

உஷாதேவி
மதுராவை ஆண்ட கம்ச மன்னனின் சித்தப்பா மகள் தேவகி. தனது தங்கை தேவகியின் திருமணத்தின்போது மைத்துனர் வசுதேவரையும் அழைத்துக்கொண்டு அவர்களைப் புகுந்த வீட்டுக்கு விடப்போனான் கம்சன். அத்தனை பிரியம் கொண்ட கம்சனின் மனத்தை ஒரு அசரீரி மாற்றியது. “ஹே கம்சனே, தேவகியின் கர்ப்பத்தில் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தைதான் உனக்கு யமன்.”
இதையடுத்து கம்சன் வெகுண்டெழுந்து தேவகியைக் கொல்ல வர, வசுதேவரோ, பிறக்கும் குழந்தைகளையெல்லாம் தருகிறேன் என்று உறுதிமொழி கொடுத்தார். இதைக் கேட்டு தேவகியும் வசுதேவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தேவகி கர்ப்பவதியாகி ஆறு குழந்தைகளை வரிசையாக பெற்றெடுத்தாள். அண்ணன் கம்சன், அவள் கண் முன்னே பலியிடுவதைக் கண்டு மனம் பதைத்து வாடும் வேளையில் ஏழாவதாக பலராமரைக் கர்ப்பம் தரித்து, மாயாதேவியான ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றிவைத்தாள்.
பெற்ற குழந்தைகளைப் பறிகொடுத்துவந்த அந்தப் பேதை மனம் உடைந்து வசுதேவரிடம் கதறி அழும்போதெல்லாம் வசுதேவரின் ஆறுதல் வார்த்தைகள் அவளை சற்றே அமைதிப்படுத்தும்.
அவளிடம் வசுதேவர் இடைவிடாது நாராயண நாமத்தை ஜபிக்க சொன்னார். எட்டாவதாக கிருஷ்ணன் கர்ப்பத்தில் தோன்றினான். உலகத்தையே சுமக்கும் எம்பெருமானை தனது வயிற்றில் தேவகி சுமந்தாள். அத்தனை கொடுமைகளைத் தாங்கி அவள் மதுராவின் சிறைச்சாலையில் பொறுமை காத்ததால் கிருஷ்ணன் பிறந்தான்.
தேவகி போல் அல்லவா தெய்வத்தைப் பிரசவிக்க வேண்டும். நான் இங்கே இருந்தால் என்ன? எங்கே போனாலும் என்ன நேர்ந்துவிடப் போகிறது? என்று புலம்புகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com