ஆங்கிலப் புத்தாண்டு 2020 பொதுப் பலன்: மீனம்

ஆங்கிலப் புத்தாண்டு 2020 பொதுப் பலன்: மீனம்
Updated on
2 min read

மீன ராசி வாசகர்களே

இடம்பெயர்ந்து சென்றாலும் குலப்பெருமையைக் காப்பவர்களே! உங்களுடைய ராசிக்கு 12-ம் வீடான விரயஸ்தானத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சுகமான அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் உண்டு. பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும்.

26.12.2020 வரை சனிபகவான் ராசிக்கு 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பிக்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. பணபலம் கூடும். புதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். பொது விழாக்களைத் தலைமையேற்று நடத்துவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும்.

வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்த உங்கள் மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்துத் தகராறு தீரும். மறைமுகமாகச் செயல்பட்டவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர்த் திருப்பங்கள் ஏற்படும். உடல் அசதி, மனச்சோர்வு வரும். பீரோ சாவியை அடிக்கடி மறந்து வைத்துவிடுவீர்கள்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.11.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் தொடர்வதால் அதுவரை நான்கைந்து வேலைகளை ஒன்றாகச் சேர்த்துப் பார்க்க வேண்டியது இருக்கும். உத்தியோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே, அலுவலகத்தில் தேவையற்ற பேச்சைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பிரபலங்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

பழைய கடன் பிரச்சினைகள் அவ்வப்போது மனத்தை வாட்டும். ஊர் பொது விவகாரங்களில் உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்வீர்கள். வங்கிக் காசோலையில் முன்பே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். 13.11.2020 முதல் வருடம் முடிய குருபகவான் உங்கள் ராசிக்கு 1-ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரவு அதிகரிக்கும். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல இருந்தீர்களே! அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்துகொள்வார்கள்.

வருடம் பிறக்கும்போது 4-ம் வீட்டில் ராகு நிற்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது. தாயாருக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் வீண் வாக்குவாதங்களும் வந்து போகும். தாய்வழி உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வீடு கட்ட முடிவெடுத்துவிட்டால் தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். 10-ம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

வி.ஐ.பிக்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழியும் வரக்கூடும். ஆனால், செப்டம்பர் மாதம் முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 9-ல் கேதுவும் நுழைவதால் எதிலும் ஆர்வம் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்து வந்த வீண் சந்தேகங்கள் நீங்கும். ஆனால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் வெடிக்கும்.

29.9.2020 முதல் 25.10.2020 வரை சுக்ரன் 6-ல் அமர்வதால் அந்தக் காலகட்டத்தில் கணவன் மனைவிக்குள் சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சகிச்சைகளும் வந்து போக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் புதிய சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். சந்தை நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து முதலீடு செய்யுங்கள்.

புகழ் பெற்றவர்கள் உங்களுக்கு வாடிக்கையாளர்களாவார்கள். அரசாங்கத்தாலும் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களுக்கும் சலுகைகள் பெற்றுத் தருவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வையெல்லாம் எதிர்பார்க்கலாம். சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்பும் வரும். இந்தப் புத்தாண்டு உங்களைச் சோர்வடைய வைத்தாலும், சவால்களில் வெற்றி பெற வைப்பதுடன் வருமானத்தையும் வாரி வழங்குவதாக அமையும்.

பரிகாரம்

ஸ்ரீராகவேந்திர சுவாமிகளை வியாழக்கிழமைகளில் தீபமேற்றி, மல்லிகைப் பூ அணிவித்து வணங்குங்கள். பச்சரிசி தானமாகக் கொடுங்கள். எதிலும் சுபிட்சம் உண்டாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in