

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ரிஷப ராசி வாசகர்களே
கடந்து வந்த பாதையை மறக்காதவர்களே! உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடன் பிரச்சினைகள் தீரும்.
1.1.2020 முதல் 26.12.2020 வரை உங்கள் ராசிக்கு அஷ்டமத்துச் சனி தொடர்வதால் ஏமாற்றங்கள், ஈகோ பிரச்சினையால் கணவன் மனைவி பிரிவு, பணி இழப்பு, வீண் பழி, வழக்குகள் வந்து நீங்கும். நீரிழிவு நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே, தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 12.11.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ல் மறைந்திருப்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும் என்றாலும் திடீர் பணவரவும் உண்டு. சொந்தபந்தங்களுக்காகச் சில சமயங்களில் அலைய வேண்டி வரும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியைத் தவிர்ப்பது நல்லது.
சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். ஆனால், நவம்பர் 13-ம் தேதி முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிக்கள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். தன்னிச்சையாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தோல்வி, தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். மனைவியுடன் மோதல்கள் நீங்கும். குழந்தை வரம் வேண்டிக் கோயில் கோயிலாக அலைந்தீர்களே, கவலை வேண்டாம் வாரிசு உண்டாகும்.
இந்த ஆண்டு முழுக்க ராகுவும், கேதுவும் சரியில்லாததால் கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உறவினர்கள் சிலர் உங்களுக்குள் வீண் வம்புச் சண்டையை ஏற்படுத்தக் கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம், வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நடைப் பயிற்சி, யோகா, தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு சாதகமான வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
பழைய நண்பர்கள், சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் குறையும். கூடுதல் அறை கட்டுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். உத்தியோகத்தை மாற்றுவதற்கு யோசித்து வருபவர்கள் அதற்கான முயற்சிகளில் இறங்கலாம். தொழில் விரிவாக்கத்தில் ஈடுவதற்கும் உகந்த காலம் இது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு வெளிநாடு, அயல்பணிகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத வகையில் சொத்துகளை அடைவீர்கள்.
10.2.2020 முதல் 22.3.2020 வரை செவ்வாய் உங்களுடைய ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் வீடு, மனை வாங்குவது விற்பது எதுவாக இருந்தாலும் கவனமாக இருங்கள் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகோதரர்களுடன் சின்னச் சின்னக் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக்கிறது. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்திலும் கவனமாக இருங்கள். குலதெய்வக் கோயிலுக்குப் பழுதுநீக்கி கும்பாபிஷேகம் செய்து பார்ப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர் கள். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பொருட்களைக் கொள்முதல் செய்வீர்கள்.
வியாபார ரகசியங்களைச் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். பங்குதாரர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஊழியர்களின் சின்னக் கோரிக்கைகளுக்குச் செவி கொடுத்தால் பெரிய லாபத்தை அடைவீர்கள். எந்த முயற்சியிலும் வேலையிலும் கூடுதல் பிரயத்தனமும் பொறுப்பும் அவசியம்.
உத்தியோகத்தில் உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, புதிதாக வரும் அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். சம்பள உயர்வுக்காகப் போராட வேண்டி வரும். கலைத் துறையினர் எல்லாவற்றுக்கும் காத்திருக்க வேண்டியிருக்கும். கோலாகலமாகத் தொடங்கிய வேலைகள்கூடக் காரணம் தெரியாமல் நிற்கும். பணவரவுக்குப் பெரிய பங்கம் இருக்காது. இந்தப் புத்தாண்டு அதிரடி வளர்ச்சியைத் தருவதுடன், கொஞ்சம் அலைச்சலையும் பக்குவத்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம்
பழமையான சிவாலயம் சென்று வில்வார்ச்சனை செய்து சிவபெருமானை வணங்குங்கள். உளுத்தம் பருப்பு தானமாகக் கொடுங்கள். தடைகள் விலகி சாதிப்பீர்கள்.