

தஞ்சாவூர்க்கவிராயர்
‘தெருப்பாடகர்கள் திடீரென வருகிறார்கள். ஆடுகிறார்கள். வந்தது போலவே திடீரென மறைந்தும் விடுகிறார்கள். அவர்கள் வந்தபோதும் அவர்களை யாரும் அறியவில்லை. போகும்போதும் அவர்கள் இன்னாரென்று யாருக்கும் தெரிவதில்லை ’ என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
இன்று நாமெல்லாம் நன்கறிந்த அன்னை சாரதா தேவியார் பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் அறிந்தோர் மிகச்சிலரே. அதுவும் ஆன்மிக நெறியில் குருதேவர், ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு துணைவியாகத் தொண்டு செய்தவர் என்ற அளவிலே மட்டும் அறிந்திருந்தனர்.
உண்மையில் அன்னை ஒருபோதும் தான் யாரென்பதை வெளிக் காட்டிக்கொண்டதே இல்லை. பாரதத்தின் பெருமைவாய்ந்த துறவிகளின் பரம்பரையில் அவரும் ஒருவர். இதை ராமகிருஷ்ண பரமஹம்சரே மெல்ல மெல்லத்தான் உணர்ந்தார். அதனால்தான் அவர் தொடங்கிவைத்த ஆன்மிக இயக்கத்தை, தனது மறைவுக்குப் பின்னர் தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பை சாரதா தேவியிடம் ஒப்படைத்தார். பல்வேறு சமயங்களில் அன்னை சாரதையைக் கடவுளாகவே அவர் வழிபட்டார்.
ரிக் வேதப்பாடல்களைத் தந்த ரிஷிகளில் இருபதுக்கும் மேற்பட்டோர் பெண்கள். அகத்தைத் தேடிப் புறப்பட்ட ஆன்மிகப் பணிகளுக்கு அறிவுரை நல்கி ஆற்றுப் படுத்தியோர் பெண்களே என்று உபநிடதங்கள் கூறுகின்றன.
அறிஞர்கள் வீற்றிருந்த அரச சபையில் பலரும் தயங்கி நின்ற வேளையில் யாஜ்ஞவல்கியரிடம் துணிச்சலுடன் கேள்வி கேட்ட கார்கி போன்ற வீரப்பெண் துறவிகள் பிறந்த மண் இது.
இந்துமதம் மட்டுமன்றி, பெளத்தம், சமணம் போன்ற பிறமதங்களிலும் பெண் துறவிகள் இருந்துள்ளனர். காரைக்கால் அம்மையார் கடுகி நடந்த தொலைவுகள் எத்தனை?
மணிமேகலையின் அட்சய பாத்திரத்தால் நிரம்பிய பசித்த வயிறுகள் எத்தனை?
மணம்பேசி முடித்தவர் போரில் மாண்டார் என்றதும் துறவுபூண்ட திலகவதியார் திறம்தான் என்னே!
தேசூர் அருகே (திருவண்ணாமலை மாவட்டம்) விடால் என்ற இடத்தில் பெண்களுக்கான தனிப்பல்கலைக் கழகம் இருந்திருக்கிறது. இதன் தலைவியாகக் கல்வி அறிவு மிக்க கனக வீரகுரத்தி அடிகள் இருந்தார். இந்தச் சமணப்பள்ளியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சமணக் குரத்திகள் (துறவிகள்) தவம் இருந்தனர்.
திகைக்க வைத்த எளிய கேள்விகள்
மேற்கு வங்காளத்தில் ஜெயராம்பாடி என்ற பசுமை எழில் கொஞ்சும் கிராமத்தில் பிறந்தவர் சாரதா. ஏழை அந்தணக் குடும்பத்தில் மூத்த பெண்ணாகப் பிறந்தவருக்குத் தந்தையின் உயர் பண்புகளே பாடங்கள் ஆயின. கடும் உடல் உழைப்பே அவர் பெற்ற கல்வி. ஒருநாள், கிராமத் திருவிழாவுக்குப் பெற்றோருடன் சென்றபோது, ஒரு கிழவி, சிறுமி சாரதாவைப் பார்த்து, ‘இதோ இந்த வாலிபர்களில் நீயாரைக் கட்டிக்கொள்ளப் போகிறாய் அம்மா?’ என்று கேட்டாள். சிறுமி ஒரு இளைஞனைக் காட்டியதும் எல்லோரும் சிரித்துவிட்டனர். அவர் ராமகிருஷ்ணரேதான். இந்தப் பைத்தி யத்தையா? என்று கேலி செய்தனர்.
