

கோம்பை எஸ்.அன்வர்
மதங்களைக் கடந்து சூபி ஞானிகளை மக்கள் நேசிப்பது ஒன்றும் புதிதல்ல. இருந்தாலும் நாகூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஒரு சூபி ஞானி மீது 300 கிலோ மீட்டருக்கு அப்பால், சென்னை ஆல்காட் குப்பத்தில் வாழும் மீனவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஆச்சரியப்படுத்தியது.
“நாங்க எல்லா சாமியையும் கும்பிடுவோம். ஆனால், நடுக்கடல்ல ஒரு பிரச்சினைன்னா நாகூர் ஆண்டவர்கிட்டதான் நாங்க வேண்டிக்குவோம். அப்பிடியே காத்து திசை மாறி எங்களைப் பத்திரமா கரை சேத்திரும்” என்று ஆல்காட் குப்பத்தில் வசிக்கும் மனோகரன் கூறுகிறார். சென்னையில் மட்டுமல்ல; நூறு கிலோமீட்டர் தள்ளியுள்ள புதுச்சேரியின் வீராம்பட்டினம், அதையும் தாண்டி காரைக்கால் என்று நீண்டிருக்கும் தமிழகக் கடற்கரைக் கிராம மீனவர்களிடையே நிலவும் இந்த நம்பிக்கை, எங்களை வியப்படையவைத்தது.
கடல் தாண்டிய வழிபாடு
வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. மீனவர்கள் மட்டுமல்ல; 19ஆம் நூற்றாண்டில் தமிழகக் கடற்கரையை விட்டுக் கப்பலேறிய பலரும் பத்திரமாக ஆழ்கடலைக் கடந்து, தூர தேசங்களைச் சென்றடைய நாகூர் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தனர் என்று புலப்படுகிறது. கரையிறங்கியவுடன், அந்த இடங்களில் நன்றிக் கடனாக, நாகூர் மீரான் என்றும் அறியப்படும் நாகூர் ஆண்டவருக்கு நினைவிடங்களையும் அமைத்திருக் கிறார்கள்.
தமிழகக் கரைகளுக்கு அப்பால் பல்வேறு கண்டங்களில் இப்படி விரவிக்கிடைக்கும் நாகூராரின் நினைவிடங்கள், 19-ம் நூற்றாண்டில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த, வயிற்றுப் பிழைப்புக்காகக் கூலித் தொழிலாளிகளாகப் புலம்பெயர்ந்த தமிழரின் வழித்தடங்களை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. தென்கிழக்கு ஆசியப் பகுதியில் மலேசியாவில் உள்ள பினாங் தீவிலிருந்து அமெரிக்கக் கண்டத்து கரீபியத் தீவுகள்வரை, அந்த வரலாற்று அத்தாட்சிகள் இன்றளவும் உள்ளன. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம், கனடாவரை நாகூர் மீரானின் தாக்கம் விரிவடைந்துள்ளது.
நாகூர் வருகையும் நம்பிக்கைகளும்
பதினாறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் உள்ள மாணிக்கப்பூரில் ஷாகுல் ஹமீதாகத் தனது ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியவர் நாகூர் மீரான். மெக்கா உட்பட மேற்கு ஆசியா, சீனம், தென்கிழக்கு ஆசியா என்று பல இடங்களுக்குச் சென்று விட்டு, இறுதியில் தன் சீடர்களுடன் அவர் தமிழகம் வந்தார். தென் மாவட்டங்களில் பல பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துவிட்டு அவர் தஞ்சை வந்தபோது, தீராத நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த அப்பகுதியின் மன்னர் அச்சுதப்ப நாயக்கரைக் குணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு நன்றிக் கடனாக ஷாகுல் ஹமீது நாயகம் அவர்களுக்கு நாகப்பட்டினம் அருகில் உள்ள நாகூரிலேயே தங்க அச்சுதப்ப நாயக்கர் இடமளித்தார். இதில் சுவாரசியமானது என்னவென்றால், ஷாகுல் ஹமீது நாயகம் நாகூரை வந்தடைந்த நேரம், தமிழகக் கடல்வழி வணிகர்களுக்கு, குறிப்பாக தமிழ் முஸ்லிம் வணிகர்களுக்கு போர்த்துகீசிய கப்பற்படை பெரும் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தது.
