

மரணமில்லாப் பெருவாழ்வு தரும் அமிர்தத்தை அடைய வேண்டிப் பாற்கடலைக் கடைய தேவர்களும் அசுரர்களும் கூடி முடிவெடுத்தார்கள். வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் மந்திரமலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முடிவெடுத்தார்கள்.
வாசுகி, காசியபர்-கத்ரு இருவரின் மகளாகவும், ஆதிசேஷனின் சகோதரியாகவும் கருதப்படுகிறாள். மலைக்கு அடியில் ஆதாரமாக மகாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து மலையைத் தாங்கிக்கொண்டார். அசுரர்கள் பாம்பின் வாலைப் பிடிப்பது தங்களுக்குக் கௌரவக் குறைச்சல் என்று தலையைத்தான் பிடித்துக்கொள்வோம் என்று கூறிவிட்டனர். விஷ்ணு சிரித்துக்கொண்டே, ‘அவ்வாறே ஆகட்டும்’ என்று சொல்லிவிட்டார்.
அமிர்தம் வந்தது
கடையத் தொடங்கியபோது வாசுகியிடமிருந்து வெளிப்பட்ட தீ ஜுவாலைகள் அசுரரைப் பொசுக்கின. வலி தாங்காமல் வாசுகியின் வாயிலிருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டது. அந்தப் பிரதேசத்தைச் சுற்றிலும் விஷத்தின் வெப்பம் பரவியது. சிவபெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டார். உமாதேவி அவரது கழுத்தைப் பிடித்து, விஷம் வயிற்றுக்குள் போய்விடாமல் தடுத்தாள்.
விஷம் தங்கிவிட்டதால் சிவனின் கழுத்து நீலநிறமாக ஆகிவிட்டது; நீலகண்டன் என்று பெயர் பெற்றார் அவர். தொடர்ந்து பாற்கடலைக் கடைய காமதேனு, வெண்குதிரை, ஐராவதம் என்னும் வெள்ளை நிற யானை, பாரிஜாத மரம் அனைத்தும் வெளிப்பட்டன. பிறகு தோன்றிய மகாலக்ஷ்மி நேராக விஷ்ணுவிடம் போய்ச் சேர்ந்துகொண்டாள். கடைசியாக அமிர்தம் வந்தது. அசுரர்கள் அதை எடுத்துகொண்டு ஓடிவிட்டனர். விஷ்ணு காண்போர் மயங்கும் மோஹினி உருவம் எடுத்துக்கொண்டு தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தார்.
இரண்டு சக்திகளின் சமநிலை
இந்தக் கதை என்ன சொல்ல வருகிறது? அசுரர் - தேவர் என்பவை எதைக் குறிக்கின்றன? பிரபஞ்சத்தின் உருவாக்கம், அல்லது வெளிப்பாடு சில இலக்கணங்களின்படி நடக்கிறது. பிரபஞ்சத்தில் அடிப்படையாக இரண்டு சக்திகள் இயங்குகின்றன. ஒரு சக்தி அனைத்தையும் ஒன்றிணைத்து ஒருமை நிலையை(Oneness) நோக்கி கூட்டிச் செல்கிறது. மற்றொரு சக்தி அனைத்து அம்சங்களையும் பிரித்துப் பன்மையின்(Multiplicity) விரிவுக்கு இட்டுச் செல்ல விழைகிறது. இவை இரண்டுமே முக்கியமானவை.
பிரபஞ்சத்தின் தொடர்ந்த இருப்புக்கு அவசியமானவை. இரண்டாவது சக்தி இல்லையென்றால் எல்லாம் ஒன்றுகூடி ஒரு பரமாணுவுக்குள் (State of Singularity) முழுப் பிரபஞ்சமும் சென்று அடங்கிவிடும். காலம்-வெளி எல்லாம் இல்லாமல் போய்விடும். மறுபுறம் முதல் சக்தி இலையென்றால் அனைத்தும் முடிவற்று விரிந்துபோய்ப் பிரபஞ்சம் வெறும் சக்திப் படலமாகிவிடும். இந்த இரண்டு சக்திகள்தாம் தேவர்களும் அசுரர்களும். ஒருமை நோக்கிச் செல்வது தேவசக்தி. பிரிவை நோக்கி இட்டுச்செல்வது அசுரசக்தி.
