Published : 31 Oct 2019 12:45 PM
Last Updated : 31 Oct 2019 12:45 PM

தெய்வத்தின் குரல்: ஸ்ரீசக்கரம் என்னும் சக்திவடிவம்

எல்லா சுவாமிக்கும் ப்ரத்யேகமாக யந்திரம் உண்டு. ஆனாலும் சிவ பூஜை, விஷ்ணு பூஜை என்றெல்லாம் பண்ணுகிறவர்கள் பெரும்பாலும் அந்த மூர்த்திகளுக்கான யந்திரங்கள் வைத்துப் பண்ணுவதில்லை. அம்பாளுக்கு மாத்திரம் ஸ்ரீசக்கரம் என்றே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் அதோடுகூட – தனியாயில்லை, சக்கரத்தோடு கூட – அவயங்களோடு கூடிய விக்கிரகமும் வைப்பது வழக்கத்திலிருக்கிறது.

ஒவ்வொரு தேவதைக்குமான எந்த வழிபாட்டு முறையை எடுத்துக் கொண்டாலும் அதில் ‘மந்திரம்’, ‘யந்திரம்’ என்று இரண்டு இருக்கும். ஒவ்வொரு விதமான சப்தக் கோவையை ஜபித்து ஜபித்து சித்தி பெற்றால் அதற்குரிய தேவதையின் அனுகிரகத்தைப் பெறலாம்.

ஒவ்வொரு யந்திரமும் பரமாத்மாவை ஒரு குறிப்பிட்ட தேவதையாகப் பிடித்துத் தர ஏற்பட்டது. மந்திரத்தை மனசுக்குள் ஜபிப்பது மாத்திரமின்றி யந்திரத்திலும் அர்ச்சன, ஆவாஹனாதிகளில் ப்ரயோஜனப்படுத்துவதுண்டு. அந்தந்த யந்திரத்தின் கோணங்களுக்கும், தளங்களுக்கும் உள்ளேயே அந்த தேவதைக்கான மந்த்ராக்ஷரங்களைப் பொறித்து வைப்பதும் உண்டு. அவயங் களோடுள்ள விக்ரக ரூபத்துக்குப் பண்ணுவதுபோலவே யந்திரத்துக்கு அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம் என்று எல்லா உபசாரங்களுடனும் பூஜை பண்ணவேண்டும்.

மீனாக்ஷி, துர்க்கை, புவனேச்வரி, சாரதாம்பிகை என்று மூர்த்தி வைத்திருப்பவர்களுங்கூட ஸ்ரீசக்கரத்தை வைத்துப் பூஜை பண்ணுவதையும் பார்க்கிறோம். அகங்களில் மாத்திரமில்லை; ஆலயங்களிலும் இப்படி இருக்கிறது. திருவண்ணாமலை கிரிப்ரதக்ஷிணத்தில் ஒரு ப்ரசித்தமான துர்க்கையம்மன் கோவிலிருக்கிறது.

அங்கே யந்திரத்தைப் பார்த்தால் ஸ்ரீசக்கரமாகவே இருக்கிறது. சிருங்கேரியில் சாரதாம்பாள் மூர்த்தியாக இருந்தாலும் ஸ்ரீசக்கரமே வைத்துப் பூஜை நடக்கிறது. இப்படி மற்ற எந்த ஸ்வாமியையும் விட அம்பாளுக்கே யந்திரம் விசேஷமாகவும், அம்பாளுக்கே இருக்கப்பட்ட அநேக ரூபங்களுக்கான யந்திரங்களிலும் ஸ்ரீயந்த்ரத்திற்கே விசேஷம் என்றும் இருக்கிறது.

சக்தி படைத்த வடிவங்கள்

கோடுகள், வட்டங்கள், சதுரங்கள், அந்தக் கோடுகளாலான கோணங்கள் இவை எல்லாம் ஒரு சக்கர ரூபத்தில் அமைந்து, மத்ய பிந்துவோடு [நடுப் புள்ளியோடு] இருப்பதே யந்திரம் என்பது. இந்த மாதரி டிசைனுக்கே ஒவ்வொரு தேவதையின் சக்தியை கிரகித்துக் கொடுக்கும் சக்தி – அபரிமிதமான சக்தி – இருக்கிறது.

ஸ்ரீ சக்கரத்தில் சக்கரம் என்று வட்டமாக இருக்கும் மத்திய பாகத்தில் ஒன்பது முக்கோணங்கள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதில் நாற்பத்து மூன்று முக்கோணங்கள் உண்டாயிருக்கும். மத்திய பிந்துவையும் கோணமாகவே சேர்த்து நாற்பத்து நான்கு என்றும் சொல்வதுண்டு. இந்த நாற்பத்து நான்கு கோணங்கள் ஆறு ஆவரணங்களாக அமைந்திருக்கின்றன.

