அகத்தைத் தேடி 08: சந்தோஷத்துக்குள் குதித்துவிடு!

அகத்தைத் தேடி 08: சந்தோஷத்துக்குள் குதித்துவிடு!
Updated on
2 min read

தஞ்சாவூர்க்கவிராயர்

டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ் சென்னை மயிலாப்பூரில் வசித்த பழம்பெரும் தேசபக்தர். ஆங்கிலேய அரசாங்கம் பாரதியை கைதுசெய்யத் தேடிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் பக்கிங்ஹாம் கால்வாய் வழியே படகு மூலம் பாரதியார் புதுவைக்குத் தப்பிச்செல்வதற்கு உதவினார்.

இப்படிப்பட்டவருக்கு ஞான குருவாக அமைந்தவர், எழுதவோ, படிக்கவோ தெரியாத ஒரு விதவை பிராமணப் பெண். சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் (இப்போது புதுப்பேட்டை) சட்டநாதர் மடத்தின் அதிபதிக்கு ஒன்பது வயதில் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்ட அனந்தாம்பா தனது இருபது வயதில் விதவையானார்.
இவர் தலையை மழித்து உடம்பில் வெள்ளைச்சேலை சுற்றி தனிமையில் ஒதுக்கி வைத்தது அன்றைய சமூகம். தனிமை இவரை விரக்தியில் தள்ளிவிடவில்லை. மொட்டை மாடியில் சதா சர்வகாலமும் தியானத்தில் மூழ்க வைத்தது.

நஞ்சுண்டராவ், அனந்தாம்பா தங்கியிருந்த மடத்துக்கு ஒரு நோயாளியைப் பார்க்க வந்தார். அப்போது மொட்டை மாடியிலிருந்து ஒரு பெண்ணின் உரத்த சிரிப்பொலி கேட்டது.
யாரது? என்று விசாரித்தவருக்கு “அது ஒரு பைத்தியம்! கணவர் இறந்த விரக்தியில் இப்படித்தான் அடிக்கடி சிரிக்கும்!” என்று தங்கியிருந்தவர்கள் சொன்னார்கள். வீடு திரும்பிய பிறகும் அந்த சிரிப்பொலி நஞ்சுண்டராவைச் சுற்றிவந்தது.

எப்போதும் சந்தோஷம்

கோமளீஸ்வரர் கோயில் கோபுர வாசல் அருகே புழுதியிலும் மண்ணிலும் அழுக்கேறிய வெள்ளைச் சேலையுடன் போவோர் வருவோரைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார் அனந்தாம்பா. உரத்த குரலில் ஏன் இப்படி சிரிக்கிறீர்கள் என்று அவரை நெருங்கிக் கேட்டார் நஞ்சுண்டராவ்.

“கோயிலுக்கு வருகிற இந்த அழுக்கு மனிதர்களைப் பார்த்து சிரிக்கிறேன். இது மட்டும் காரணமில்லை. எனக்கு எப்பவும் சந்தோஷமாக இருக்கிறது. எதைப் பார்த்தாலும் சிரிப்பா இருக்கு. மனுஷனோட லட்சணமே அதுதான். ஆனந்தமா இருக்கறதுதான். ஆனந்தம்னா சாதாரண ஆனந்தமில்லை பரமானந்தம்...”.
டாக்டர் நஞ்சுண்டராவ் திகைத்துப்போனார். கை கூப்பி வணங்கினார்.

“சந்தோஷமா இரு. சந்தோஷம்னா பெரிய சந்தோஷம் அதுக்கும் மேலே. பெரிய சந்தோஷம் இருக்கு. பேசாம அதுக்குள்ளாற குதிச்சுடணும். புரியுதா?” என்றார் அம்மையார். ஆகாயத்தைத் துழாவியது அவர் பார்வை. “அதோ அந்த வெளி பரவெளி. பரமானந்த வெளி” என்று குறிப்பாலும் உணர்த்தினார்.

ஸ்ரீ சக்கர உபாசனை செய்து பக்குவம் அடைந்தவர் அனந்தாம்பா. அதனாலேயே சக்கரத்தம்மா என்று அழைக்கப்பட்டு பின்னர் எல்லாரும் அவரை சக்கரையம்மா என்றே அழைக்கலாயினர்.

அந்நியம் ஒன்றும் இல்லை

“அகண்டாகாரமாகி அசைவற்றதாய் எங்கும் நிறைந்ததாய் இருக்கின்ற ஸ்வரூபமே எனக்கு அந்நியமாய் ஒன்றுமில்லை” என்று சக்கரையம்மாவின் வாய் முணுமுணுத்தது. மிகவும் கடினமான வேதாந்த வினாக்களுக்கு நஞ்சுண்டராவ் இத்தனை நாளாகத் தேடிக்கொண்டிருந்த விடைகளை எளிமையாக எடுத்துரைத்தார் சக்கரையம்மா. “இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதிரு. உடம்பல்ல நீ! உடம்புக்குள் நீ!” என்று அடிக்கடி சொல்வார். மெளனத்தின் மூலமே கடவுளுடன் பேச முடியும் என்பதை நஞ்சுண்டராவுக்கு உணர்த்தினார்.

