

சனியாஸ்னைன் கான்
அந்தக் காலத்தில், மதினா யத்ரிப் என்று அழைக்கப் பட்டுவந்தது. மக்காவிலிருந்து வடக்கே 400 கிலோமீட்டர் தொலைவில் அது அமைந்திருந்தது. அப்போது மதினாவைச் சுற்றி யூத இனக்குழு மக்களும் வாழ்ந்துவந்தனர். இறைத்தூதர் தன் இறைப்பணியை ஆரம்பித்த பதினோறாம் ஆண்டு அது.
அல் ஆஸ், கஸ்ரஜ் ஆகிய இனக்குழுவினர் மக்கா பயணத்துக்கு வந்திருந்தபோது இறைத்தூதரின் திருச்செய்தியைக் கேட்டனர். ‘அரேபியாவில் விரைவில் இறைத்தூதர் தோன்றுவார்’ என்று அண்டை வீட்டுக்காரர்களாக வசித்துவந்த யூத இனக்குழுவினர் அடிக்கடி சொல்வது வழக்கம். “யூதர்கள் நம்மிடம் சொல்லிய இறைத்தூதர் இவர்தான்” என்று இறைத்தூதரின் உரையைக் கேட்ட ஒருவர் சொன்னார்.
யத்ரிப்பில் இருந்து வந்திருந்த ஆறு பேர் இறைத்தூதரின் உரைக்குப் பிறகு, அந்த இடத்திலேயே இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார்கள். அதே ஆண்டில் (கி.பி. 621), அதே ஆண்டில் மதினாவில் இருந்து மக்காவுக்குத் திரும்பியபோது, இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்தது. அவர்கள் இறைத்தூதரை அல்-அகாபா என்ற இடத்தில் சந்தித்தனர். மதினாவில் இறைப்பணிகளைத் தொடங்குவதைப் பற்றி அவர்கள் ஆலோசனை செய்தார்கள்.
இஸ்லாம் மார்க்க வரலாற்றில் இந்த நிகழ்வு, ‘அல் அகாபாவின் முதல் ஒப்பந்தம்’ என்று அறியப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, அவர்கள் ஒப்புக்கொண்ட விஷயங்கள்:
# ‘ஒருவனே இறைவன்’ என்ற கொள்கையின்படி, வேறெந்த கடவுளையும் அவர்கள் வழிபட மாட்டார்கள்.
# அவர்கள் ஒருபோதும் திருட மாட்டார்கள்.
# அவர்கள் ஒருபோதும் ஒழுக்கக்கேடாக நடந்துகொள்ள மாட்டார்கள்.
# அவர்கள் தங்கள் குழந்தைகளைத் தாங்களே கொல்லமாட்டார்கள்.
# அவர்கள் யார்மீதும் பொய்யாகக் குற்றம்சாட்ட மாட்டார்கள்.
# நற்காரியங்களைத் தொடர்வதில், அவர்கள் இறைத்தூதரின் கட்டளைகளைப் பின்பற்றுவார்கள்.
இந்த நிகழ்வுக்குப்பிறகு, யத்ரிப்பில் இஸ்லாம் மார்க்கம் வேகமாகப் பரவத் தொடங்கியது. இறைத்தூதர் தோன்றிவிட்டார் என்ற செய்தியும், தங்களுக்கு வழிகாட்டக்கூடிய இறை நூலான குர்ஆனைப் பெற்றதிலும் அங்கு வசித்துவந்த மக்கள் மனநிறைவை அடைந்தனர்.
(பயணம் நிறைவடைந்தது)
தமிழில்: என். கௌரி
(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்,’ குட்வர்ட்.)