ஆன்மிக நூலகம்

ஆன்மிக நூலகம்
Updated on
2 min read

மகாபாரதத்தில் பீஷ்மர், விதுரர், திருதராஷ்டிரன் என முதன்மைக் கதாபாத்திரங் கள் மட்டுமல்லாமல் அரிதாக பேசப் படும் அஷ்டாவக்ரர், ஜனமேஜெயன் போன்ற கதாபாத்திரங்களின் கதைகளையும் சேர்த்து மொத்தம் 60 கதைகளாக தந்திருக்கிறார் நூலாசிரியர்.

சுவாரஸ்யம் குறையாமல் ஒவ்வொரு கதையையும் சிற்சில பக்கங்களுக்குள் ரத்தினச் சுருக்கமாக அடக்கியுள்ளார். கதைக்கேற்ற ஓவியம், கதை பற்றிய சிறு குறிப்பைத் தொடர்ந்து கதை விரிகிறது. பின்னர், அந்தக் கதையின் ஒவ்வொரு நகர்விலும் அந்தக் கதாபாத்திரங்கள் செய்வது சரியா, தவறா என்று ஒரு நடுநிலையாளராக நின்று வாழ்க்கைமுறை சிந்தனைகளோடு விமர்சித்திருப்பது புதிய சுவை.

நிறைவாக, எடுத்துக்கொண்ட கதைக்கு கச்சிதமாகப் பொருந்துகிற குறளும், அதற்கான விளக்கமும். அனைத்து தரப்பினரும் விரும்பிப் படிப்பதற்கேற்ப எளிய நடையில் இருக்கிறது நூல். மகாபாரதக் கதை களில் பொதிந்துள்ள நீதிநெறிகளை இந்தக் கால வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லும் கடமையை சிறப்பாகவே செய்திருக்கிறார் நூலாசிரியர்.

- எஸ். ரவிகுமார்.

வியாசர் அறம்

மகாபாரதம்: ஒரு புதிய பார்வை
நல்லி குப்புசாமி செட்டியார்
பக்கங்கள்: 272 விலை ரூ.200
வெளியீடு: ப்ரெய்ன் பேங்க்.
16/2. ஜெகதாம்பாள் தெரு, தி.நகர்.
சென்னை - 17. 98410 36446

இறைவனின் நாமத்தைக் கூறிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தாலே போதும், வேறு எதுவும் தேவையில்லை என்று கூறியுள்ளார் திருமழிசை ஆழ்வார். மனிதர்கள் அனைவரும் லீலா விபூதி என்னும் மாயையால் பாதிக்கப்பட்டு ஜனன, மரண ரோகத்தால் ஆட்கொள்ளப்பட்டு உள்ளோம். இந்த ரோகத்துக்கான ஒரே மருந்து பக்தி ஒன்றுதான்.

கண்ணபிரானின் அவதாரத் தலம், அவர் வாழ்ந்த தலம் அனைத்தையும் சுற்றி, அவர் தொடர்பான கதாபாத்திரங்களின் மேன்மையை உரைக்கிறது இந்நூல். அந்தந்த கதாபாத்திரமே (நந்தகோபர், யமுனை, காமதா, வத்ஸாசுரன், கோவர்த்தன மலை, குபேரன், ஸ்ரீதாமன், பார்வதி தேவி போன்ற 20 கதாபாத்திரங்கள்) நேரில் நம்மிடம் பேசுவது போல் படைக்கப்பட்டுள்ளது.

பரம்பொருளை ஒருவன், தானே அனுபவித்தால் அன்றி, அதன் தன்மையை யாராலும் அறிய இயலாது. அந்த சுகானுபவம் சொல்லிப் புரிவதில்லை. உணரப்பட வேண்டியதொன்று. தன் கன்றுக்குப் பால் தருவதில்தான் ஒரு பசுவுக்கு ஆனந்தம் இருக்க முடியும். தெய்வ அவதாரங்கள் நேரடியாகத் தன் பாலை அருந்துகின்றன என்பதால், பாலை மேலும் மேலும் சுரந்தபடி கண்ணன், அவனது சகோதரர்கள் பலராமன், விஷால், பத்ரன் ஆகியோருக்கும் பாலைக் கொடுத்து ஆனந்தப்பட்ட காமதா, மீண்டும் காலைப் பொழுது எப்போது வரும், கண்ணன் தன் நண்பர்களுடன் எப்போது நீராட வருவான் என்று காத்திருக்கும் சூரியனின் புதல்வி யமுனை, சூழ்ச்சியும் அவரே சுடரும் அவரே என்பதை உணர்ந்த முரன் என்ற அசுரனின் மகனான பிரமீளன், சேட்டைகள் பல செய்த கண்ணனின் வாயைத் திறந்து காட்டச் சொல்லி, தன் கைகளைக் கூப்பி கண்ணனை வணங்கிய யசோதை போன்ற கதாபாத்திரங்கள், தாமாகவே கண்ணனுடன் தங்கள் அனுபவங்களைக் கூறுவதுபோல் இந்நூல் அமைந்துள்ளது.

- கே.சுந்தரராமன்.

கண்ணன் எத்தனை கண்ணனடி
மாலதி சந்திரசேகரன்
கைத்தடி பதிப்பகம், தொடர்புக்கு: 044-48579357, 9566274503
விலை: ரூ. 225.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in