

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
மிதுன ராசி வாசகர்களே
தீவிர யோசனைக்குப் பின் முடிவெடுப்பவர்களே! உங்களுடைய 9-ம் ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்விகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.
1.1.2020 முதல் 12.11.2020 வரை குருபகவான் 7-ம் விட்டில் அமர்ந்திருப்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய சிக்கல்களைப் பேசித் தீர்ப்பீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தும் வீட்டில் விளையாட ஒரு குழந்தை இல்லையே என்று தவித்துவந்த பெற்றோருக்கு வாரிசு உருவாகும்.
பிள்ளைகளால் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தள்ளிப்போன கல்யாணப் பேச்சுவார்த்தை கூடி வரும். மூத்த சகோதரிக்குக் கல்யாணம் நடக்கும். ஆனால், நவம்பர் 13-ம் தேதி முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 8-ம் வீட்டில் மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம் வரும். திடீர்ச் செலவுகள் வந்து போகும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் அநாவசியப்பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களும், அலைச்சல் களும் வந்துபோகும். சித்தர் பீடங்களுக்கு மறவாமல் செல்லுங்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள்.
26.12.2020 வரை ராசிக்கு 7-ம் வீட்டில் சனிபகவான் கண்டகச் சனியாக நிற்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்யப் பாருங்கள். குடும்பத்தின் அந்தரங்க விஷயங்களில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க விடாதீர்கள். புதிய நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உங்கள் சில காரியங்கள் இழுபறியாகி முடியும்.
நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வெளிவட்டாரத்தில் உஷாராகப் பழகுங்கள். நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை தரம் பிரித்துப் பார்க்க முடியாமல் தடுமாறுவீர்கள். முன்பு போல கேட்டவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்காதீர்கள். வருங்காலத்தை மனத்தில்கொண்டு சேமித்துவைத்துக் கொள்ளுங்கள். பூர்விகச் சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கும். உப்பு சப்பில்லாத விஷயத்துக்கு கூடத் துணைவருடன் சண்டை சச்சரவுகள் வரும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
வருடத்தின் தொடக்கத்திலிருந்தே ராசிக்குள் ராகுவும், 7-ம் வீட்டில் கேதுவும் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்னச் சண்டைச் சச்சரவுகள் வந்த வண்ணம் இருக்கும். சேமிப்புகள் கரையும். சிலரால் நீங்கள் ஏமாற்றப்படக் கூடும். எனவே, பண விஷயத்தில் கறாராக இருங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பைச் சிதைவு வரக்கூடும். ஆனால், செப்டம்பர் மாதம் முதல் வருடம் முடியும் வரை ராகு 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் அமர்வதால் ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.
வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் என சுபச்செலவுகள் அதிகரிக்கும். வி.ஐ.பிக்களின் அறிமுகம் கிடைப் பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. அரசு தொடர்புடைய காரியங்கள் முழுமையடையும். உங்களைக் கண்டும் காணாமல் போன பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள்.
இந்தப் புத்தாண்டு அவ்வப்போது உங்களை ஆழம் பார்த்தாலும், கடின உழைப்பாலும் தொலைநோக்குப் பார்வையாலும் வெற்றியடையும் செய்யும்.
பரிகாரம்
அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குப் புதன்கிழமைகளில் சென்று அங்குள்ள சக்கரத்தாழ்வாரை நெய் தீபமேற்றி வணங்குங்கள். புளி சாதம் தானமாகக் கொடுங்கள். தைரியம் அதிகமாகி முன்னேறுவீர்கள்.