ராமகிருஷ்ணர் பைத்தியம் போலவே கந்தலாக அம்மா அம்மா என்று அரற்றியபடி சுற்றித்திரிந்தவர். சில வருடங்களில் ராமகிருஷ்ணருக்கு அந்தச் சிறுமியே மனைவியாக வாய்த்தாள். திருமணமான புதிதில் ராமகிருஷ்ணர் சாரதையிடம் ‘குழந்தைக்காக முதலில் ஏங்குவது. குழந்தை இறந்துவிட்டால் தேம்பி அழுவது இதுதான் திருமண வாழ்க்கை! ‘என்று கூறினார்.
‘என்ன பிறக்கின்ற குழந்தைகள் எல்லாமா இறந்து விடுகின்றன?’ – சாரதையின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாமல் திணறிப்போனார் குருதேவர்.
‘அடடா! உன்னை வெகுளி என்றல்லவா நினைத்துவிட்டேன்! பாம்பின் காலை மிதித்துவிட்டேனே! என்றார் குருதேவர்.
குருதேவருக்கு உபதேசம்
குருதேவர் பல விஷயங்களில் அன்னையின் ஆலோசனையைக் கேட்டறிவார். அன்னையோ சற்றுப் பொறுங்கள் என்றுகூறித் தேவியிடம் மனமுருகப் பிரார்த்தித்து அதன் பலனாகக் கிடைக்கிற விடையைக் குருதேவரிடம் கூறுவார்.
அதிகம் சாப்பிடுவது ஆன்மிகச் சாதனைக்கு இடையூறு என்பதால் பக்தர் ஒருவர் அதிகம் சப்பாத்தி சாப்பிட்டுவிட்டதாக அவரைக் கடிந்துகொண்டார் குருதேவர். அன்னையை அழைத்து ‘அளவுக்கு மீறி உண்ணக் கொடுக்காதே’ என்றார். அவர்கள் சாப்பிடுவதைப் பெரிதுபடுத்தாதீர்கள். அவர்களின் நலனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் அன்னை.
ஒரு நாள் அன்னை குருதேவருக்கு உணவை எடுத்துக்கொண்டு குருதேவரின் அறைக்கு வந்துகொண்டிருந்தார். வழியில் வந்த ஒரு பெண், இந்த பாக்கியத்தை இன்று ஒரு நாள் எனக்கு கொடுங்களேன் என்று கேட்டுக்கொண்டாள். அன்னை மனம் இளகி உணவுத்தட்டைக் கொடுத்து கூடவே சென்றார்.
வேறு ஒருபெண் உணவுத் தட்டை எடுத்து வந்ததைக் கண்ட குருதேவர் கோபமாக அந்தப் பெண் ஒழுக்கம் குலைந்தவள் என்பது உனக்குத் தெரியாதா? அவள் கைபட்ட உணவை எப்படி உண்பேன் என்று கேட்டார். இந்த ஒருமுறை சாப்பிடுங்கள் என்று கெஞ்சினார் அன்னை. “என்னை மன்னியுங்கள். யாராவது அம்மா என்று என்னை அழைத்து கேட்டால் என்னால் மறுக்கவே முடியாது” என்றார். அன்னையின் முகத்தில் தாய்மைப் பெருக்கைக் கண்டு பரமஹம்சர் தனது கோபத்தை மறந்தார்.
தீயவர்களுக்கும் ஒழுக்கம் தவறியவர்களுக்கும்கூட அவர் அன்னையாக இருந்தார். ‘நல்ல மகனுக்கும் மகளுக்கும் நான் தாய் அதுபோல கெட்ட மகனுக்கும் மகளுக்கும்கூட நானே தாய்’ என்று அன்னை அடிக்கடி கூறுவார்.
இறைவனின் இயல்பைத் தன் இயல்பாகக் கருதிய இந்தத் தாய்மை, ஆன்மிக சாதனையின் உச்சம் அல்லவா?
(தேடல் தொடரும்....) கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com