தேவதையின் இருப்பிடம்

யந்திரம் என்பது ஒரு தேவதையின் இருப்பிடமாகவும், அது மாத்திரமில்லாமல், சாக்ஷாத் அந்தத் தேவதைக்கு பிரதிநிதியாகவுமே இருப்பது. அதிலும் அம்பாள் ஸ்வித்யா தேவதையாக இருக்கும் போது யந்திர ரூபத்திலேயே விசேஷமாக சாந்நித்யம் கொண்டிருக்கிறா ளென்பதால்தான் அந்த ஸ்ரீயந்திரத்திற்கு அலாதியான சிறப்பு இருக்கிறது. அம்பாளுடைய பரம சொளந்தர்யமான அவயவ ரூபத்தைவிடக் கூட இந்த யந்திர ரூபத்திற்கே சிறப்புத் தந்து பூஜிப்பதாக இருக்கிறது. அம்பாளுக்கு இரண்டு வாச ஸ்தானம். அம்ருத சாகரத்தில் ஒன்றும், மேரு மத்தியில் ஒன்றுமாக என்றேனல்லவா? அதோடு மூன்றாவது வாசஸ்தானமாக ஸ ஸ்ரீசக்கரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மேரு சிகரத்திலே அம்பாள் இருக்கும்போது இந்த ஒவ்வொரு ஆவரணமும் அந்த சிகர மத்தியிலே சிகரத்திற்கு மேல் சிகரங்களாகத்தானே எழும்பியிருக்கும்? அந்த அமைப்பில்தான் ஸ்ரீ சக்கரத்தையே சமதளத்தில் நீளம், அகலம் ஆகிய இரண்டு பரிணாமத்தில் பண்ணுவது மாத்திரமில்லாமல் உயரமும் சேர்த்து, அடுக்கடுக்காக, மூன்று தளத்தில் கூம்பாகப் போய்முடிகிற விதத்திலும் பண்ணுவதாக இருக்கிறது.

இப்படி மூன்று பரிணாமத்தில் உள்ள ஸ்ரீ சக்கரத்துக்கு மேரு ப்ரஸ்தாரம் என்றே பேர். மேரு என்று மாத்திரம் அதைச் சொல்வதாகவும் ஏற்பட்டுவிட்டது. சமதளமாக பூமி மட்டத்தோடு இருக்கும் ஸ்சக்ரத்திற்கு பூப்ரஸ்தாரம் என்று பெயர். இரண்டும் கலந்து, ஆரம்ப ஆவரணங்கள் உயரவாட்டிலும் பிற்பாடு வருபவை சமதளமாகவும் அமைந்ததை அர்த்த மேரு என்பார்கள். எல்லா ஆவரணமும் மேரு ப்ரஸ்தாரமாயிருந்தால் பூர்ண மேரு. காஞ்சீபுரத்தில் காமகோஷ்டத்தில் இருப்பது பூப்ரஸ்தாரம். நம் மடத்தில் பூர்ண மேரு. மாங்காட்டில் அர்த்த மேரு. திருவிடைமருதூர் மூகாம்பாள் சன்னிதியில் பூர்ண மேரு.

நாமம், ரூபம் என்ற இரண்டை விசேஷமாகச் சொல்கிறோம். ஆனால் பொதுவாகவே தாய்த் தெய்வத்தின் மந்திரங்களில் நாமம் என்பதே மிகப் பெரும்பாலும் இல்லை. ஸ்ரீவித்யா மந்திரங்களிலோ அடியோடு இல்லை. பீஜாக்ஷரங்களே உள்ளன. அவ்வாறே ஸ்ரீவித்யா தேவதை திரிபுர சுந்தரி என்று அழகு உருவத்தாலேயே பெயர் பெற்றிருந்தும் அவளுக்கு உருவம் அமைக்காமல் யந்திரத்திலே வழிபடுவதே அதிகம் காண்கிறது.

ஏன் இவ்வாறு நம் அன்னை விஷயத்தில் மட்டும் நாமம், ரூபம் இரண்டும் முக்கியம் பெறாமலுள்ளன என்று ஸ்ரீசரணர்களிடம் கேட்கப்பட்டதுண்டு. ஆனால் அவர்களோ இவ்விதம் இருப்பதைத் தாமும் திரும்பச் சொல்லி வியந்து கொள்வதாகக் காட்டினார்களே தவிர விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x