

புருஸ் லீயை ஒரு தற்காப்புக் கலைஞராக உலகளவில் பிரபலமான திரை நட்சத்திரமாக நம்மில் பலரும் அறிந்திருப்போம். அவர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றவர். அவருடைய வாழ்க்கையில் முக்கியமான பரிமாணமாக எப்போதும் ஜென் தத்துவம் அமைந்திருந்தது. 1975-ம் ஆண்டு வெளியான அவரது நூல் ‘தி தாவோ ஆஃப் ஜீத் குனே தோ’, அதற்கு சாட்சியாக விளங்குகிறது. ‘ஜீத் குனே தோ’ என்பது புருஸ் லீயின் தற்காப்புக் கலைப் பாணி. அந்தப் பெயரில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தில் தற்காப்புக் கலை உத்திகள், தனிமனித ஆன்மிக வளர்ச்சி இரண்டையும் இணைக்கிறார் அவர். ‘சாகும் கலை’யைப் பற்றி மூன்று முக்கிய கருத்துகளை முன்வைக்கிறார்.
வெற்றி, லட்சியத்தின் இறப்பு
வெற்றி, தோல்வி குறித்துச் சிந்திக்காதீர்கள். கர்வமோ, அதனால் ஏற்பட்ட வலி குறித்தோ சிந்திக்காதீர்கள். சண்டையின் பலனை எதிர்பார்ப்பதுதான் மாபெரும் தவறு. வெற்றியோ, தோல்வியோ முடிவுகுறித்து சிந்திக்க வேண்டாம். இயற்கை அதன் பணியைச் செய்யட்டும். உங்கள் ஆயுதங்கள் சரியான நேரத்தில் பயன்படும்.
உத்திகள், அறிவின் இறப்பு
கற்றுக்கொண்ட திறன்கள், அறிவு ஆகியவற்றை மறக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் எந்தத் தடைகளுமின்றி வெற்றிடத்தில் இயல்பாகப் பயணிக்க முடியும். கற்றல் முக்கியம்தான். ஆனால், அதற்கு அடிமையாக உங்களை அனுமதிக்காதீர்கள். எவ்வளவு அரிய, விரும்பத்தக்க உத்தியாக இருந்தாலும், மனம் அதன்மீது அதீதப்பற்று வைக்கும்போது, அது நோயாக மாறிவிடுகிறது.
கடந்த காலம் எதிர்காலத்தின் இறப்பு
ஆசை என்பது எப்போதும் எதிர்காலத்தைச் சேர்ந்தது. எதிர்காலத்தில் ஏதோவொன்றாக ஆவதற்கான ஆசை செயலற்ற தன்மையைக் கொடுக்கிறது. நாளையைவிட இப்போது, இக்கணம் முக்கியமானது. எல்லா காலமும் இப்போதில்தான் இருக்கிறது. தற்போதைப் புரிந்துகொள்ள காலத்திலிருந்து விடுபடுவது அவசியமாகும். ஏதோவொன்றாக ஆவது என்பது காலத்தை நீட்டிப்பதாகும். அது வலி. ஏதோவொன்றாக ஆவதில் இருத்தல் இல்லை. இருத்தல் எப்போதுமே தற்போதில்தான் இருக் கிறது. இருத்தல்தான் மாற்றத்தின் உயரிய வடிவம்.
- கனி