

ஒரு மனிதன் இறந்த பிறகு அவனுடைய பிரக்ஞை நிலை என்ன ஆகிறது? அவன் இருக்கும்போது அவனது ஆசைகள், பயங்கள், துயரங்கள், வேதனை, கோபம், பேராசை, பொறாமை என்ற உள்ளடக்கத்தைக் கொண்டு அவனது உணர்வுநிலை இயங்குகிறது.
அவனது உடல் இறந்தபிறகு அந்த உள்ளடக்கம் - படிவங்கள் - பெருமனத்தின் காலநதியில் போய்ச் சேர்ந்துவிடுகின்றன. இது ஒரு மாபெரும் நதி. மனித உணர்வுநிலையில் ஓடிக்கொண்டிருக்கும் பிம்பங்களின் துயரங்களால் ஆன நதி, காலநதி. இந்த நதி இல்லையேல் அனுபவம் இல்லை; காலம் இல்லை.
இந்த நதியிலிருந்துதான் நாம் நம் உலக அனுபவத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். மனித வாழ்க்கையைப் போர்க்களமாக்கி வைத்திருக்கும் நாடு, மதம், சாதி, மொழி போன்ற மற்ற பல பிரிவுகள் அனைத்தும் இந்த நதியிலிருந்துதான் எழுகின்றன.
இந்த நதி மனித மனத்தின் நனவிலி(Unconscious)யின் இருளில் இயங்கிகொண்டிருக்கும் வரையில் துயரமும் வேதனையும் மனித வாழ்க்கையின் சாராம்சமாக இருப்பதைத் தவிர்க்க வழியில்லை. இதுதான் புத்தரின் நான்கு மேன்மையான உண்மைகளில் முதலாவது: மனித வாழ்க்கை துன்பமும் வேதனையும் நிறைந்தது.
பிறக்கும் புதிய உடல்கள்
இயற்கையின் முறைப்பாட்டில் புதிய உடல்கள் பிறந்தவண்ணம் இருக்கின்றன. அந்த நதியின் படிவங்கள் மீண்டும் அந்த உடல்களின் வழியாக வெளிப்படுகின்றன. வாழ்க்கை அனுபவத்தில் அந்தப் படிவங்கள் சுயவுணர்வு கொண்டு தன்னைத் தான் அறிந்துகொள்ளும் முறைப்பாட்டில் பங்குகொள்கின்றன. சுயவிழிப்பு ஏற்படும்போது, தன் சாரத்தில் தான் பிரபஞ்ச ரீதியிலான உணர்வுநிலை என்று உணரும்போது அந்தப் படிவங்கள் தம் தனியிருப்பை விடுத்துப் பெருமனத்துடன் ஐக்கியமாகிவிடுகின்றன.
உடல்கொண்டு உயிர்வாழும்போது தன்னை ஒரு தனி மனிதனாக - ஒரு ஆளாக - நினைத்துக்கொள்கிறோம். அந்த ‘ஆள்’ ஒரு வெறும் மனப்படிவம். அதற்குத் தனி இருப்பு கிடையாது. அந்த ‘ஆள்’ இறந்து மீண்டும் பிறப்பது இல்லை. உடல் பிறந்து, இருந்து இறக்கிறது.
அது இயற்கை முறைப்பாடு. ‘நான்’ ஒரு தனி ஆள் என்று தன்னை நினைத்துக்கொள்ளும் நபர் யாரும் இல்லை. உதாரணமாக, நாம் ஒரு கார் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். சில வருடங்கள் கழித்து அந்தக் கார் மிகவும் பழையதாகிப்போகிறது. அப்போது ஒரு புதிய கார் வாங்குகிறோம். அந்தப் புதிய கார், பழைய காரின் மறுபிறவியா? அதுபோலத்தான் இதுவும்.
ஒரு ஆள் இல்லை
உடலின் மரணத்துடன் மனம் அழிகிறதா? மனத்தில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. அந்தக் குறிப்பிட்ட உடலுடன் ஒரு தனி நபராக நான் இந்த உலகத்தில் வாழ்வதற்குத் தேவையான விவரங்கள் மனஅமைப்பில் சேகரிக்கப்பட்டிருக்கும் அல்லவா; உடலின் மரணத்துடன் அதுதான் அழிந்து போகிறது.
