

சிந்துகுமாரன்
உட்பொருள் அறிவோம் இந்திய கலாச்சாரப் பாரம்பரியத்தில் முதலில் மேற்கத்திய சமயங்கள் குறிக்கும் பொருளில் ‘கடவுள்’ என்ற கருத்து கிடையாது. மனிதகுலம் பெருமளவுக்கு அக இருளில் மூழ்கியிருந்து, விலங்குகளை விடச் சற்றே விழிப்பு நிலை அடைந்திருந்த காலத்தில், மேற்கத்திய தேசங்களில் சிலர் புறவயமாகப் பிரபஞ்சம் குறித்து ஆராயத் தொடங்கினார்கள்.
வானமண்டலம், தாரகைகள் என்று புறத்தை ஆராய்ந்தார்கள். அதேநேரத்தில் இங்கே கீழைத் தேசங்களில் சிலர் அகவயமாக உள்வெளியில் சஞ்சரித்து, ‘நான்’ என்ற உணர்வுக்கு மூலகாரணம் என்ன என்ற கேள்விக்கு விடைதேடித் திரிந்தார்கள்.
நான் இருப்பதால்தான் எனக்கு உலகம் இருப்பது தெரிகிறது. இந்த நானுக்கு எது ஆதாரம் என்று கேள்வி எழுப்பி, பதில் தேட விழைந்தார்கள்; புலன்கள் வழியாகப் பிரபஞ்சத்தின் வெளித்தோற்றத்தை மட்டுமே அறிய முடியும் என்று உணர்ந்தார்கள். பிரபஞ்சத்தின் உள்தன்மையை, அதன் சாரத்தை உணரத் தன்னையே பிரபஞ்சத்தின் நுழைவாயிலாக்கிக்கொண்டு தமக்குள்ளேயே அகவயமான பயணம் மேற்கொண்டாகவேண்டும் என்ற தெளிவை அடைந்தார்கள்.
ஆழ்தள உண்மைகள்
உள்வெளியின் இருட்பிரதேசங்களில் புகுந்து மனிதப் பிரக்ஞை பற்றிய பல உண்மைகளை அறிந்தார்கள். அந்த அகப்பயணத்தில் தான் கண்டறிந்த ஆழமான பல உண்மைகளைத் தொகுத்து வேதங்களை இயற்றினார்கள். வேதங்கள், சமயநூல்கள் இல்லை.
அவை ஆழ்தள உளவியல் உண்மைகளைப் பற்றிப் பேசுகின்றன. வேதங்களில் சிருஷ்டி அல்லது படைப்பு பற்றிய தத்துவங்களைக் கடவுளர் என்ற கருத்துக்கள் வழியாக வெளிப்படுத்தினார்கள். பிரஜாபதி, விஷ்ணு, ருத்ரன் என்றும், இந்திரன், அக்னி, வாயு, வருணன் என்று இயற்கையின் தத்துவார்த்தங்களைக் குறியீடுகளாகக் கொண்டு ஆழ்தள உண்மைகளை வெளிப்படுத்தினார்கள். இங்கே சொல்லப்படும் படைப்பு அறிவுணர்வுவெளியில் நிகழும் படைப்பு.
இந்த வெளியில் அகம்-புறம் என்னும் பிரிவு கிடையாது. அந்தப் பிரிவு பிரக்ஞையில் தோன்றுவதற்கு முந்தைய நிலை இது. அந்தச் சிலர், நான் என்னும் தன்னுணர்வின் ஆதாரத்தைக் கண்டுபிடித்தார்கள். அந்த முழுமுதற்பொருளைப் பிரம்மம் என்று குறிப்பிட்டார்கள். பிரம்மம் கடவுள் அல்ல; அது ஒரு தத்துவம். பிரம்மம் என்பது என்ன என்ற கேள்விக்கு அவர்கள் தந்த பதில், ‘ப்ரக்ஞானம் பிரம்மா’ என்பதுதான்.
அதாவது அறிவுணர்வுதான்(Consciousness) பிரம்மம். அதுவே முழுமுதற்பொருள். ‘நான்’ அந்தப் பிரம்மத்தின் வெளிப்பாடு என்பதையும் உணர்ந்த அவர்கள், ‘அஹம் பிரம்ம அஸ்மி’(நானே பிரம்மமாக இருக்கிறேன்) என்றும் ‘அஹம் ஆத்ம பிரம்மா’( பிரம்மமே என் ஆத்மாவாக உள்ளது) என்றும் தெளிவாகக் கூறினார்கள்.