நாகப்பட்டினத்தை மையமாகக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டிருந்த போர்த்துகீசியரின் அடாவடித்தனத்தால் துன்புற்றிருந்த மரைக்காயர்களுக்கு அந்த சூபி ஞானியின் நாகூர் வருகை அருமருந்தாக அமைந்தது. அவரது வருகையால் மீனவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பயனடைந்தார்கள். அதிசயங்கள் பல நடந்ததாகவும் நம்பப்படுகிறது. ஷாகுல் ஹமீது அவர்கள் கரையிலிருந்தபடியே முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வீசி, கடலில் மூழ்கிக்கொண்டிருந்த கப்பலின் ஓட்டையை அடைத்துக் காப்பாற்றினார் என்பது அந்த அதிசயங்களில் ஒன்றுதான்.
அதிசயங் களுக்கு அப்பால் அவரது ஆன்மிகம், மதங்களைக் கடந்து மன்னர் முதல் சாதாரண மக்கள்வரை பல்வேறு தரப்பினரையும் சென்றடைந்தது. அவர் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் நாகூர் தர்காவுக்குப் பல மன்னர்களும் மக்களும் நன்றிக் கடனாகப் பல காணிக்கைகளைச் செலுத்தினர். தஞ்சை நாயக்கர்கள், மராத்திய மன்னர்கள், நவாபுகள் ஆகியோர் தர்காவுக்கு ஏராளமான கொடைகளை வழங்கியுள்ளனர். நாகூர் தர்காவில் இருக்கும் ஐந்து மினாராக்களில் 131 அடியில் காணப்படும் மிக நீளமான மினாராவானது, 1750-களில் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் பிரதாப் சிங் போன்ஸ்லேவின் கொடை. கோவிந்தசாமி செட்டி, பழனியாண்டிப் பிள்ளை, மகாதேவ அய்யர், காசியப்ப ராவுத்தர், குஞ்சு மரைக்காயர் என்று எண்ணற்ற பலரின் கொடைகளும் இதில் அடங்கும்.
மதம் கடந்த பெருஞானி
“கரீபியத் தீவுகள், மதராசிகள் அல்லது தென் இந்தியர்கள் ஆகியோரது கோயில்களில் நாகூர் மீரான் மிக முக்கிய அங்கமானார். பிரெஞ்சு கரீபியத் தீவுகளான ‘குவடுலோப்’பிலும் ‘மார்டினுக்’கிலும், நாகூர் மீரானைக் கொடி பறக்கும் பாய்மரப் படகின் வடிவமாகப் பார்க்கின்றனர். இஸ்லாமி யர்கள் பலரும் புனிதமாகக் கருதும் 786 என்ற எண் அந்தப் படகில் வரையப்பட்டிருக்கும்” என்கிறார் பல்துறைக் கலைஞரும் ஆய்வாளரருமான சுரேஷ்பிள்ளை.
இன்றும்கூட, ஆண்டுதோறும் தமிழகத்தில் நாகூர் மீரான் நினைவாக நடைபெறும் சந்தனக்கூடு விழாவின் தொடக்கமாகப் பழைய மரபைப் பின்பற்றி, கொடிகளுடன் கப்பல்போல் அலங்கரிக்கப்பட்ட படகுகள், நாகப்பட்டினத்தின் வீதிகளில் சுற்றிவிட்டு, நாகூர் நோக்கி நெடுஞ்சாலையில் பவனிவந்து நாகூர் தர்காவுக்கு அணிவகுத்துச் செல்வது, கரீபியத் தீவுகளின் நாகூர் மீரான் சித்தரிப்புடன் ஒத்துப்போகிறது. இந்த அலங்காரப் படகுகள் ஊர்திகளின் மீது அமர்த்தப்பட்டு, நாகூரின் குறுகிய தெருக்களைச் சுற்றி வந்து இறுதியாக தர்கா வாசலில் வந்து நிற்கின்றன.
பின்னர் மினாராக்களில் கொடியேற்றப்படுகிறது. அதிலிருந்து விழா தொடங்கியதாகக் கருதி, பல்வேறு மதங்களை, இனங்களை, சாதிகளைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக முஸ்லிம் அல்லாத குடும்பத்தினர் பல தலைமுறைகளாக வெவ்வேறு நாட்களில் முதல் மரியாதைகளை ஏற்றுக்கொள்ளும் வைபவம் அரங்கேறுகிறது. நாகூர் மீரானைப் பொறுத்தவரை நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தை விட்டு புலம்பெயர்ந்த தமிழரின் கடல் பயணப் பாது காவலராகவும், அவர்கள் சென்ற இடங்களை இன்றும் நமக்கு அறிவிக்கும் அத்தாட்சியாகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார்.
படங்கள் : அன்வர், ஹரிணி குமார்