

முல்லா நஸ்ரூதின் சந்தைக்குப் போனபோது, தனது பழைய இறைச்சிக் கடைக்கார நண்பரைப் பார்த்தார். அவர் முல்லாவுக்குப் பரிசாக ஒரு ஆட்டு ஈரலைக் கொடுத்து வீட்டுக்குக் கொண்டுபோகச் சொன்னார். ஈரலில் வடை செய்வதற்கான குறிப்புகளையும் எழுதி முல்லாவிடம் கொடுத்தார்.
முல்லா சமையல் குறிப்பைப் பையில் வைத்துக்கொண்டு ஈரலைப் பிடித்தபடி மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு நடந்தார். அப்போது வானிலிருந்து இறங்கிய பருந்தொன்று முல்லாவின் கையிலிருந்த இறைச்சியைக் கவ்விச் சென்றது.
முல்லா, வடை போச்சே என்று அலறவில்லை. ‘முட்டாளே, இறைச்சியை நீ கவ்விப் போகலாம். ஆனால், என்னிடம்தான் அதற்கான சமையல் குறிப்பு உள்ளது.’ என்று கர்வத்துடன் அலறினார்.