

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை கோயிலில் காணப்படும் தூண் சிற்பம் இது. யாளியின் நீண்ட தும்பிக்கையை சிம்மம் வாயில் பிடித்திருக்கிறது. யாளியின் உயர்த்திய காலையும் சிம்மத்தின் தலையையும் இணைப்பது கிளி.
சிம்மத்தின் வாயும் யாளியின் வாயும் உட்குழிவாகவும் பற்கள் தனித்தனியாகத் தெரியும்படியும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் வாயில் கையை வைத்தால் விரல்கள் துண்டாகிவிடுமோவென்று அச்சப்படும் அளவுக்கு உயிர்க்களை சிற்பத்தில் உள்ளது.
ஒரே கல்லில் நுணுக்கமாக இந்த இரண்டு உருவங்களையும் வடித்த அந்தப் பெயர் தெரியாத சிற்பி எனக்குக் குருவாகத் தெரிகிறான்.
- ஓவியர் வேதா