ஜென் துளிகள்: அளவுக்கு மீறிய எதுவும்

ஜென் துளிகள்: அளவுக்கு மீறிய எதுவும்
Updated on
1 min read

முதிய ஜென் குரு ஒருவர், ஒரு கிறித்துவ பெண்கள் கல்வி நிறுவனத்துக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். குழு விவாதத்தில் காதல் என்ற தலைப்பே எப்போதும் மையப் பொருளாக இருப்பதைக் கவனித்தார். இதைப் பற்றி மாணவிகளிடம் பேச நினைத்தார்.

“அளவுக்கு மீறி வாழ்க்கையில் எந்த விஷயம் இருந்தாலும் அது ஆபத்துதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். போர்க்களத்தில் அளவுக்கு மீறிக் கோபப்பட்டால் அது பொறுப்பற்றத் தன்மை, மரணத்தில்தான் போய்முடியும். மத நம்பிக்கைகளில் தீவிரத்தன்மைகளுடன் செயல்பட்டால், அது இறுக்கமான மனநிலை, அடக்கு முறையைத்தான் உருவாக்கும்.

காதலில் பேரார்வத்துடன் செயல்பட்டால், அது அன்புக்குரியவர் பற்றிய கனவு பிம்பங்களையே உருவாக்கும். இறுதியில் அந்தப் பிம்பங்கள் போலியானவையென்று நிரூபணமாகும், கோபத்தையே உருவாக்கும். அளவுக்கு மீறி காதலில் இருப்பது கத்தியின் நுனியிலிருந்து தேன்துளியைச் சுவைப்பது போன்றதாகும்” என்று விளக்கினார் ஜென் குரு.

“ஆனால், நீங்கள் ஒரு பிரம்மச்சாரி துறவி. அப்படி இருக்கும்போது ஆண், பெண் காதலைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்?” என்று கேட்டார் ஒரு மாணவி.
“குழந்தைகளே, சில நேரத்தில், நான் ஏன் துறவியானேன் என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்வேன்,” என்று பதிலளித்தார் அந்த ஆசிரியர்.

- கனி

* மலையின் அடிவாரத்தில் இருந்து
மேலே செல்வதற்குப் பல வழிகள் இருக்கும்.
ஆனால், மலை உச்சியிலிருந்து
நாம் அனைவரும் ஒரே நிலவைத்தான் பார்க்கிறோம்.

- இக்யூ

* உங்கள் முன்கதவு, பின்கதவு
என இரண்டையும் திறந்துவையுங்கள்.
உங்கள் எண்ணங்கள் அதன் வழியாக
வரட்டும் போகட்டும் அனுமதியுங்கள்
ஆனால், அவற்றை அமரவைத்து
தேநீர் கொடுக்காதீர்கள்.

- ஷுன்ரியு சுஸுகி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in