

தஞ்சாவூர்க்கவிராயர்
அகத்தைத் தேடி அகத்தை விட்டுப் புறப்படும் மெய்ஞானிகள் அகத்தில் உள்ளவர் அனுமதிக்காக காத்திருப்பதில்லை. நள்ளிரவில் யாரும் அறியாமல் உலகியலை உதறி வீட்டை விட்டு ஏகியோர் கதைகளும் ஏராளம். ஆனால், தமிழ்நாட்டில் குணங்குடியில் பிறந்த குணங்குடி மஸ்தான் என்ற சூஃபி ஞானியோ திருமணம் நிச்சயித்த பெண்ணிடமும் பெற்றோரிடமும் துறவு மேற்கொள்ள அனுமதி வேண்டி நின்றார்.
“மைமூன்! உன்னைப் பார்க்கும்போது என் தாயைப் பார்ப்பது போலவே இருக்கிறது!”.
மைமூனின் கண்களில் கண்ணீர். ஒரு பெண் பெறுபவற்றுள் எத்தனை பெரிய பெருமையை கெளரவத்தை அளித்துவிட்டான் இந்த இளைஞன்! இதற்கு முன் மனைவி ஸ்தானம் எம்மாத்திரம்?
“உங்களை ஒருக்காலும் தடுக்க மாட்டேன்! நீங்கள் அடைய வேண்டியதை நோக்கிப் பயணப்பட்டு விட்டீர்கள்! அதனைப் பூரணமாக அடையுங்கள்! இதற்கு நான் பெருமைப்படுகிறேன்!” “போவோம் குணங்குடிக்கு! எல்லோரும் புறப்படுங்கள்!” என்று பாடியபடி வீதியில் செல்கிறார். குணங்குடி என்பது சுவனத்தைக் குறிக்கிறது. இல்லம் துறந்த சிங்கங்கட்கு இல்லை ஒரு பங்கம் என்று கம்பீரமாக முழங்கியபடி செல்லும் அவரை அடியார் கூட்டம் பின் தொடர்ந்து சென்று வழியனுப்புகிறது.
கண்ணே ரகுமானே
கரிய நிறம் அருள் ஒளி வீசும் கண்கள். தலைவிரி கோலம். கை விரல்களில் நீண்ட நகங்கள், கம்பளி ஆடை, அலைந்து திரிவதோ குப்பை மேடுகள், முட்புதர்கள் மூங்கில் காடுகள் சப்பாத்திக் கள்ளிகள், மண்டிக் கிடக்கும் இடங்கள். ‘வேட்டைப் பெரிதென்றே வெறிநாயைக் கைப்பிடித்து காட்டிற் புகலாமோ கண்ணே றகுமானே’‘ஏகப் பெருவெளியில் இருட்கடலில் கம்பமற்ற காகம் அதுவானேன் கண்ணே றகுமானே!’என்று இவரது பாடல்களில் பயின்று வரும் உவமை நயங்கள் பழ மொழிகள் எல்லாம் சாதாரணர் மொழி யில் இருப்பது சூபித்தன்மைக்கு இலக்கணமாய்த் திகழ்கின்றன.
முரட்டுக் கம்பளி
மரணத்தின் கெக்கெலிப்பு, மனத்தைக் குடையும் வினாக்களுடன் விடைதேடி அலைந்தார். சாதிமதம் கடந்து சன்மார்க்க நெறியான சூபித்துவத்தின் ஞானஒளி அவர் முகத்திலே சுடர்விடத் தொடங்கிவிட்டது. அரபு மொழியில் சூபி என்றால் முரட்டுக் கம்பளி என்று அர்த்தம். ஆடம்பரத்தை மறுத்து எளிய வாழ்வின் சின்னமான கம்பளியை அணிந்த இஸ்லாமிய ஞானிகளை சூபிகள் என்பர். ஒரு சூபி சமயத்துக்குள்ளும் இருப்பான் சமயத்துக்கு வெளியேயும் இருப்பான். சம்பவங்கள் அவனுக்கு விலங்கிட முடியாது. அவன் வாக்கில் நாட்டுப்புற எளிமை இருக்கும். கால்போன வழிப்பயணம் செய்பவன். சூபிக்கான இத்தனை பண்புகளும் பெற்ற ஞானநெறிச் செல்வரே குணங்குடி மஸ்தான்.
ஆனந்தப் பரவச நிலை
சூபி நெறியில் ஆனந்தப் பரவச நிலையைக் குறிக்கும் சொல்லே மஸ்தான். இறைக்காதலில் மூழ்கித் தம்மை இழந்த ஞானியரை வெறியர் அதாவது மஸ்தான் என்று அழைப்பது சூபித்துவ மரபு. இங்ஙனம் வாழ்ந்தமையால் தான் குணங்குடியார், மஸ்தான் எனப்பட்டார். குணங்குடியில் வாழ்ந்த முகையத்தீன் ஆண்டவர் அவர்களே இவரது முன்னிலை குரு.
சாதிமத வேறுபாடின்றி மகாவித்துவான் சரவணப் பெருமாள் ஐயர், கோவளம் சபாபதி முதலியார், சிவயோகி ஐயாசாமி முதலியார், பாவா லெப்பை, ஆற்காடு நவாப் ஆகியோர் குணங்குடியாரின் சீடர்களாக இருந்தனர். இறுதியாக சென்னை சேர்ந்து அங்கு காவாந்தோப்பு என்னும் காட்டுப் பகுதியில் கல்வத் என்னும் நிர்விகல்ப சமாதியில் அமர்ந்து விடுகிறார்.
அவர் தொண்டியிலிருந்து வந்தமையால்அந்த இடம் தொண்டியார் பேட்டை என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி இன்றைய தண்டையார்பேட்டை ஆயிற்று. 1830-ம் ஆண்டு தனது நாற்பதாவது வயதில் கையில் ஏடு எழுத்தாணியோடு தவச்சாலையில் காலடி எடுத்துவைக்கு முன் அடியார்கள் முன்பு ஆற்றிய உபதேசம் அப்படியே வள்ளலாரை ஒத்திருக்கிறது.
அஸ்ஸலாமு அலைக்கும், சற்று நேரத்திற்குள் அடியேன் இந்த மண்மண்டபத்தில் நுழையப் போகிறேன். மனோசாந்தி வேண்டுமெனில் பழகிப்பழகிவரும் பைமுதலைக் களவு கொடுத்து விடாதீர்கள். இருள்மயமான புலனாதிகளின் இச்சையைத் தொலைக்க ஒரேவழி தவம் என்ற வணக்கமே ஆகும்.
காலம் போகும். திரும்பி வராது. நான் சொன்னவற்றை இப்போதே கடைப்பிடியுங்கள். நான்வருகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டார். ஏழு அண்டுகள் தனிமைத்தவத் துக்குப் பிறகு தன் சீடர்கள் கனவிலே தோன்றி புனித ரமலான் மாதத்துடன் தனது உலக வாழ்க்கையைப் பூர்த்தி செய்து விட்டதாவும் தனது பூதவுடலை காவாந்தோப்பு மயான பூமியில் கிடத்தி இருப்பதாகவும் பிரபலம் ஏதுமின்றி இரவு விடிவதற்குள் என் சடலத்தை அடக்கம் செய்க என்று கூறுகிறார். குணங்குடியார் உடலினை அடக்கம் செய்தபின் கண்ணீர் மல்க அவர் சீடர்கள் அவர் புகழ்பாடி முடிப்பதற்கும் கதிரவன் உதிப்பதற்கும் சரியாக இருந்தது.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com