ஜென் துளிகள்: மிதிவண்டியை ஓட்டுவதற்காக ஓட்டுகிறேன்

ஜென் துளிகள்: மிதிவண்டியை ஓட்டுவதற்காக ஓட்டுகிறேன்
Updated on
1 min read

ஒருமுறை தன் மாணவர்கள் ஐவரும் மிதிவண்டியில் சந்தைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருப்பதைப் பார்த்தார் ஜென் குரு. அவர்கள் மிதி வண்டியிலிருந்து இறங்கியவுடன், அவர் மாணவர்களைப் பார்த்து, “ஏன் நீங்கள் மிதிவண்டி ஓட்டுகிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஒரு மூட்டை உருளைக்கிழங்கு களை என்னால் மிதிவண்டியில் வைத்துக் கொண்டுவரமுடிகிறது. நான் என் முதுகில் அவற்றைத் தூக்கிக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை” என்று பதிலளித்தார் முதல் மாணவர்.
“நீ ஒரு புத்திசாலி. வயதான காலத்தில் நீ என்னைப் போல் முதுகு வளைய நடக்க வேண்டியிருக்காது” என்று அவரைப் பாராட்டினார் குரு.
“மரங்கள், வயல்களைப் பார்த்து ரசித்தபடி, மிதிவண்டியைச் செலுத்துவது எனக்குப் பிடிக்கும்” என்று சொன்னார் இரண்டாம் மாணவர்.
“உன் கண்கள் திறந்திருக்கின்றன. உன்னால் உலகைப் பார்க்க முடிகிறது,” என்று சொன்னார் குரு.
“நான் மிதிவண்டியைச் செலுத்தும் போது ‘நம் மியோஹோ ரெங்கே க்யோ’(பிரபஞ்சத்தின் மறைபொருள் விதியின் மீதான பக்தி என்று அர்த்தம்) என்ற மந்திரத்தை மனநிறைவுடன் உச்சரிக்க முடிகிறது” என்று சொன்னார் மூன்றாம் மாணவர்.
“உன் மனம் ஒரு புத்தம்புதிய உண்மையான சக்கரத்தைப் போல எளிமையாகச் சூழலும்” என்று அந்த மாணவரைப் பாராட்டினார் குரு.
“மிதிவண்டியை ஓட்டும்போது எல்லா உயிர்களுடனும் நான் ஒத்திசைவுடன் இருக்கிறேன்” என்று பதிலளித்தார் நான்காம் மாணவர்.
“நீ தீங்கற்ற பொற்பாதையின் வழியாக மிதிவண்டியில் பயணம் செய் கிறாய்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் குரு.
“நான் மிதிவண்டியை ஓட்டுவதற் காக மிதிவண்டியை ஓட்டுகிறேன்” என்று சொன்னார் ஐந்தாம் மாணவர்.
அந்த ஐந்தாம் மாணவருக்கு அருகில் எழுந்துசென்ற குரு, “நான் உங்கள் மாணவர்” என்று சொன்னார்.

- கனி

* “உருளைக் கிழங்குகளின் தோலை உரித்துக் கொண்டிருக்கும்போது, இறைவனை நினைத்துக் கொண்டிருப்பதை ஆன்மிகம் என்று ஜென் குழப்புவதில்லை. ஜென் ஆன்மிகம் என்பது உருளைக்கிழங்குகளின் தோலை மட்டும் உரிப்பதாகும்”.

* “ஜென் என்பது காலத்திலிருந்து விடுதலை அடைவதாகும். இக்கணத்தைத் தவிர வேறு எந்தக் காலமும் கிடையாது.
நாம் கண்களைத் திறந்து தெளிவாகப் பார்க்கும்போது, கடந்தகாலம், எதிர்காலம் என்ற இரண்டுமே உறுதியான யதார்த்த மற்ற கற்பனைக் கருத்து கள் என்பது தெரியும்”.

- ஆலன் வாட்ஸ், பிரிட்டானிய
ஆன்மிக எழுத்தாளர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in