

காலச் சக்கரம் உருள்கிறது. எந்த வெங்கையாவைப் பைத்தியம் என்று ஊர்கூடி பட்டம் சூட்டி சிரித்தார்களோ அதே வெங்கையாவை அதே கிராமத்தார்கள் மலர்தூவி வணங்கி அழைத்துவருகிறார்கள்.

பகவான் அவதூத வெங்கையா! அனுக்கிரகம் வேணும் சுவாமி! என்று ஆராதிக்கிறார்கள்.

சின்னஞ்சிறு வயதிலேயே அவருக்கு ஏகாந்த நாட்டம்; படிப்போ சொற்பம். கொஞ்சமே எழுத்துக்கள் தெரியும். சாதாரண வேலைகளில் அவர் காட்டிய ஈடுபாடு அசாதாரணமானது. விறகுகளை வெட்டி, வண்டியிலேற்றி நெல்லூர் சந்தையில் விற்று வந்துவிடுவார்.

ஒண்டியாளாக சிறுவனாக இருக்கும்போதே வேம்பு, புளி, முருங்கை விதைகளை காணுமிடமெல்லாம் குழிதோண்டி விதைத்துக்கொண்டே போவார். பின்னாளில் அவை பெருமரங்களாய் நின்றன. இருபது வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார் வெங்கையா.

கிழிந்த வேட்டி, கிழிந்த சட்டை, ஷிர்டி சாய்பாபாவின் கப்னீ போன்ற நீண்ட அங்கி, கையில் உறிபோல் கட்டிய கயிற்றில் தொங்கும் மண் கலயம், தடி, தீவட்டி எப்போதும் அவர் கையில் இருக்கும்.

இதயத்தின் ஏக்கம்

இரவு வேளைகளில் குன்றுகளின் உச்சியில் உள்ள தனது குடிசையில் லாந்தர் விளக்கின் வெளிச்சத்துடன் தம்பூரா மீட்டியபடி உட்கார்ந்திருப்பார். லாந்தரில் இருந்து கசியும் மஞ்சள் வெளிச்சம் தம்பூராவின் மீட்டலில் மிதந்துவரும் இதயத்தின் ஏக்கம் இரண்டும் இருட்டில் தெய்விகப் போர்வையை கிராமத்தின் மீது போர்த்தும்.

கோயில், பாழடைந்த மண்டபம், பாடசாலை, வேப்பமரம் இவையே அவரது தங்குமிடம். பக்தர்களின் வீட்டிலும் மாட்டுக் கொட்டில் அல்லது வராந்தாவிலும் இருப்பார்.

இவருக்கு முன்னாலேயே இவர் பெருமையைப் பாடிப் பரவசம் அடையும் பக்தர்களைப் பார்த்து “இவர்கள் இப்போதே மூட்டையை அவிழ்த்து வண்டியில் ஏற்றுகிறார்கள்!. வேண்டாம் என்று சொல்லம்மா” என்பார்.

பனை ஓலையே சுவாமிகள் உட்காரும் ஆசனம். மண் சட்டியே பாத்திரம். கோணிச்சாக்கே படுக்கை. தியானம் செய்யாத பொழுதுகளில் தமக்குத்தாமே இடிக்குரலில் நகைப்பது வழக்கம்.

நந்தவனத்தில் தமது சீடர் ஒருவர் குடலை நிறைய பூக்கள் பறிப்பதைப் பார்த்த வெங்கையா சுவாமிகள் ஒரு பூவே போதும் ஐயா என்றார். அதாவது இறைவனை வழிபட மனமாகிய ஒரு பூவே போதும்.

ஒரு கிராமத்தில் செல்வாக்குள்ள பெரிய மனிதர்கள் சிலர் ஒன்று கூடி ஸ்வாமிகளை தங்கள் கிராமத்துக்கு வருமாறு அழைத்தனர். சுவாமிகள் நடந்துவர ஏதுவாக கால் உறுத்தாதபடி சாலையை அமைத்தனர். நான் வருவதற்கில்லை. வழி எல்லாம் முட்கள் எரிகின்றன என்று மறுத்துவிட்டார். நல்ல மனமே நடப்பதற்கு ஏற்ற பாதை அல்லவா?

மனிதத் தன்மையை இழக்க வேண்டாம்

“மனிதப் பிறவி மிகவும் அரிது. ஆகையால் நான் மீண்டும் மனிதனாகவே பிறக்க ஆசைப் படுகிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்? ” என்று ஒரு பக்தர் கேட்டார்.

“மனிதனாக இறக்க வேண்டும்” என்றார் சுவாமிகள் அமைதியாக.

இறுதிவரை மனிதத் தன்மையை இழந்துவிடாமல் இருப்பது முக்கியம் என்றார்.

சுவாமிகள் மகாசமாதி அடையப் போவதன் அறிகுறிகள் ஒருகட்டத்தில் தென்படலாயின.

அவரது பக்தர் “ஸ்வாமி” எங்களை விட்டுப் போகத்தான் வேண்டுமா என்று அழுதபடிகேட்டார்.

“நூல் அறுந்துபோகாமல் பார்த்துக்கொண்டால், நான் எப்போதும் உன்னுடனே இருப்பேன் ஐயா.” என்று சொல்லி முறுவலித்தார் ஸ்வாமிகள்.

(அகத்தின் தேடல் நீளும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x