

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
விருச்சிக ராசி வாசகர்களே
கொள்கை, கோட்பாடு களை விட்டுக் கொடுக்காதவர்களே! உங்கள் ராசிக்கு சுக வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் மனக்குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களைகட்டும். பழைய சொந்தபந்தஙகள் தேடி வருவார்கள்.
26.12.2020 வரை சனிபகவான் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பாதச் சனியாகத் தொடர்வதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். பல் வலி வந்து போகும். காலில் அவ்வப்போது அடிபடும். கண்ணைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
பொது இடங்களில் யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். மனத்தில் ஒருவிதக் கொந்தளிப்பு இருந்து கொண்டிருக்கும். திடீர் பணவரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. இருந்தாலும், வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கத்தான் செய்யும். சில விஷயங்களில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். பணம், நகைகளைக் கவனத்துடன் கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். உங்களின் நிதிநிலை தெரியாமல் உறவினர்கள், நண்பர்களில் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வங்கிக் கடனுக்காக யாருடைய பேச்சையும் நம்பிப் பணத்தை இழக்காதீர்கள்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.11.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் தொடர்வதால் எதிர்பார்த்த வகையில் உதவிகளும், திடீர் பணவரவு உண்டு. ஆனால், செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கோயில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசுகூட இல்லையே என வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள், குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து நடந்துகொள்வார்கள். அவர்களின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
மூத்த சகோதரியின் பிரச்சினைகள் நீங்கும். எதிரும் புதிருமாகப் பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். சாமர்த்தியமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் திடீர் ஆதாயம் உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் மதிப்பைப் புரிந்துகொள்ளுவீர்கள். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். நவீனரக வாகனம் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய வீட்டுக்குக் குடிபோகும் நிலை வரும். ஆனால், 13.11.2020 முதல் வருடம் முடியும் வரையுமே குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்களை முயன்று தவறி முடிக்க வேண்டி வரும். மன தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். என்றாலும் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள்.
வருடம் பிறக்கும் போது 2-ம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். சில நேரங்களில் நீங்கள் விளையாட்டாகப் பேசப் போய் அது விபரீதமாக முடியும். குடும்பத்தில் சின்னச் சின்னக் கூச்சல் குழப்பங்கள் வந்துபோகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். ராகு 8-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திண்டாடுவீர்கள். வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள். கை, காலில் காயம், வயிற்றுக் கோளாறு, மூட்டு வலி, நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும்.
செப்டம்பர் மாதம் முதல் உங்கள் ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் நுழைவதால் மனக்குழப்பம், எதையோ இழந்ததைப் போல் ஒரு விதக் கவலைகள், பதற்றம், தலைசுற்றல், பல்வலி வந்து நீங்கும். மனைவிக்குக் கர்ப்பப்பைக் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். தகவல் தொழில்நுட்பத் துறையினர், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஏறுமுகமான காலமாக இருக்கும்.
நெடுநாள் உடல்நலமின்மையால் அவதியுற்றவர்கள் தகுந்த மருத்துவ சிகிச்சையால் ஆரோக்கிய மறுமலர்ச்சியை அடைவார்கள். 28.2.2020 முதல் 27.3.2020 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் அலைச்சல், செலவினங்கள், கணவன் மனைவிக்குள் சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும். நான்கு சக்கர வாகனங்களை வாங்குவீர்கள். பொது விஷயங்களில் பொறுப்புடன் ஈடுபட்டு நற்பெயரை எடுப்பீர்கள். கோயில் திருப்பணிகள், ஏழைகள் திருமணங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். இந்த 2020-ம் ஆண்டு உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், பிற்பகுதியில் சாதனையாளராகவும் மாற்றும்.
பரிகாரம்
நரசிம்ம சுவாமி ஏகாதசி திதி நடைபெறும் நாட்களில் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பசு நெய்யில் சிவப்புத் திரியிட்டு வணங்குங்கள். கடலைப் பருப்பைத் தானமாகக் கொடுங்கள். தொட்டதெல்லாம் துலங்கும்.