

இந்தப் பிரபஞ்சம் எப்படி உண்டாகியது? ஒரு பொருள் இருக்கிறது என்றால் அதை ஆக்கியவர் ஒருவர் இருந்தாக வேண்டுமில்லையா? எப்படி எதுவும் இல்லாமல் ஒரு விஷயம் தானாகத் தோன்ற முடியும்?
பிரபஞ்சத்தில் அடிப்படையாக என்ன இருக்கிறது? பொருள்கள்; மிருகங்கள், மற்ற ஜந்துக்கள்; மனிதர்கள். நட்சத்திரங்கள்; கோள்கள்; கிரகங்கள்; கேலக்ஸிகள் என்னும் நட்சத்திரக் கூட்டங்கள். இவையனைத்தையும் தனக்குள் கொண்டிருக்கும் எல்லையற்ற பிரபஞ்ச வெளி. இருப்பவை அனைத்தும் அடிப்படையில் பொருளால் ஆனவை. அடிப் படையில் பிரபஞ்சத்தில் மூன்று விஷயங்கள் இருக்கின்றன: பருப்பொருள் இருக்கிறது. சக்தி இருக்கிறது. வெளி இருக்கிறது. பருப்பொருளும் சக்தியும் அடிப்படையில் ஒன்றுதான் என்கிறது அறிவியல். ஆக, 'சக்தி-பருப்பொருள்", வெளி, இரண்டும்தான் இருக்கின்றன என்று சொல்லலாம்.
இதில் கடவுள் என்பது என்ன? எங்கே இருக்கிறார், அல்லது இருக்கிறது கடவுள்? கடவுள்தான் சக்தியை, பருப்பொருளை உண்டாக்கியிருக்கிறார்; படைத்திருக்கிறார், என்பதுதான் நமது கருத்து. பிரபஞ்சத்தில் பொருள் தோன்றிப் பின் உயிர் தோன்றி, ஒரு செல் உயிரினங்கள் தோன்றி, பலசெல் உயிரினங்கள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் என்ற நிலைகளையெல்லாம் கடந்து, கடைசியில் மனித உணர்வுநிலை உருக்கொண்டு, இப்போது தானிருப்பதைத் தானறியும் நிலைக்கு வந்திருக்கிறது பிரபஞ்சம்.
சுய உணர்வு கொள்ளும் பிரபஞ்சம்
பரிணாம வளர்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மேற்கொண்டு பரிணாமத்தின் பாதை பிரபஞ்சத்தை எங்கே கூட்டிப்போகப் போகிறது? இதுவரையில் அது கடந்துவந்திருக்கும் பாதையின் போக்கிலிருந்து பார்த்தால், முதலில் உணர்வற்ற வெறும் பருப்பொருளாகத் தோற்றம் கொண்ட பிரபஞ்சம், சுயவுணர்வு அதிகரித்துக் கடைசியில் தன்னைத்தானே ‘நான்’ என்று முழுதும் உணர்ந்துகொண்டு நிற்கும் நிலையை வந்தடையும் என்று தோன்றுகிறது.
இதைத்தான் ‘விராட் புருஷன்’ என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்கள்: முழுப் பிரபஞ்சமே பிரக்ஞை கொண்ட ஒரு ஆளாக இருப்பது! இந்த பௌதிகப் பிரபஞ்சம் விராட் புருஷனின் உடல்; சிருஷ்டியின் இயக்கம் அவனது மனம்; இதன் ஆன்மாவாக அவன் இருக்கிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இது பரிணாமத்தின் அறுதி நிலை; அதன் இலக்கு. இதில் கடவுள் என்று எதைச் சொல்வது? அறிவியல் அனைத்து விஷயங்களுக்கும் விளக்கமளித்து வருகிறது.
காலம், இடம் என்பது பற்றி நாம் இதுவரை கொண்டிருந்த கருத்துக்கள் எல்லாம் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. பெருவெடிப்பின்(Big Bang) கணத்தில்தான் காலம், இடம் இரண்டும் தோன்றின என்று அறிவியல் விண்டு காட்டிவிட்டது. ‘பெருவெடிப்புக்கு முன்னால்’ என்ற சொற் பிரயோகம் பொருளேதுமில்லாமல் போகிறது.
கடவுள்தான் உலகைப் படைத்து நிர்வகித்து வருகிறார் என்ற கருத்துக்கு என்ன பொருள்? இது இறுதியான நிலை என்றால், அது இன்னும் எதிர்காலத்தில்தான் இருக்கிறது என்றாகிறது. இந்தக் கணத்தில் கடவுள் என்னவாக இருக்கிறார்? என்ன செய்துகொண்டிருக்கிறார்? எந்த விதத்தில் பிரபஞ்சத்தைப் படைத்துக்கொண்டிருக்கிறார்? இந்தக் கணம் கடவுள் ‘பார்த்துக்கொண்டிருக்கிறார்’. பார்வையே படைப்பு.
