

தஞ்சாவூர்க்கவிராயர்
ஞானிகளும் சித்தர்களும் மழைத்துளிகளை மட்டுமே உணவாக உண்டு, பூமியின் மிகப்பெரிய உயரங்களில் மட்டுமே தங்கும் சக்கரவாகப் பறவையைப் போன்றவர்கள்தான். மகான் அரவிந்தர் அப்படிப்பட்ட அபூர்வமான பறவை. அவரை நேரில் பார்த்தவர்கள் மகா புருஷனின் ஒளியை அவரிடம் கண்டிருக் கிறார்கள். அப்போது தங்களுக்கு ஏற்பட்ட பரவச நிலையைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அரவிந்தர் வருகை
1905-ல் புதுவைக்குப் படிக்க வந்த அமுதன் என்ற பள்ளி மாணவருக்கு புதுவைக்கு அரவிந்தர் ரகசியமாக வந்து சேர்ந்திருக்கிறார் என்ற செய்தி தெரியவந்தது. அரவிந்தரின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவரைப் பார்க்க வேண்டும் என்ற பேரவா அவர் மனதில் உதித்தது. இரவு பகலாக இதே நினைவுடன் இருந்திருக்கிறார்.
பிற்பாடு அரவிந்தரை நேரில் சந்தித்து அவருடன் வாழும் வாய்ப்பும் கிடைத்தது. அரவிந்தர் உடனான அனுபவங்களை ஒரு எளிய சிறிய நூலில் பதிவு செய்திருக்கிறார். சற்றே பிழைபட்ட சாதாரணத் தமிழ் நடை. ஆனால், அவரது தேடலின் தீவிரத்தை புலப்படுத்தும் வாக்கியங்கள்; திரும்பப் படித்துத் திருத்தப்படாத பிரதியாக உள்ளது.ஆனாலும் அரவிந்தரை முதன் முதலில் பார்த்தது பற்றிய அவரது பதிவு அழகானது. அற்புதமானது. ஆன்மிக உணர்வின் குமிழி ஒன்று உடைவதுபோல் இருக்கிறது.
அரவிந்தரின் அகம்தேடி
“ஒருநாள் சாயங்காலம் நண்பர் கிருஷ்ணசாமி செட்டியாருடன் அரவிந்தரின் அகத்தைத் தேடிக்கொண்டு போனேன். மிஷன் தெருவில் துப்ளெக்ஸ் வீதிக்கு அருகில் மேலண்டை பார்த்த ஒரு ஒட்டு வீடு. இந்த வீட்டுக்கு மூன்று முற்றங்கள். ஒவ்வொரு முற்றத்தைச் சுற்றிலும் நான்கு தாழ்வாரங்கள். அரவிந்தருடைய அறை முன்வாசலை விட்டு வெகு ஒதுங்கி இரண்டாவது கட்டில் இருந்தது. அரவிந்தர் தினம்தோறும் சாயந்தரம் சுமார் ஐந்து மணியிலிருந்து, எட்டு மணிவரை முதல்கட்டில் உள்ள முற்றத்தைச் சுற்றிச் சுற்றி நடப்பது வழக்கமென்று சொல்லக் கேள்வி.
செட்டியாரும் நானும் அரவிந்தருடைய வீட்டை அண்டியபொழுது கதவு தாழிட்டிருந்தது. நாங்கள் அச்சத்துடன் கதவை இருவருமாகத் தட்டினோம். அரவிந்தர் வேகமாக வந்து கதவைத் திறந்துவிட்டு தம் முகத்தைப் பிறர் பார்க்காத வண்ணம் விரைந்து சென்றுவிட்டார். அவர் முதுகின் மீது விழுந்த தொங்கும் நீண்ட கேசமும் வர்ணிக்க முடியாத அழகிய சிறு பாதங்களுமே அந்த மாலை தெய்வ மோகத்தை எட்டிவிட்டதாக என் உள்ளம் ஆனந்தமடைந்தது. நான் நிதானத்துக்கு வர வெகுநேரம் பிடித்தது.”
மற்றொரு காட்சி:
“அரவிந்தர் இல்லத்தில் தங்கியிருந்த நாகேந்திரநாத் என்பவர் காசநோய்வாய்ப் பட்டிருந்தார். சாயங்கால வேளைகளில் பின்கட்டிலிருந்து அரவிந்தர் முன் கட்டுக்கு வந்து கூடத்தில் பாய்விரித்துப் படுத்திருக்கும் இந்த நோயாளி அருகில் அதே பாய்மீது உட்கார்ந்து நோய்வாய்ப்பட்டவரை பல கேள்விகள் கேட்டு ஆவன செய்துவிட்டு தன் அறைக்குச் செல்வாராம். அரவிந்தருடன் தங்கியிருந்த அரவிந்தரை வ.ரா. அமுதன் தனியே சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார்.
