

சிந்துகுமாரன்
மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேயர் சாகாவரம் பெற்றவர். என்றும் பதினாறு வயதாக இருப்பவர். சிவனிடம் சரணடைந்து காலனை வென்றவர். உருக்கொண்டு, நீண்ட காலம் இருந்து, பின் கடைசியில் பிரளயத்தில் அழிந்துபோகும் உலகங்கள் பல கண்டவர்.
ஒரு அகிலம் அழிந்து இன்னொரு அகிலம் தோன்றுவதற்கு இடையிலான காலத்தில் உலகங்களனைத்தும் பிரளய நீரில் கரைந்துபோய், எங்கும் வெறும் நீர் மட்டும் வியாபித்து நின்றது. தான் சிரஞ்சீவியாக இருந்தாலும் இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் மனம் சஞ்சலத்தில் மூழ்கியது. எதுவும் நிலைப்பதில்லை என்பது அவர் மனத்தைக் கலங்கச் செய்தது.
ஒருமுறை அவ்வாறு அகிலமனைத்தும் பிரளயத்தில் கரைந்துபோய் எல்லாம் வெறும் நீர்ப்பரப்பாக விரிந்திருந்தது. அப்போது அந்த வெள்ளத்தில் ஒரேயொரு ஆலிலை மட்டும் மிதந்து வந்தது. அதன் மேல் பாலகிருஷ்ணன், சின்னஞ்சிறு குழந்தையாகத் தன் கால் கட்டைவிரலைச் சுவைத்துக்கொண்டு படுத்துக்கொண்டிருக்கிறான். அதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் மார்க்கண்டேயர். அப்போது கிருஷ்ணன் ஆழமாகச் சுவாசத்தை உள்ளிழுக்கிறான். மார்க்கண்டேயர் அந்தச் சுவாசத்துடன் கிருஷ்ணனுக்குள் போய்விடுகிறார்.
வெளியே அகிலமனைத்தும் அழிந்துபோய் வெறும் வெள்ளக் காடாக இருக்கிறது. ஆனால் கிருஷ்ணனுக்குள் அகிலங்கள் அனைத்தும் விரிந்திருக்கின்றன. பூலோகம், தேவலோகங்கள், பாதாள லோகங்கள்; கந்தர்வர்கள், யட்சர். கின்னரர், அப்ஸரஸ்கள்; பட்சிகள், மிருகங்கள், மனித ஜீவன்கள்; பின் தேவர்கள், என அனைவரும் அங்கே இருக்கிறார்கள். எல்லா உலகங்களும் எல்லா ஜீவன்களும் அங்கே இருக்கின்றன.
எதுவும் அழியவில்லை என்னும் உண்மை மார்க்கண்டேயருக்குத் தெரிகிறது. தோன்றி, இருந்து. அழிந்து போவது என்பது காலவெளிச் சட்டகத்துள் இருக்கும் புறவுலகில் உண்மையாக இருந்தாலும், கிருஷ்ணனுக்குள்ளே காலதேசமற்ற பரவெளியில் எல்லாம் அழிவற்று நிலையாக இருக்கும் உண்மை தெளிவாகிறது. மார்க்கண்டேயரின் மனச்சஞ்சலம் தீர்ந்துபோகிறது. அவனே அழிவற்ற பரம்பொருளின் திவ்ய ஸ்வரூபம் என்னும் உண்மை புலனாகிறது.
வழிகாட்டிக் குறிப்புகள்
அகிலம் என்பது புலனனுபவம். அதனால் உலகம் என்பது உணர்வுநிலையில்தான் இருக்கிறது. சிருஷ்டி-பிரளயம் என்பது உணர்வுநிலையில்தான் நிகழ்கிறது. உள்ளடக்கமில்லாமல் போகும்போது, சுத்த உணர்வுநிலை மட்டுமே மிஞ்சுகிறது. அந்த உணர்வுநிலை பிரபஞ்ச ரீதியானது என்பது புரியும்போது, தானே, அந்த தூய உணர்வுநிலை தான் என்னும் உண்மை தெளிவாகிறது.
