தெய்வத்தின் குரல்: சாந்தி அளிக்கும் 
கூத்து

தெய்வத்தின் குரல்: சாந்தி அளிக்கும் 
கூத்து
Updated on
2 min read

‘ராஜராஜன்’, ‘சிவபாத சேகரன்’ என்பவை தவிர அவனுக்கு வேறுபட்டப் பெயர்களும் உண்டு. பாண்டியர்களை ஜயித்ததால், ‘பாண்டிய குலாசனி’ என்று ஒரு பிருதம் (விருது). ‘அசனி’ என்றால் வஜ்ராயுதம். சேரர்களையும் ராஜராஜன் ஜயித்ததால் அவனுக்குக் ‘கேரளாந்தகன்’ என்ற பெயருண்டு. பெரிய கோயிலின் மூன்று வாசல்களில் முதலாவதற்குக் ‘கேரளாந்தகன் திருவாசல்’ என்றுதான் பெயர்.

அந்தக் கோயிலிலே அவன் போஷித்து வளர்த்த ஒரு கலை இன்றைக்குக் கேரள தேசத்தில்தான் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது! அதைப் பின்னாடி சொல்கிறேன். அவனுடைய இன்னொரு பட்டப்பெயரைச் சொல்லத்தான் வந்தேன். ‘ராஜ வித்யாதரன்’ என்பதே அது. வித்தைகளை, கலைகளைத் தாங்கி ஆதரித்த பிரபு என்று அர்த்தம்.

வேதமும் திருமுறைகளும் ஓதுவது மட்டுமில்லாமல், தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் ஈச்வரபரமான வேறு பாடல்களும் பாடுவதற்கென்று ஆரியம் பாடுவோர், தமிழ் பாடுவோர் என்று இரண்டு சாராரை ராஜராஜேச்வரத்தில் நியமித்தான். ஆரியம் பாட மூன்று பேர்; தமிழ் பாட நாலு பேர்.

நடராஜா, ஆடவல்லான் என்றே பேர் வைத்துக் கொண்டிருப்பவனுக்கு டான்ஸ் வைக்க வேண்டாமா? அதையும் பெரிசாகப் பண்ணினான்.

கொட்டாட்டுப் பாட்டு

‘ந்ருத்த-கீத-வாத்யம்’ என்பதைக் கொஞ்சம் மாற்றித் தமிழ் மூதாதைகள் ‘கொட்டாட்டுப் பாட்டு’ என்றார்கள். ‘கொட்டு’ என்பது வாத்தியம். தவில், மிருதங்கம் மாதிரிக் கொட்டு ஓசை எழுப்பும் வாத்தியங்களுக்கு முதலில் இப்படிப் பெயர் இருந்து, அப்புறம் எல்லா வாத்தியத் தினுசுகளையும் குறிப்பதாகிவிட்டிருக்கலாம். ‘ஆட்டு’ என்பது நிருத்தம். அதாவது டான்ஸ். ‘பாட்டு’ – கீதம் என்று உங்களுக்கே தெரியும். ‘ஆட்டு’ என்பதைப் பொதுவாகக் ‘கூத்து’ என்றார்கள். நடராஜாவுக்கு நேர்த் தமிழ் ‘கூத்தப்பிரான்’ என்பது.

கொட்டு-ஆட்டு-பாட்டு மூன்றிலும் விற்பன்னனாக இருப்பவன் தான் நிருத்தாசார்யன் எனப்படுவான். இப்படி ராஜராஜன் நியமித்த நாலுபேரில் ஒருத்தனுக்குத் திருவள்ளரைச் சாக்கை என்று பேர். இவன் ‘மறைக்காடன்’ – அதாவது வேதாரண்யத்தைச் சேர்ந்தவன். பாக்கி மூன்று பேரில் இருவர் ‘ஒற்றியூரான்’ எனப்படுகிறார்கள். அதாவது, தஞ்சாவூருக்கு இருநூறு மைல் தள்ளி தொண்டை மண்டலத்தில் நம் மெட்ராஸைச் சேர்ந்தாற் போலிருக்கிற திருவொற்றியூர்க்காரர்கள். ’சாக்கை’ என்ற பேரையும், ஒற்றியூர் சமாசாரத்தையும் நான் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணமுண்டு.

கதகளி கலைஞனின் கத்தி

திருவொற்றியூரில் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மண்டபம் ஒன்று இருக்கிறது. அதிலே டான்ஸ் ஆடுகிற புருஷன் ஒருத்தனின் சிற்பம் இருக்கிறது. அவனுடைய ட்ரெஸ்ஸைப் பார்த்தால் ஆச்சரியமாயிருக்கிறது. இந்தக் காலத்தில் மலையாளக் கதகளிக்காரர்கள் தலையில் பெரிசாக ஒரு தினுஸுச் சும்மாடு வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதே மாதிரி இவன் வைத்துக் கொண்டிருக்கிறான். கதகளிக்காரன் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் கத்தி மாதிரியே இவன் கையிலும் இருக்கிறது!

