நிலத்தில் முருகன் மலையில் சிவன்

நிலத்தில் முருகன் மலையில் சிவன்
Updated on
2 min read

நீல்கமல்

திருப்பரங்குன்றத்தில் முருகன், நிலத்தில் போரிட்டு அசுரர்களின் கர்வத்தை அடக்கினார். திருச்செந்தூரில், கடலில் போரிட்டு அசுரர்களின் ஆணவத்தை அழித்தார். அசுரர்களின் ஆணவத்தை அழிப்பதற்காக, விண்ணிலிருந்து போர்புரிந்த இடமே திருப்போரூர்.

திருப்போருரில் கந்தசாமி கோயிலுடன் பல சிறப்பு பெற்ற திருத்தலங்கள் அமைந்துள்ளன. நிலத்தில் முருகனும் சற்று தொலைவில் உள்ள குன்றின் மீது கைலாசநாதரும் எழுந்தருளியுள்ளனர். தற்போதைய கந்தசாமி முருகன் கோயிலை நிறுவிய சிதம்பர சுவாமிகளுக்கும் அவரது வழிதோன்றலான மௌனகுரு சாமிகளுக்கும் ஆலயங்கள் உள்ளன.

இதற்கு முன்பு இருந்த கோயிலைச் சுற்றி பனைமரக்காடாக இருந்து, பல இயற்கை சீற்றங்களால் ஆறு முறை புதையுண்டுள்ளது. தற்போதைய கோயிலை நிறுவியவர் சிதம்பர சுவாமி ஆவார். 15-ம் நூற்றாண்டில் வாழ்த்த சிதம்பர சுவாமி, மதுரை மீனாட்சி சொக்கநாதரின் பரம பக்தராக இருந்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் மீது பல பாடல்களையும் பாடியுள்ளார்.

ஒரு முறை கனவில் தோன்றிய இறைவன், காஞ்சி மாநகரத்துக்குக் கிழக்கே கடலருகில் பனைமரக் காட்டில் தாம் புதையுண்டு இருப்பதாகவும், அங்கு ஒரு கோயில் எழுப்புமாறும் கூறியுள்ளார். மதுரையிலிருந்து காஞ்சி வந்த சிதம்பர சாமிகள் தற்போது திருப்போரூர் என்றழைக்கப்படும் யுத்தபுரிக்கு வந்து சேர்ந்தார். ஒரு பனை மரத்தடியில் சுயம்புவாக காட்சியளித்த முருகப்பெருமானுக்கு திருகோயிலை எழுப்பினார்.

அபிஷேகம் கிடையாது

இங்கு காட்சியளிக்கும் முருகன் கந்தசாமி, சமராபுரி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். வங்கக் கடலை நோக்கியவாறு கிழக்கு திசையில் காட்சியளிக்கிறார். சுயம்புமூர்த்தியாக இருப்பதால் இங்குள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. அதனால், ஆமை பீடத்தில் மேல் உள்ள யந்திரத்தின்
மீது முருகப்பெருமானைக் குறிக்கும் பல பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை முடிந்த பின் இங்குள்ள யந்திரத்திற்கும் பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மூலவராக காட்சியளிக்கும் கந்தசாமிக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.

ஓம்கார அமைப்பு

கொடி மரத்துக்கு அருகில் உள்ள கோபுரத்திலிருந்து முருகனைத் தரிசிக்கும் வகையில் மூலவர் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. ஓம்கார அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தை அருணகிரிநாதர் போன்ற பல மகான்கள் பாடியுள்ளனர்.

நிலத்தில் முருகன் குன்றில் கைலாசநாதர்

திருப்போரூரில் மகன் சமதளத்தில் அருள்பாலிக்க, தந்தையான கைலாசநாதர் பாலாம்பிகையுடன் மலையில் காட்சியளிக்கிறார். இந்த இடம் பிரணவமலை என்று அழைக்கப்பட்டது.

சிதம்பரசுவாமி கோயில்

திருப்போரூர் கந்தசாமி கோயிலை எழுப்புவதற்கு முன்னர், மதுரையிலிருந்து தன்னுடன் கொண்டுவந்த சிவலிங்கத்தை வைத்து வழிபட்ட இடமே சிதம்பரசுவாமி கோயிலாகத் திகழ்கிறது. அங்கே சிதம்பரசுவாமியின் திருஉருவச் சிலையும் உள்ளது. அவர் வழிவந்த அவரது சீடர்களின் பீடமும் அமைந்துள்ளது. சிதம்பர சுவாமியின் சீடரான மௌனகுரு சாமியின் மடமும் சிதம்பர சுவாமி கோயிலின் அருகிலேயே அமைந்துள்ளது.

இவர் தன் வாழ்நாளில் பெரும் பகுதி,யாரிடமும் பேசாமல் இருந்தாக கூறுகின்றனர். சிதம்பர சாமியின் முதல் சீடரான இவர் இங்கு ஜீவ சமாதி அடைந்து விட்டதாக கூறுகிறார் அந்த மடத்தை நிர்வகித்து வருபவர். முருகனும் கைலாச நாதரும் மகான்களும் அருள்புரியும் நிலமாக திருப்போரூர் திகழ்கிறது.கைலாசநாதர் கோயில்முருகன் கோயில்

படங்கள் : நீல்கமல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in