

பனையபுரம் அதியமான்
கொங்குநாட்டில் பூ மிதித்தல் எனும் குண்டம் இறங்கும் விழா அம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்றதாகும். பண்ணாரி மாரியம்மன், அந்தியூர் பத்திரகாளியம்மன், கணக்கம்பாளையம் பகவதியம்மன், பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் ஆகிய அம்மன்கள் புகழ்பெற்றவர்கள்.
அவர்களில் பாரியூர் கொண்டத்துக் காளியம்மனும் ஒருவர். பாரியூர் ஆலயத்தில் அமைந் துள்ள 45 அடி நீளம் ஐந்தடி அகலம் கொண்ட குண்டம் பிரசித்தி பெற்றதாகும். கொங்கு நாட்டின் 24 நாடுகளில் ஒன்றாகத் திகழ்வது, காஞ்சிக் கூவல் நாடு. இதில் அடங்கிய பழைமையான ஊர் பாரியூர் ஆகும்.
ஒவ்வொரு நாட்டுக்கும் காணியாளார்கள் ஊர் நிர்வாகத்தையும், தானத்தார்கள் கோயில் நிர்வாகத்தையும் நடத்தி வந்தனர். அவர்களின் பெயர்களாகத் திருப்பாண்டி கொடுமுடி தானத்தார், திருமுக்கூடல் தானத்தார், திருமுருகன்பூண்டி தானத்தார், திருவெஞ்சமாக்கூடல் தானத்தார், அவினாசி ஆளுடைக் கோயில் தானத்தார், மன்னியூர் தானத்தார் என ஆறு தானத்தார் பெயர்கள், கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இவர்கள் பெயரில் ஊர் பெயர்களும் அமைந்திருந்தன. அதேபோல, ஒட்டச்சு, பணம், அச்சு என காசுகளின் பெயர்களும், கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன.
பரா , என்பதற்கு போற்றுதல், வழிபடுதல் என்பதும், புரி என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்பதும் பொருளாகும். இக்குறிப்பு காலடி சுப்பிரமணிய சாஸ்திரிகள் 1942 இல் எழுதிய நூலில் கூறப்பட்டுள்ளது. அன்னையின் பேரருள் பொருந்திய வராக முத்துக் குமார வீரர் விளங்கினார். இவரின் மரபில் தோன்றியவர் கோபிசெட்டிப் பிள்ளான் என்ற வள்ளல்.
இவர் வறுமையில் வாடிய போது, இவரைப் பாடி பரிசில் பெற புலவர் ஒருவர் வந்தார். தன்னிடம் பொருள் இல்லாத நிலையில், தன்னை மாய்த்துக் கொள்ள, புலி பதுங்கி இருந்த புதருக்குள் சென்றார். அங்கே புலி இல்லை. அதற்கு மாறாக, பொன் குவியல் இருந்தது. அது கொண்டத்து மாரியம்மன் அருளே என்பதை அறிந்து, அதை அனைவருக்கும் வழங்கினார் என, பாரியூர் கொண்டத்து மாரியம்மன் ஆற்றுப்படை குறிப்பிடுகிறது.
ஐந்து நிலை ராஜகோபுரம்
மூலவர், சில வடிவங்களின் அமைப்புகள் பலநூறு ஆண்டுகள் பழைமையானவை என்பதை உணர்த்து கின்றது. இதனைக் கற்கோயிலாக 1942-ல், கோபி புதுப்பாளையம் முத்து வேலப்பர் பொதுமக்களுடன் இணைந்து உருவாக்கினார். இதேபோல, 1990-ல் இக்கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுரத்தை கோபி-புதுப்பாளையத்தைச் சார்ந்த அடியார் பொதுமக்களுடன் இணைந்து உருவாக்கினார்.
72 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டு, ஆலயமே கம்பீரமாகக் காட்சி தருகிறது. ஆலயம் 240 அடி நீளம், 150 அடி அகலம் கொண்டு, விசாலமாக தெற்கு முகமாக அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் ஆலயத்துக்கு அழகு சேர்க்கிறது. வடக்கு வாயில், தடப்பள்ளி வாய்க்கால் அமைந்துள்ளது. அருகே கல்யாண விநாயகர் அமைந்துள்ளார்.
ஆலய வளாகத்தில், வன்னி விநாயகர், வரசித்தி விநாயகர் சன்னிதிகள் அமைந்துள்ளன. சப்தகன்னியர், பொன் காளியம்மன், விநாயகர், குதிரைவாகனம், அதையொட்டி முனியப்ப சுவாமி, பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறார். இவரை தீய சக்திகள் அழிக்கும் கடவுளாக வணங்குகின்றனர்.
ஆலயத்தில் நடுநாயகமாக, கொண்டத்துக் காளி சன்னிதி அமைந்துள்ளது. சிங்க வாகனத்தில் அம்மன் அமைந்த நிலையில் உள்ளார். அதைச் சுற்றி கலைநயம் மிக்க 28 தூண்களுடன் கூடிய சுற்று மண்டபம் அமைந்துள்ளது.
உள்ளே மகாலட்சுமி, சரசுவதி, ராஜ ராஜேஸ்வரி, பத்திரக்காளி சிலா வடிவங்களும் அமைந்துள்ளன.
கருவறை முன்புறம் பிரம்மகி, சாமுண்டி வடக்கிலும், மகேசுவரி, கௌமாரி கிழக்கிலும், வராகி தெற்கிலும், வைஷ்ணவி, மகேந்திரி மேற்கிலும், கஜலஷ்மி அதனருகே கொண்டத்துக் காளி சிலையும் அமைந்துள்ளன.
கருவறைக்குள் கொண்டத்துக் காளியம்மன் அமர்ந்த கோலத்தில் வலது காலை குத்திட்டு, இடது காலை அசுரனை அழுத்தியபடி, வலது கரங்களில், சூலம், உடுக்கை, வாள், கிளி தாங்கி, இடது கரங்களில், தீச்சட்டி, கேடயம், மணி, கிண்ணம் ஆகியவற்றைத் தாங்கியும் வடக்கு முகமாகக் காட்சியளிக்கிறாள்.
காளியாக இருந்தாலும், அன்னை யின் வடிவம் சாந்தரூபியாகக் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. இவளே சேரன் படைத்தளபதிக்கு வீரவாள் வழங்கி வரம் தந்தவள். கருவறை அருகே, அருள்மிகு சின்னம்மன் காட்சி தருகின்றாள்.
சூரராசச் சித்தர்
சக்தியின் ஆற்றல் அதிகம் வெளிப்படும் கோயில்களில் சித்தர்களின் சமாதி அமைந்திருப்பது இயல்பான ஒன்றாகும். அந்த வகையில், இத்தலத்தின் சிறப்புக்குக் காரணமான சித்தராகப் போற்றப் படுபவர் சூரராசச் சித்தர். இவரின் சமாதிக்கோயில் இவ்வாலயக் கீழ்ப்புறத்தில் பட்டாரி என்ற கோயிலில் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது.