

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
கும்ப ராசி வாசகர்களே
எப்பொழுதும் யதார்த்தத்தை விரும்புபவர்களே! இந்த புத்தாண்டு தொடக்கம் முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் லாப வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணப்புழக்கம் அதிகரிக்கும். இனித் திட்டமிட்ட காரியங்கள் தடையில்லாமல் முடியும். புதுச் சொத்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.
கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, கிரகப்பிரவேசம் எனப் பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய சொந்தபந்தங்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பிள்ளைகளிடமிருந்த பிடிவாதக்குணம் நீங்கும். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். நாடாள்பவர்கள் உதவுவார்கள். கோவில் கும்பாபிஷேகத் திருப்பணிக் கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள்.
1.1.2020 முதல் 12.11.2020 வரை குருபகவான் லாப வீட்டில் நிற்பதால் பிரபலங்கள், நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் உடனே முடியும். குடும்பத்தில் இனம்புரியாத கவலை, வாக்குவாதங்கள் என இருந்ததே! இனி வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்த புதுவழிகளில் முயல்வீர்கள். திடீர்யோகம், பணவரவு உண்டு.
நீண்டநாளாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும். பழைய கடனில் ஒருபகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன்வந்து உதவுவார். உங்களையும் அறியாமல் உங்களிடம் இருந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும். இனி நேர்மறை எண்ணங்கள் உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பெரிய பதவிகள் தேடி வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். தூரத்துச் சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவ முன்வருவார்கள்.
ஆனால், 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர்ப் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாட்களாகத் தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ராகு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பொறுப்பில்லாத தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அவர்களின் போக்கிலேயே அவர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் வெடிக்கும்.
பூர்விகச் சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது நல்லதல்ல. கேது உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் நிற்பதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடன்பிறந்தவர்களுக்காக எவ்வளவு செய்தும் நம்மைப் புரிந்து கொள்ளவில்லையே, என்று அவ்வப்போது வருந்தினீர்களே! அந்த நிலை மாறும்.
பாசமாக நடந்துகொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். ஆனால், செப்டம்பர் மாதம் முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 4-ல் ராகுவும், 10-ல் கேதுவும் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருடன் வீண் கருத்துமோதல் வரக்கூடும். வீண் அலைச்சல், டென்ஷன், காரியத் தாமதம், வாகன விபத்துகள் வந்து போகும். 1.9.2020 முதல் 28.9.2020 வரை சுக்ரன் ஆறில் மறைவதால் அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.
வாகனம் பழுதாகும். கணவன் மனைவிக்குள் யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்ற போட்டிகளெல்லாம் வேண்டாம். ஈகோ பிரச்சினையைத் தவிர்க்கப்பாருங்கள். வீண் சந்தேகத்தாலும் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். ஊழியர்களால் அலைச்சல் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாகச் செயல்படுங்கள். இந்தப் புத்தாண்டு திடீர் யோகத்தையும், பணவரவையும் தந்தாலும் வீண் அலைச்சலையும், செலவுகளையும் தருவதாக அமையும்.
பரிகாரம்
ஸ்ரீதுர்க்கை அம்மனை வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலத்தில் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வணங்குங்கள். சர்க்கரைப் பொங்கல் தானமாகக் கொடுங்கள். எதிலும் வெற்றி கிட்டும்.