ஆங்கிலப் புத்தாண்டு 2020 பொதுப் பலன்: துலாம்

ஆங்கிலப் புத்தாண்டு 2020 பொதுப் பலன்: துலாம்
Updated on
2 min read

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

துலாம் ராசி வாசகர்களே

எதையும் கலைநயத்துடன் செய்யக்கூடியவர்களே! இந்த 2020-ம் வருடம் உங்கள் ராசிக்கு சந்திரன் 5-ம் வீட்டில் நிற்கும்போது பிறப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜிதப் புத்தியாலும் பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடன் பிரச்சினையில் ஒரு பகுதி தீரும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சிலர், பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள்.

1.1.2020 முதல் 12.11.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் இலக்கை எட்டிப் பிடிக்க கடுமையாகப் போராட வேண்டி வரும். சுபச் செலவுகளும், திடீர்ப் பயணங்களும் அதிகரிக்கும். ஆனால், எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். லேசான தலைச் சுற்றல், சலிப்பு, முன்கோபம், சில காரியங்களில் தடைகள் வந்து செல்லும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மனைவி, பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது. உறவினர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். பூர்விகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

அதிக வட்டிக்கு வாங்கிய கடனைப் போராடி பைசல் செய்வீர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை முழுமையாக நம்பி அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் சிலர் உங்களுக்கு உதவ முன் வருவார்கள். ஆனால், 13.11.2020 முதல் வருடம் முடிய குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் மன உளைச்சல், மறைமுக எதிர்ப்பு, வீண் விமர்சனம், மூட்டு வலி, சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் உரசல்கள் வரும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள்.

26.12.2020 வரை 3-ம் வீட்டில் சனிபகவான் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகங்களை அனுபவிப்பீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிக்கும் வல்லமை பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். அனுபவ அறிவைப் பயன்படுத்தி சில பிரச்சினைகளுக்கு எதார்த்தமான தீர்வு காண்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். வழக்கால் பணம் வரும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வெளிமாநிலத்தவர்களுடன் சேர்ந்து தொழில் செய்யும் யோகம் உண்டாகும்.

வருடம் பிறக்கும்போது உங்கள் ராசிக்கு 3-ல் கேது அமர்ந்திருப்பதால் புதிய சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவியில் அமர்வீர்கள். சவால்களைச் சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். பேச்சில் தடுமாற்றம் இருந்ததே, இனி, பேச்சில் கம்பீரம் பிறக்கும். நாடாள்பவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல் நீங்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். பங்குவர்த்தகம் மூலம் பணம் வரும். வேற்றுமதம், மொழி, இனத்தவரால் திடீர் திருப்பம் உண்டாகும்.

அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அடிமனத்தில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். ஆழ்ந்த உறக்கம் வரும். தந்தையாருக்கு நெஞ்சுவலி, மூட்டுவலி வந்துபோகும். அவருடன் மனத்தாங்கலும் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும்போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணம் செல்ல வேண்டி வரும். ஆனால், செப்டம்பர் மாதம் முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ம் வீட்டில் ராகுவும் நுழைவதால் பேச்சில் தடுமாற்றம், விரக்தி, ஏமாற்றம் வந்து போகும். யாரையும் நம்பி எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

3.2.2020 முதல் 27.2.2020 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். சிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். மின் சாதனங்கள், மின்னணுச் சாதனங்களையெல்லாம் கவனக்குறைவால் தொலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஊழியர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. பங்குதாரர்கள் வழக்கம் போல் முணுமுணுப்பார்கள். சந்தை நிலவரங்கள் அறிந்து புது ஏஜென்சி எடுங்கள். உத்தியோகத்தில் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதுடன் தன்நிலையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய வருடமாக அமையும்.

பரிகாரம்

சஷ்டி திதி நடைபெறும் நாளில் முருகப் பெருமானுக்கு இரண்டு நெய் தீபமேற்றி வணங்குங்கள். கந்த சஷ்டிக் கவசம் படியுங்கள். மொச்சைப்பயறு தானமாகக் கொடுங்கள்.
திடீர் யோகம் உண்டாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in