Published : 19 Dec 2019 12:31 PM
Last Updated : 19 Dec 2019 12:31 PM

வார ராசி பலன் 19-12-2019 முதல் 25-12-2019  வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் சின்ன விஷயங்களுக்கும் கோபம் வரலாம். கோபத்தைக் கட்டுப்படுத்த காரியங்கள் சாதகமாகும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்டுச் செயல்படுவது நன்மை தரும். உத்தியோகத்தில் படபடப்பும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். பணவரவு எதிர்பார்த்ததைவிடக் குறையக் கூடும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

பிள்ளைகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு, எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். கலைத் துறையினருக்கு, சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த பண வரவு இருக்கும். தேவையான வசதிகள் கிடைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் பேச்சுத் திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. குடும்பத்தினருடன் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும்.

சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் பேசுவது நல்லது. திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். பெண்களுக்கு, பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு, யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்ல வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
எண்கள்: 2, 9
பரிகாரம்: செவ்வாய்க்கிழமையன்று நவக்கிரகத்தில் செவ்வாய்க்குத் தீபம் ஏற்றி வணங்க எல்லாக் காரியங்களும் வெற்றிபெறும். துணிச்சல் உண்டாகும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். சூரியன் புதனுடன் சேர்க்கை பெறுவதால் எதிலும் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும்.

பெண்களுக்கு, காரியங்களைத் துணிச்சலாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு, மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிறப்பாகப் பணிபுரிந்து பாராட்டு பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறத் துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மனத்தில் தைரியம் கூடும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எதையும் யோசித்துச் செய்வது நன்மை தரும். கோபமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். உத்தியோகரீதியான பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தைகளிடம் கருத்து வேற்றுமைகள் நீங்கும்.

பெண்களுக்கு, கோபத்தைத் தவிர்த்து நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். கலைத் துறையினருக்கு, பாராட்டுகள் வரும். வெளிநாட்டுப் பயணங்களும் இனிதே அமையும். அரசியல்வாதிகளுக்கு, நீண்டநாள் பிரச்சினைகள் விலகும். மாணவர்களுக்கு, திட்டமிட்டு பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரபகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர எல்லாக் காரியங்களும் வெற்றியடையும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் அறிவுத் திறமை பளிச்சிடும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தைத் தள்ளி போட வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் எதையும் மனம்விட்டுப் பேசிய பின்னர் எதையும் செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாகக் கோபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு, அறிவுபூர்வமாகச் செயல்பட்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைத் துறையினருக்கு, வேலைகளில் பாதுகாப்பும் எச்சரிக்கையும் அவசியம். பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. அரசியல்வாதிகளுக்கு, உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு, எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 2, 6
பரிகாரம்: விநாயகப் பெருமானை அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் அனைத்து கிரகங்களின் சஞ்சாரமும் உங்களுக்குச் சாதகமாக உள்ளது. தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததைவிடக் குறைவான லாபம் தரும். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் கூடுதலான வேலைச்சுமை இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும். குடும்பத்தினரால் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கும்.

வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மேம்படும். பெண்களுக்கு, பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையைச் செய்து முடிக்கக் காலதாமதமாகலாம். கலைத் துறையினருக்கு, வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்களால் தொல்லைகள் தானாக விலகும். அரசியல்வாதிகளுக்கு, கடமைகளைச் சரிவரச் செய்தால் நன்மைகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறக் கூடுதல் நேரம் பாடங்களைப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3
பரிகாரம்: நவக்கிரக குருவை வியாழக்கிழமை வணங்கிவர முன்னேற்றம் உண்டாகும். மன அமைதி ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x