

உஷாதேவி
ஈஸ்வர ஆண்டு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் திருகுருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள திருக்கோளுரில் பிராமண சமூகத்தில் மதுரகவியாழ்வார் பிறந்தார். இளமையில் எல்லாக் கலைகளையும் கற்று கவிபாட வல்லவராகி “மதுரகவி” என்னும் பெயர் பெற்றார்.
ஒரு நேரம் மதுரகவிகள் யாத்திரையாக அயோத்திக்குச் சென்றிருந்தபோது தென்திசையி லிருந்து ஒரு பிரகாசம் வெளிப்படுவதைப் பார்த்தார். அதைப் பின்தொடர, அந்த ஒளி ஆழ்வார் திருநகரியில் கொண்டு சேர்த்தது. இந்த ஊரில் ஏதாவது அபூர்வ விசேஷம் உண்டா என்று விசாரித்தார்.
16 வயதுள்ள சடகோபன் என்னும் பிள்ளை பிறந்ததிலிருந்து கண் திறக்காமல், பேசாமல், சாப்பிடாமல் வாழ்ந்து வருகிறான் என்ற தகவல் கிடைத்தது. அவர் தியானம் செய்துவந்த புளிய மரத்தடிக்கு மதுரகவியாழ்வார் சென்றார். அவரது நிலையைச் சோதிக்க ஒரு சிறுகல்லை எடுத்துப் போட்டார். 16 ஆண்டுகள் தியானத்திலிருந்த சடகோபர் என்ற நம்மாழ்வார் கண்திறந்து பார்த்தார்.
மதுரகவிகள் சடகோபரைத் தண்டனிட்டு சிஷ்யனாக ஏற்பதற்கு முறையிட அவரும் ஏற்றுக் கொண்டார். இப்படியாக ‘உயர்வற உயர்நலம் உடையவன்’ என்று ஆரம்பித்துப் பாடிக் கொண்டிருக்க 108 திவ்ய தேசப் பெருமாள்களும் தம்மைப் பாடமாட்டாரா என்று போட்டிபோட்டுக் கொண்டு நின்றனர். கூட்டம் தாங்காது போக மதுரகவிகள் அந்தப் புளியங்கொம்பு ஒன்றை ஒடித்துக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினார்.
அப்படி ஒவ்வொரு பகவானாக வரிசையில் நின்று பாசுரம் பெற்றுப் போகுமளவுக்கு நம்மாழ்வாரின் திருவடி பலம் மதுரகவியாழ்வாருக்கு இருந்தது. ‘மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்றறியேன் குருகூர் நம்பி’ என்று வாழ்ந்த மதுரகவியாழ்வாரைப் போல ஓர் ஆசிரியரை நம்பி நான் வாழ வில்லையே என்று வருந்துகிறாள் திருக்கோளூரைச் சேர்ந்தவள்.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு:
uyirullavaraiusha@gmail.com