முல்லா கதை: ரொட்டி என்றால் என்ன?

முல்லா கதை: ரொட்டி என்றால் என்ன?
Updated on
1 min read

ஊரில் இருந்த தத்துவ அறிஞர்கள், தர்க்கவியலாளர்கள், சட்ட மேதைகள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து முல்லாவின்மீது வழக்குத் தொடுத்திருந்தார்கள். ‘இங்கே புத்திசாலிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லாருமே அறிவில்லாதவர்கள், தீர்மானமில்லாதவர்கள், குழப்பமானவர்கள்’ என்று ஊர் ஊராகச் சென்று சொன்னதாக முல்லாவே ஒப்புக்கொண்டதால் இந்த வழக்குத் தீவிரமானதாகக் கருதப்படுகிறது. அரசின் பாதுகாப்புக்குக் குழிப்பறிக்கத் திட்டமிட்டதாக முல்லாவின்மீது குற்றம்சாட்டப்பட்டது.

‘நீங்கள் முதலில் பேசலாம்,’ என்றார் அரசர்.

‘காகிதங்களும் எழுதுகோல்களும் கொண்டுவாருங்கள்,’ என்றார் முல்லா.

காகிதங்களும் எழுதுகோல்களும் வரவழைக்கப்பட்டன.

‘அரசின் முதல் ஏழு அறிஞர்களிடம் இவற்றைக் கொடுக்கவும்,’ என்றார் முல்லா.

ஏழு அறிஞர்களிடம் காகிதங்களும் எழுதுகோல்களும் கொடுக்கப்பட்டன. ‘இவர்கள் அனைவரையும் தனித்தனியாக இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க சொல்லவும்: “ரொட்டி என்றால் என்ன?” ’

அவர்கள் எழுதி முடித்தார்கள். அரசரிடம் காகிதங்கள் வழங்கப்பட்டன. அவற்றிலுள்ள பதில்களை அரசர் வாசித்தார்:

முதலாம் காகிதத்தில்: ‘ரொட்டி என்றால் உணவு.’

இரண்டாம் காதிதத்தில்: ‘அது மாவும், நீரும்.’

மூன்றாம் காகிதத்தில்: ‘இறைவனின் பரிசு.’

நான்காம் காகிதத்தில்: ‘சுட்ட மாவு.’

ஐந்தாம் காகிதத்தில்: ‘ரொட்டி’ என்பதை எப்படிக் கருதுகிறீர்களோ, அதைப் பொறுத்து மாறக்கூடியது.’

ஆறாம் காகிதத்தில்: ‘ஊட்டச்சத்துள்ள பொருள்.’

ஏழாம் காகிதத்தில்: ‘யாருக்குமே உண்மையில் தெரியாது.’

‘ரொட்டி என்பது என்னவென்று அவர்கள் தீர்மானகரமாக முடிவெடுக்க முடிந்தால்தான், மற்ற விவகாரங்களைப் பற்றி முடிவெடுப்பது சாத்தியமாகும்,’ என்றார் முல்லா.

‘நான் செய்தது சரியோ, தவறோ! ஆனால், இப்படிப்பட்டவர்கள் மக்களுக்கு வழங்கும் மதிப்பீடுகள், தீர்ப்புகளை எப்படி நம்புவது? அன்றாடம் அவர்கள் சாப்பிடும் ஓர் உணவுப் பொருளைப் பற்றியே அவர்களால் ஒரே முடிவை எடுக்க முடியவில்லை,

அப்படியிருப்பவர்கள் ஒருமனதாக என்னை நம்பிக்கைகளுக்குப் புறம்பானவன் என்று சொல்வது விந்தையா, இல்லையா என்று நீங்களே முடிவுசெய்யுங்கள் அரசே’ என்று சொன்னார் முல்லா.

- கனி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in