என்னைக் கூப்பிட்டார்கள், எழுந்தேன். அரவிந்தர் உட்கார்ந்திருந்த மேஜையை அணுகினேன். வீ்ட்டின் ஓட்டுக் கூரையிலிருந்து தொங்கும் ஒரு அரிக்கேன் லாந்தர் இரவில் இருட்டை அரைகுறையாய் நீக்கிக்கொண்டிருந்தது. அரவிந்தரின்முன் நின்று கைகூப்பி வந்தனம் செலுத்தினேன். அரவிந்தர் கண்களோ என் கண்ணுக்கு லாந்தர் வெளிச்சத்தைவிட அதிகமாக ஜ்வாலித்து என் உள்ளத்து இருட்டை எல்லாம் ஒரு கணத்தில் போக்கி அங்கு ஓர் மூல கிருகத்தில் அவர் மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிட்ட மாதிரி தோன்றியது.’’
அமுதன், அரவிந்தரின் சீடராக ஆகி பிரதம சீடராக உயர்ந்து அரவிந்தருடன் தங்கிவிட்டார். அவருக்கு அரவிந்தர், அமிர்தா என்று பெயர் சூட்டுகிறார். அமிர்தா 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரம நிர்வாகியாகப் பணியாற்றித் தமது எளிமையாலும், சரள சுபாவத்தாலும், அயராத உழைப்பாலும் ஆசிரமவாசிகள் அனைவரின் அன்புக்கும் உரியவர் ஆகிறார்.
பாரதியாரிடம் பழக்கம்:
குருநாதரின் அண்மையை அவர் உள்ளம் அடைய பாரதியார், அமிர்தாவுக்கு துணையாக அமைந்தார். பாரதியாரோடு நெருங்கிப் பழகப் பழக அமிர்தாவின் அனுஷ்டானங்கள் எல்லாம் மரத்திலிருந்து பழுத்த இலைகள்போல் உதிர்ந்தன. “அவ்வளவு நேரம் அரவிந்தரிடம் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்” என்று பாரதியாரிடம் கேட்டால், சக்தி உபாசனை பற்றி அரவிந்தரிடம் கேட்டதாகக் கூறுவாராம்.
அதிமானசதளம்
புதுவையிலிருந்து படிப்பைத் தொடர சென்னை வந்தாலும் புதுவை நினைவுதான் அமிர்தாவுக்கு. “நான் எங்கிருந்த போதிலும் கடற்கரையோ, ஹைகோர்ட் மைதானமோ பச்சையப்பன் கல்லூரியோ, பேகர் தெருவோ திருவல்லிக்கேணியோ எங்கிருந்த போதிலும் சரி என் உள்ளத்தில் அரவிந்தர் ஞாபகம் ஒன்றே கனன்று கொண்டிருந்தது” என்று எழுதுகிறார் அமிர்தா.
யோக சாதனையின் பொருட்டு அரவிந்தர் அமிர்தாவுக்கு உபதேசித்த குறிப்பு எல்லோருக்குமானது. அகத்தேடலுக்கு வழிகாட்டுவது “தலைக்குமேல் சிறிது உயரத்தில் அதிமானசதளம் இருக்கிறது. அதில் நீ ஒரு முனைப்படு. உனக்குத் தேவையானவை அதிலிருந்தே கிடைக்கும்” இந்த யோக முறையைக் கையாண்டு இரவில் நிம்மதியான தூக்கமும் பகலில் வேண்டிய அளவுக்குத் தெம்பும் உற்சாகமும் தவறாது கிடைத்ததாக அமிர்தா கூறுகிறார்.
“எது நேர்ந்த போதிலும் சம்பவத்தை விட்டு விலகி சாட்சிபூதனாக இருந்து பார்க்கக் கற்றுக்கொள். நிகழ்ச்சியோடு கலந்துகொண்டு உழலாதிரு” என்று அரவிந்தர் சொல்வாராம். “இந்த மந்திரம் ஒன்றே என் சிற்றுயிர்க்கு உற்ற துணையாக இருந்து வருகிறது” என்ற குறிப்போடு அமிர்தாவின் சிறிய நூல் நிறைவு பெறுகிறது.
தேடல் தொடரும்...
கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com