தமிழறிஞர்களிடம் இதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டதில், கதகளிக்கு ஜன்மபூமி தமிழ் தேசம்தான் என்று எனக்குத் தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது. பூர்வத்தில் மலையாளம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியான சேரநாடாகத்தான் இருந்தது. தமிழ்நாட்டின் கதகளி பிற்காலத்தில் அங்கே மாத்திரம் தங்கிவிட்டிருக்கிறது. ‘கதகளி’ என்பது ‘கதை-களி’ என்ற இரண்டு வார்த்தைகளின் கூட்டு. கதை என்றால் கதைதான். ‘களி’ என்பது டான்ஸாகிய கூத்துக்கே தமிழில் வழங்கிய இன்னொரு பெயர்.

கதகளிக்காரனின் டர்பன், தோடு, மூஞ்சியில் அவன் அப்பிக்கொள்கிற கலர்ப் பூச்சு, இதுகளோடு அவன் மாதிரியே கத்தியைப் பிடித்துக் கொண்டு ஆடுகிற டான்ஸ் தமிழ்நாட்டில் ஆதியிலேயே இருந்திருக்கிறது. உக்கிரகாளியோடு ஈஸ்வரன் நாட்டியப் போட்டி நடத்தி, ஊர்த்துவ தாண்டவம் செய்து அவளை அபஜயப்படுத்தி, அவளுடைய உக்கிரத்தை சாந்தமாக்கினதைப் பண்டையத் தமிழ் நூலில் சாந்திக்கூத்து என்று சொல்லியிருக்கிறது. அதுதான் கதகளிக்கு மூலம்.

வாசிகை பூண்டு, மணித்தோடணியணிந்து

பூசிய சுண்ணம் முகத்தெழுதி

தேசுடனே ஏந்து சுடர்வாள் பிடித்திட்(டு)

ஈசனுக்கும் காளிக்கும் சாந்திக் கூத்தாரத்தகும்.

’வாசிகை’ என்பது டர்பன்; ‘முகத்துப் பூசிய சுண்ணம்’ என்பது மூஞ்சியில் அப்பிக்கொள்கிற கலர்ப்பூச்சு. மலையாள நம்பூதிரி வம்சத்தில் அவதரித்த ஸ்ரீ சங்கர பகவத்பாதாளுக்குத் திருவொற்றியூருடன் நெருங்கின சம்பந்தமுண்டு. அங்கே திரிபுரசுந்தரிக்கு யந்திர ஸ்தாபனம் செய்திருக்கிறார். இன்றைக்கும் அம்மன் கோயில் அர்ச்சகர்களாக நம்பூதிரிகளே இருக்கிறார்கள். இப்போது மலையாளத்தில் மட்டும் தங்கிவிட்ட கதகளி ஆயிரம் வருஷம் முந்தி ராஜராஜன் நாளில் தமிழ்நாட்டுக்குள்ளேயே மற்ற இடங்களைவிடத் திருவொற்றியூரில் ரொம்பப் பொலிவோடு இருந்திருக்கிறது.

நாடகம்

பாட்டுக்கு அபிநயமாக இல்லாமல் தில்லானா, ஜதிஸ்வரம் போல பலவித அடவுகளைப் பிடித்து, மனசை உயர்த்துகிற விதத்தில் கலா சௌந்தர்யத்தோடு கௌரவமாக உடம்பு, கை, கால்களை வளைத்துக் காட்டுவதுதான் முதலாவது வரும் சொக்கம். இது பரத சாஸ்திரத்திலுள்ள 108 கரணங்களை ஆதாரமாகக் கொண்டது. பிருஹதீச்வரத்தில் கர்ப்பகிருஹத்தைச் சுற்றி வரும்போது, விமானத்தின் இரண்டாம் தளத்தில், சாட்சாத் பரமேச்வரனே இந்த 108 கரணங்களை ஆடிக்காட்டுவதாகச் சில்பங்கள் அமைத்திருப்பதைப் பார்க்கலாம்.

இரண்டாவது, மெய்க்கூத்து. இது அகத்துறை, அகமார்க்கம் எனப்பட்ட சிருங்கார ரஸத்தை ஒரு தூக்குத்தூக்கி ஜீவாத்ம-பரமாத்ம ஐக்கியமான நாயக-நாயிகா பாவத்தில் ஆடுவது. தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், திவ்யப் பிரபந்தம் எல்லாவற்றிலுமே இப்படிப்பட்ட அக மார்க்கப் பாடல்கள் இருக்கின்றன.

மூன்றாவது அவிநயம். ‘அபிநயம்’ என்பதே தமிழ் மொழிப் பண்புப்படி அவிநயமாயிருக்கிறது. சிருங்காரம் மட்டுமின்றி நவரசங்களையும் காட்டும் தனிப் பாட்டுக்களுக்கு அபிநயம் செய்துகாட்டுவது இதன்கீழ் வரும்.

நாலாவதுதான், நாடகம். அதாவது ஒரு பெரிய கதையை எடுத்துக் கொண்டு அதை ஆடல் பாடல்களாக நடித்துக் காட்டுவது. சாந்திக் கூத்திலே பலவித ரசபேதங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் இருந்தாலும், முடிந்த முடிவாக அது மனசைச் சாந்தப்படுத்தவே செய்யும். அதனால்தான் ’சாந்திக் கூத்து” என்று பேர். நடராஜரின் ஆட்டமெல்லாம் தக்ஷிணாமூர்த்தியின் சாந்தத்தில் நிறையும்படி பண்ணினார்கள். ‘சாந்தம் சிவம்’ என்றுதானே உபநிஷத்தே அவனைச் சொல்கிறது?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in