ஒரு பூனையின் தலை

ஒரு பூனையின் தலை
Updated on
1 min read

கவிதை, கையெழுத்துக் கலையில் புகழ்பெற்றவர் சீன ஜென் குரு ஸோஸன். அவர் தன் மாணவர்களுக்கு முன் உரை நிகழ்த்துவதற்காக அமர்ந்திருந்தார். அப்போது ஒரு மாணவர் அவரிடம், “குருவே, இந்த உலகிலேயே மதிப்புவாய்ந்த பொருள் எது?” என்று கேட்டார்.
“இறந்துபோன ஒரு பூனையின் தலை,” என்று எந்தவித தயக்கமுமின்றி சொன்னார் ஸோஸன்.
அந்த மாணவர் குழம்பிப்போனார். ஒருவேளை, குருவுக்குத் தான் கேட்ட கேள்வி சரியாகக் காதில் விழவில்லை என்று நினைத்தார். மீண்டுமொரு முறை கேள்வியைக் கேட்டார் மாணவர்.

“குருவே, இந்த உலகிலேயே மதிப்புவாய்ந்த பொருள் எது? என்று கேட்டேன்,” என்றார் மாணவர்.
“இறந்துபோன ஒரு பூனையின் தலை,” என்று மீண்டும் அதே பதிலைச் சொன்னார் குரு.
மீண்டும் அந்தப் பதிலைக் கேட்ட மாணவர்கள் அனைவருமே குழம்பிப்போயினர்.
“இறந்துபோன ஒரு பூனையின் தலை ஏன் உலகிலேயே மதிப்புவாய்ந்த பொருளாக இருக்க வேண்டும்,” என்று ஒரு மாணவர் கேட்டார்.
“ஏனென்றால், அதற்கு யாரும் விலை பேச முடியாது!” என்று சாதாரணமாகப் பதிலளித்தார் ஸோஸன்.
தேவையும், பயன்பாடும்தான் ஒரு பொருளின் மதிப்பைத் தீர்மானிக்கிறதா, என்ன?

- கனி

ஜென் துளிகள்

அனைவருக்குமே வழி தெரியும், ஆனால், சிலர் மட்டுமே அதில் நடந்துசெல்கிறார்கள்.

- போதிதர்மர்

ஆனந்தம் பாராட்டும்போது கிடைக்கிறது.
கவனம் குவிப்பதன் வழியாகப் பாராட்டுப் பிறக்கிறது.
கவனம் குவித்தலே ஜென்னைப் பயிற்சி செய்வதாகும்.

- ஜென் பழமொழி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in