எப்போது தோன்றியது?
படைப்பு என்ற சொல்லை நாம் பயன்படுத்தும்போது ஒரு உருவத்தையோ, ஒரு இயந்திரத்தையோ செய்யும் முறைப்பாடு நம் மனத்தில் எழுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் அது பொருந்தாது. பிரபஞ்சம் எப்போது படைக்கப்பட்டது என்பதற்குப் பதிலாக, அது எப்போது தோன்றியது என்ற கேள்வி இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
உலகில் மனிதன் தோன்றுவதற்கு முன்னால் சுயப் பிரக்ஞை - தன்னுணர்வு - கிடையாது. மிருகங்களுக்கு ‘அனுபவம்’ என்பது இல்லை. ‘நான் இருக்கிறேன்’,‘நான் பார்க்கிறேன்’ என்ற சுயவுணர்வு மிருகங்களுக்குக் கிடையாது. பரிணாமத்தில் மனிதன் தோன்றியபோதுதான் ‘அனுபவம்’ என்பது முதன்முதலாக ஏற்பட்டது. அப்போதுதான் பிரபஞ்சம் முதல்முறையாகப் ‘பார்க்கப்பட்டது’. அப்போதுதான் பிரபஞ்சம் ‘தோற்றம்’ கொண்டது; அதாவது தோன்றியது.
கடவுள் என்பதை நாம் அழிவற்ற பரம்பொருள், காலம் கடந்தது, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்றெல்லாம் சொல்கிறோம். அப்படியான ஒரு விஷயம் பிரக்ஞை ஒன்றுதான். சிருஷ்டிக்குள் பிரக்ஞை என்னும் உணர்வுநிலை, சுயஉணர்வுடன் தோற்றம் கொண்டது, மனிதன் தோன்றிய பிறகுதான். ஆனால் பிரபஞ்சத்துக்கும் முன்னாலும், பிரபஞ்சம் உள்ளபோதும், அது அழிந்த பின்னாலும் தான் அழியாதிருப்பது உணர்வுநிலை ஒன்று மட்டுமே.
ஒரு பொறியாளர் ஒரு இயந்திரத்தை உருவாக்குவதுபோல் கடவுள் பிரபஞ்சத்தை உருவாக்கவில்லை. கடவுளே பிரபஞ்சமாக உருக்கொள்கிறார் என்பதுதான் உண்மை.
பார்வை, தன்னுணர்வு, ‘நான்’ உணர்வு, சுயவுணர்வு, இவை யாவும் பரம்பொருளின் அம்சங்கள். கடவுள் என்பது படைக்கப்பட்ட பிரபஞ்சத்தின் ஒரு அம்சம் இல்லை. சிருஷ்டி முழுவதிலும் ஊடுருவி நின்றும், அதே நேரம் அனைத்துக்கும் அப்பால் காலமற்று நிற்கும் பிரக்ஞைதான் கடவுள். ‘பிரக்ஞானம் பிரம்மா’ என்கிறது மகாவாக்கியம். பழைய ஏற்பாட்டில் மோசஸ் கடவுளிடம் ‘உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்கும்போது, ‘அந்த நான்தான் நான்’ என்று கடவுள் கூறுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே
என்கிறார் திருமூலர். தான் என்பது என்ன என்பதை அறிந்துகொண்டால் வழிபடுபவன் -வழிபடப்படும் கடவுள் என்ற இரண்டுநிலை இல்லாமல் போகிறது. அறிவு சார்ந்த மனத்தைக் கடந்த நிலை இது.
என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது
என்னையிட்டு என்னை உசாவுகின்றானே
அறிவு என்று நாம் கொண்டிருக்கும் அனுபவச் சேகரத்தைக் கடந்து நிற்கும் சுயவுணர்வை அறிந்துகொண்ட பின்னர், அந்தச் சுயவுணர்வின் ஆழத்துக்குள் முடிவற்று ஆழ்ந்துபோகும் உன்னத அனுபவத்தைப் பற்றிய திருமந்திரப் பாடல் இது. உடல் அழியும்; உடல் சார்ந்த மனம் அழியும்; உடலையோ மனத்தையோ சார்ந்திராத ஆன்மாவான தன்னுணர்வு அழிவற்றது. மனத்தைக் கடந்து உள்ளே சென்றால் இதைச் சந்திக்கமுடியும்; தரிசனம் கொள்ள முடியும். இதுவே கடவுள்.
(மனத்தைக் கடப்போம்)
- சிந்துகுமாரன், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com