

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
கன்னி ராசி வாசகர்களே
நுணுக்கமாகவும், துல்லியமாகவும் யோசிப்பவர்களே! உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் 2020-ம் ஆண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். 26.12.2020 வரை 4-ம் வீட்டில் சனிபகவான் தொடர்வதால் தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தம் வரும்.
தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். தாய்வழிச் சொத்தை விற்றுப் புதிய சொத்து கள்வாங்குவீர்கள். யாருக்கும் உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். வாகனம் விபத்துக்குள்ளாகும். வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். நெடுந்தூர, இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. யாருக்கு ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். நண்பர்களுடன் வீண் பேச்சைக் குறைக்கப்பாருங்கள். இலவசமாகக் கிடைப்பதால் கெட்ட பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள்.
1.1.2020 முதல் 12.11.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். புதியவர்களை நம்பிப் பழைய நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதிக்காதீர்கள்.
சித்தர்களைச் சந்தித்து அருள் ஆசி பெறுவீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வாகனத்தைக் கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். ஆனால், நவம்பர் 13-ம் தேதி முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். வறண்டிருந்த பணப்பை கொஞ்சம் நிரம்ப ஆரம்பிக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும்.
வருடம் பிறக்கும்போது கேது 4-ம் வீட்டில் நிற்பதால் பூர்விகச் சொத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். ராகு 10-ம் வீட்டில் தொடர்வதால் மறைமுக எதிர்ப்பு, உத்தியோகத்தில் வேலைச்சுமை, ஒருவிதப் படபடப்பு, கண் எரிச்சல், ஒற்றைத் தலைவலி வந்து நீங்கும்.
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அரசாங்க விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஆனால், செப்டம்பர் மாதம் முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் ராகுவும் நுழைவதால் வழக்கு விரைந்து முடியும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனைத் தந்து முடிப்பீர்கள்.
9.1.2020 முதல் 2.2.2020 வரை உள்ள காலக்கட்டத்தில் சுக்ரன் 6-ல் மறைவதனால் குடும்பத்தில் சின்ன சின்னப் பிரச்சினைகள் அதிகமாகும்.
16.08.2020 முதல் 26.10.2020 வரை மற்றும் 13.12.2020 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை செவ்வாய் 8ல் நிற்பதால் பூர்விகச் சொத்துப் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண்பது நல்லது.
இந்தப் புத்தாண்டு ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகாலாக இருந்த உங்களைத் திடப்படுத்தி, தீர்க்கமான முடிவுகளை எடுக்க வைப்பதாகவும், பணப்புழக்கத்தை அதிகப் படுத்துவதாகவும் அமையும்.
பரிகாரம்
பெருமாள் கோவிலில் சயனக் கோலத்தில் அருள்சுரக்கும் ரங்கநாதப் பெருமாளை வெள்ளிக்கிழமைகளில் துளசி தந்து வணங்குங்கள். பச்சைப்பயறு தானமாகக் கொடுங்கள். நினைத்தது நிறைவேறும்.