புராணங்கள் எல்லாம் பெரும்பயணத்தின் வழிகாட்டிக் குறிப்புகள்; வரைபடங்கள். அது என்ன பெரும்பயணம்? ஜீவாத்மா பரமாத்மாவைக் கண்டு சேர்தல்; சுயவிழிப்பு அடைதல்; கடவுளைக் கண்டுகொள்ளுதல்; ஒளிபெறுதல்; பிறவாமை அடைதல்; சிவலோகப் பிராப்தி; வைகுண்டப் பதவி அடைதல்; நிர்வாணம் அடைதல்; பிரம்மத்தை அடைதல்; ஆத்மானுபவம் அடைதல்; மோட்சம் அடைதல்; பரலோக சாம்ராஜ்யம் அடைதல்; காலம் கடந்து செல்லுதல்; முக்தி அடைதல், என்று இந்தப் பெரும்பயணத்துக்குப் பல பெயர்கள் உண்டு.
பார்வையாளனாக நிலைப்பது
தனியொரு உயிராய்ப் பிறந்து, உடலாகத் தன்னைக் கருதிக்கொண்டு, உணவு, உடை, இருப்பிடம், இவற்றுக்குப் பாடுபட்டு உழல்வது பயணத்தின் முதற்கட்டம். பின் உறவுப்பின்னல்களில் சிக்கித் தவித்து, அனுபவவெளியில் உருண்டு புரண்டு, துன்பச் சுழலில் சிக்கிச் சுழன்று, கடைசியில், ‘நான் யார், இது என்ன இடம், நான் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறேன்,’ என்று கேள்விகள் எழுவது இரண்டாம் கட்டம்.
முதலில் வெளியே நூல்களிலும், பிரசங்கங்களிலும், மற்றவர்களின் அனுபவப் பதிவுகளில் விடை தேடி, அது சாரமற்ற வெறும் கருத்துக்குவியல் என்றறிந்து அலுத்துப் போவது மூன்றாம் கட்டம். பிறகு உள்ளே திரும்பித் தன்னுள்ளேயே விடையைத் தேடி அதுவும் அலுத்துச் சோர்ந்துபோய், மனப் பிரயத்தனங்களையெல்லாம் கைவிட்டு, ‘என்னால் எதுவும் ஆகாது,’ என்ற தன்னறிவில் தனக்குள்ளேயே தான் சரணடைந்து, அடங்கி, வெறும் பார்வையாளனாக நிலைப்பது நான்காம் கட்டம் என்று கொள்ளலாம்.
அதன் பிறகு, பிரக்ஞையில், உணர்வுவெளியில், மனத்தளத்தி லிருந்து உலகம் அனுபவமென எழுந்து, இருந்து, பின் மீண்டும் அங்கேயே போய் விழும் முறைப்பாட்டைக் கண்டு தெளிவது அடுத்த கட்டம். கடைசியில். எழுந்து இருந்து விழும் சுழற்சியில் தான் ஒரு அங்கமில்லைஎன்பது தெரியவருகிறது. தான் வெறும் பார்வையாளன் என்றும், அந்தச் சுழற்சியில் ஒவ்வொரு முறையும் ஏற்படும் இடைவெளியில் அந்த முறைப்பாடு கூட இல்லாமல் போய், பார்வையாளனாகக் கூட இல்லாமல், காலமற்று, இடமற்று, விரிந்திருக்கும் சுத்தப் பிரக்ஞை (தூய அறிவுணர்வு) என்று தன்னை உணர்ந்துகொண்டு, அழிவற்ற பரம்பொருளும் தானும் அடிப்படையில் ஒன்றே என்னும் உண்மையை உணர்ந்துகொள்வதுடன் அந்தப் பயணம் முடிவடைகிறது.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லும் பயணம் இல்லை இது. ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்துக்குச் செல்லும் பயணமுமில்லை. அறியாமை என்னும் பொய்யியிலிருந்து பேரறிவான உண்மைக்கும், அகத்தில் நிறைந்திருக்கும் இருளிலிருந்து உள்ளொளிக்கும், மரணத்திலிருந்து மரணமில்லாப் பெருவாழ்வுக்கும் செல்லும் பெரும்பயணம் இது.
(பயணிப்போம்)
கட்டுரையாளர், தொடர்புக்கு :
sindhukumaran2019@gmail.com