இந்த உண்மையின் வெளிப்பாடுதான் பல உபநிடதங்கள். 'சுயம்’, அல்லது ‘நான்’ என்பதுதான் எல்லாமாகவும் பரிணமிக்கிறது என்றார்கள் அவர்கள். பிரஹதாரண்யக உபநிடதத்தில், ‘கணவன் மனைவியை நேசிப்பது மனைவிக்காக இல்லை; அவளின் சுயத்துக்காக - ஆன்மாவுக்காக; மனைவி கணவனை நேசிப்பது, அவனுக்காக இல்லை; அவன் சுயத்துக்காக - ஆன்மாவுக்காக,’ என்று யாக்ஞவல்கியர் தன் மனைவி மைத்ரேயியிடம் சொல்கிறார்.
பிரபஞ்சத்தின் அக அமைப்பு
பிறகு புராணகாலம் வந்தது. பிரஜாபதி பிரம்மாவானார்; ருத்ரன் சிவன் ஆனார். விஷ்ணுவிடம் மாற்றம் இல்லை. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். ஆலகால விஷம் வந்தது. சிவன் அதைக் குடித்தார். லட்சுமி தேவி வந்தாள். விஷ்ணு அவளை ஏற்றுக்கொண்டார். இதெல்லாமும் கூட அகத்தளங்கள் தொடர்பான உண்மைகள்தான். இவர்கள் யாரும் வழிபாட்டுக் கடவுளர் இல்லை.
மேலை நாடுகளின் சமயங்களில் உள்ளதுபோல் இறைவன் என்பதற்கு ஈடாக இங்கே எதுவும் இல்லாமல்தான் இருந்தது. கோயில்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் இல்லை. சத்சங்கங்கள் நடப்பதற்கான இடமாகவே கோயில்கள் இருந்தன. கோயிலின் அமைப்பே கல்லில் அமைந்த பிரபஞ்சத்தின் அக அமைப்பாக இருந்தது.
மேற்கத்திய உளவியல் இப்போது கீழை தேசத்துச் சமயநூல்களை ஆழ்தள உளவியல் என்று புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது.
பல்வேறு உளவியல் அறிஞர்கள் இந்தியாவுக்கும், ஜப்பானிய ஜென் ஆசிரமங்களுக்கும் சென்று தங்கியிருந்து அறிவுணர்வு தொடர்பான பயிற்சிகள் பெற்றுக்கொண்டு அங்கு தெரிந்துகொண்ட உண்மைகளைத் தம் உளவியல் தத்துவங்களில் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்கள். மதம், உளவியல், ஆன்மிகம் மூன்றும் ஒன்றிணைகின்றன. புதியதொரு உலகப் பார்வை பரிணமிக்கத் தொடங்கியிருக்கிறது. கடவுள் என்பது அறிவுணர்வின் ஆதாரம் என்னும் உண்மை வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.
எல்லாம் அறியும் அறிவுதனைவிட்டு
எல்லாம் அறிந்தும் லாபமிங்கில்லை
எல்லாம் அறியும் அறிவை நானென்னில்
எல்லாம் அறிந்த இறையெனலாமே
என்கிறார் திருமூலர்.
கடவுள் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த கருத்தாக இருப்பது மாறத் தொடங்கியுள்ளது. அனுபவத்தின் ஆதார சுருதியாக நிலைத்திருக்கும் பிரபஞ்சத்தின் தன்னுணர்வு அது என்னும் உண்மை மெல்ல வெளிப்படத் தொடங்கியுள்ளது. இது உலக மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
பிரிவுகளும் போர்களும் இல்லாமல் போகும் காலத்தை நோக்கி நாம் செல்லத் தொடங்கியிருக்கிறோம். வன்முறையும் வழக்குகளும் முடிவுக்கு வந்துவிட்ட புதியதொரு உலகத்தின் விடியலை நோக்கிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம்.
(விடியலுக்கான பயணம் தொடரும்) கட்டுரையாளர்,
தொடர்புக்கு:
sindhukumaran2019@gmail.com