ஆனால் பெருமனத்தின் அம்சமான மனப் படிவம் தன் பரிணாமத்தைத் தொடர்கிறது. அது ஒரு ஆள் இல்லை. உடலுக்கும் மனத்துக்கும் பின்னால் இருந்து இயங்கும் ‘நானுக்கு’ பிறப்புமில்லை இறப்புமில்லை. ஏனெனில் அது கால ஓட்டத்தில் கலந்துகொள்வதில்லை. வெறும் சாட்சிபூதமாக மட்டுமே அது நடப்பது அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறது.
என்னை ஒரு தனி ‘ஆள்’ என்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். என் உடல், என் மனம் என்று நினைத்துக்கொள்கிறேன். என் குடும்பம், என் உறவினர் என்று கருதிக் கொள்கிறேன். இந்த உடலை எப்போது ‘நான்’ என்று நான் சுவீகரித்தேன் என்று நான் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தப் பிறவியின் மர்மம் துலங்கும். பிறப்பு-இருப்பு-இறப்பு என்னும் முறைப்பாடு யாருக்கு ஏற்படுகிறது என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.
இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்குப் பிறவாமல் போம்திசை நாடுமின்
எக்காலத்திவுடல் வந்து எமக்கானதென்று
அக்காலம் உன்ன அருள் பெறலாமே
என்கிறார் திருமூலர்.
பிரபஞ்சப் பார்வையில் தனிமனிதர்கள் இல்லை. நான் ஒரு தனிமனிதன் என்று மனம் நினைத்துக்கொள்வதற்கு இப்போது இயங்கிக்கொண்டிருக்கும் அரைகுறை விழிப்புநிலைதான் காரணம். துன்பங்கள் அனைத்தும் இந்த நிலையிலிருந்துதான் உண்டாகின்றன.
மிருகங்கள் வெறும் இயல் பூக்கத்தில் மையம் கொண்டு வாழ்கின்றன. இன்றைய மனிதன் முழுவிழிப்பில்லாமல் இருந்து அவதிக்குள்ளாகிறான். இது ஒரு முடிவான நிலை இல்லை. தூக்கத்திலிருந்து விழிப்பை அடையும் பயணத்தின் பாதி வழியில் இருக்கிறோம். முழுவிழிப்பு அடைந்ததும் தெரியவரும் பேருண்மை இதுதான்: எல்லையேதுமற்ற பிரபஞ்சம் முழுவதிலும் உருவமும் உள்ளீடும் இல்லாத ஒரே பிரக்ஞைதான் - அறிவுணர்வு(Awareness) - இருக்கிறது.
அதுதான் அனைத்து உடல்களிலும் ‘நான்’ என்று தன்னை உணர்ந்துகொள்கிறது. அந்த ‘நான்’ உணர்வை தன் இறந்த கால அனுபவத்தின் வரையறைக்குட்பட்ட மனித மனம், தன் தனிச்சுயம் என்று தவறாக நினைத்துக்கொண்டு விடுகிறது. இந்தக் குழப்பத்தினால் மனித உலகம் துண்டுதுண்டாகப் பிரிந்து உடைந்துபோயிருக்கிறது. மனித வாழ்க்கை அல்லலும் துன்பமும் நிறைந்து இருக்கிறது.
இந்த நிலையிலிருந்து கட்டம் கட்டமாக மனித மனம் விழித்தெழ வேண்டும். தனக்குத் தன்னைத் தெரியவில்லை என்பது தெரியும்போதுதான் தான் யார் என்ற கேள்வியே மனத்துக்கு எழ முடியும். இப்போது, `எனக்கு எல்லாம் தெரியும்` என்ற அறியாமையில் ஆழ்ந்திருக்கும் மனம், துன்பத்தின் வெப்பம் தாங்காமல் விழித்துக்கொள்ளும். அப்போதுதான் துன்பம் நிறைந்திருக்கும் இந்த உலகை அனுபவம் கொண்டிருக்கும் ‘நான்’ யார் என்ற கேள்வியை மனம் தனக்குள் தானே கேட்டுக் கொள்ளும்.
தனக்குள் தானே உள்ளே நுழைந்து ஆராயும். இருளில் இருந்து கரையற்ற ஒளிவெள்ளமாக இருக்கும் பிரபஞ்சப் பிரக்ஞையை அப்போது அது அடையும்.
(பயணம் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com