பிரபஞ்சம் நிலைத்து இருப்பதற்கு இந்த இரண்டு சக்திகளின் சமநிலை அவசியமானது. இந்தச் சமநிலை அசைவற்ற விறைப்பான நிலை அல்ல; மிகவும் இயக்கபூர்வமான சமநிலை அது. எந்த ஒரு கணத்திலும் இரண்டு சக்திகளும் ஒன்றையொன்று மேற்சென்று ஆதிக்கம் செலுத்தும் விழைவுடனேயே இயக்கம் கொள்கின்றன. எந்நேரமும் ஒரு இழுபறி இந்த இரண்டு சக்திகளுக்கிடையில் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது.
புறப் பிரபஞ்சத்தில் மட்டுமில்லாமல் அகத்திலும் இந்த இரண்டு சக்திகளும் இதேபோல் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. கவனத்துடன் பார்த்தால் நம் மனத்தில் இது நிகழ்ந்துகொண்டிருப்பதை நாம் உணர முடியும். அணுக்கள் சேர்ந்து ஒரு பொருள் உருக்கொள்வதும், காலத்தின் போக்கில் அந்தப் பொருள் உருவிழந்து இல்லாமல் அழிந்துபோவதும் இந்தச் சக்திகளால்தான்.
மரணத்துக்கு அப்பாற்பட்டது
பாற்கடல் கடைவது என்னும் நிகழ்வு எப்போதோ இறந்தகாலத்தில் நடந்த ஒரு சம்பவமல்ல; பிரக்ஞையின் ஆழத்தில் இது இப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நாம் அல்ல. இந்த இரண்டு சக்திகளையும் சமநிலைக்குக் கொண்டுவருவது நம் வேலை.
அதற்கு நாம் இவற்றில் எந்த ஒன்றுடனும் சேர்ந்துகொள்ளாமல், இந்த இயக்கத்துக்கு வெளியில் ‘நான்’ என்ற சுத்தப் பிரக்ஞையாக நின்று கவனத்தில் மையம் கொண்டால், அமிர்தம் வெளிப்படும். மரணம் என்பதன் உண்மையான அர்த்தம் துலங்கும். நம்மிடத்தில் எது மரணத்துடன் முடிந்து போகும், எது மரணத்துக்கு அப்பாற்பட்டது என்னும் தெளிவு கிடைக்கும்.
மரணத்துடன் முடிந்துபோகும் அம்சங்களான உடல், மனம் இவற்றையே ‘நான்’ என்று இப்போது கருதிக்கொண்டிருக்கிறோம். இவை இரண்டும் ஒவ்வொரு கணமும் உருக்கொண்டு அடுத்த கணமே இல்லாமல் போகும் அணுக்களையும் எண்ணங்களையும் சார்ந்து இருப்பவை. தமக்கெனத் தனி இருப்பு இல்லாதவை. இருப்பவை போன்ற தோற்றம் மட்டுமே கொண்டிருப்பவை.
ஆனால், உடல், மனம் இரண்டையும் அறியும் அறிவுணர்வான ‘நான்’ என்னும் ஆன்ம சக்தியே மரணத்தினால் அழியாதது. ஏனெனில் அது பொருளாலோ எண்ணத்தாலோ உருக்கொண்டிராதது. பிரபஞ்சத்தின் ஆதாரமான உயிர்சக்தியே ஒவ்வொரு உயிரிலும் ‘நான்’ என்ற உள்ளொளியாக விகசிக்கிறது.
உருக்கொண்டு நிலைக்கும் பிரபஞ்ச தத்துவமே விஷ்ணு என்று கொள்ளப்படுகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் எல்லைகளுக்கு அப்பால் காலதேசமற்று விரியும் உருக்கடந்த ஆதார தத்துவமே சிவன் என்று சொல்லப்படுகிறது. தேவ சக்தியும் அசுர சக்தியும் ஒவ்வொரு கணமும் சமநிலைக்கு வருகின்றன. உடனே மீண்டும் சமநிலையிழந்து போகின்றன. இந்த இரண்டிலும் சிக்கிக்கொள்ளாமல் தனித்து நின்று, ‘நான்’ என்னும் சுயவுணர்வில் நிலைகொண்டால், அந்தச் சமச்சீர்நிலையில் வெளிப்படும் உன்னதமே அமிர்தம். அதுவே மரணம் கடந்த பெருநிலைக்கு இட்டுச் செல்லும். இதுதான் வாழ்வின் பயன்.
(பயணம் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com