சக்கரை அம்மா சிலவேளை மாடிக்குச் சென்று சூரிய உதயத்தின் அழகில் மெய்மறந்து சூரியனை நோக்கி இருகரம் நீட்டி அழைப்பாராம். சூரியனைக் குழந்தையாகவே மடியில் ஏந்திவிடும் அளவுக்கு அவருக்குள் கருணை சுரந்திருக்கிறது. அருள் நெறியாளர் ஒருவர் இவருடன் உரையாடும்போது தனது குருவுக்கு ஞான விழிப்பு உண்டாக ஒரு குழந்தையின் அழுகுரலே போதுமானதாக இருந்தது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுபோலவே அம்மாவும் சின்னச் சின்னக் காட்சிகளிலும் சப்தங்களிலும் லயித்து விடுவது வழக்கம். அதிகாலைத் துயில் எழுந்து, குளிப்பது, தன்னிடமிருந்த ஸ்படிக லிங்கத்துக்கு பூஜை செய்வது என்ற நியமத்தைத் தவறாது பின்பற்றி வந்தார். இவரது குருவான நட்சத்திர குணாம்பாள் என்பவர் “விவேகம் உதயமாகும் போது விடியற்காலை குளிப்பது என்னத்துக்கு? லிங்க பூஜைதான் எதற்கு? அதை விட்டெறிந்துவிடு” என்று கூறினாராம். தான் உயிருக்குயிராய் பூஜித்து வந்த ஸ்படிக லிங்கத்தை உடனேயே அருகிலிருந்த சுனையில் விட்டெறிந்தார் அம்மா. அதிகாலைக் குளியலையும் பூஜை புனஸ்காரங்களையும் விட்டொழித்தார்.

நல்லது கெட்டது

ஸ்ரீ சக்கரை அம்மாவை தரிசிக்க வந்த ஒருவர் மிகவும் ஒழுக்கக்கேடான சொற்களையும் பைத்தியக்காரத்தனமான வசவுகளையும், மரியாதை சிறிதுமின்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசுவதை அம்மா புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தார். புனிதமான இந்த இடத்தில் அசுத்தமாக இவர் பேசுவதை நீங்கள் எப்படி அனுமதிக்கலாம் என்று வெகுண்ட நஞ்சுண்டராவை நோக்கி சிரித்தபடி, “மகனே இந்த வார்த்தைகளை சகித்துக்கொள்வதுதான் ஆன்மிக முன்னேற்றத்துக்கு வழி.

உண்மையான உயர்நிலையை அடைய வேண்டுமென்றால் இது நல்லது, இது கெட்டது என்ற எண்ணத்தை ஒழித்துவிடு. எல்லாவிதமான பேச்சுக்களும் ஒன்றே. எதுவும் உன்னை பாதிக்க இடம் தராதே” என்றாராம். டாக்டர் நஞ்சுண்டராவ் இதை உத்தரவாய் ஏற்று வாழ்நாள் முழுவதும் அதன்படி நடந்தார். சக்கரை அம்மா, தூல உடம்போடு ஆகாயத்தில் பறந்து சென்றதைக் காட்சியாகப் பார்த்து பதிவுசெய்துள்ளனர்.

தமிழ்த்தென்றல் திரு.வி.க., தன்னுடைய உள்ளொளி என்ற நூலில் சக்கரையம்மாள் பறந்துவந்து, தான் வசித்த மாடியில் நின்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அப்போது சென்னை அருங்காட்சியகத்தின் தலைவராக இருந்தவரும் மானுடவியல் அறிஞருமான எட்கர் தர்ஸ்டன் இந்த நிகழ்ச்சியைப் பற்றி பதிவுசெய்துள்ளார்.

திருவான்மியூரில் ஸ்ரீ சக்கரை அம்மாவுக்கென அமரர் நஞ்சுண்டராவ் அழகிய ஆலயம் எழுப்பியுள்ளார். இங்கு அம்மாவின் உயிர்க்களை ததும்பும் உட்கார்ந்த நிலையிலான திருவுருவச் சிலையும் தியான மண்டபமும் உள்ளன. அங்கே அமர்ந்து தியானம் செய்தால் உடம்பும் மனமும் லேசாகி உலகியல் கவலைகளிலிருந்து விடுபட்டு ஆனந்தமாகப் பறக்கும் உணர்வு உண்டாகிறது. சக்கரை அம்மாள் பறந்ததில் ஆச்சரியமில்லை.

(தேடல் தொடரும்.... )
கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com சக்கரை அம்மா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in