

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
29.10.2019 முதல் 13.11.2020 வரை
நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள் கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்ல பட்சத்து பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோகத்தில் சந்திரன் ஓரையில் பஞ்சபட்சியில் காகம் துயில் பயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்ணிய காலத்தில் வர்ஷருதுவில், அதிகாலை 3 மணி 40 நிமிடத்திற்கு சூரிய உதயம் நாழிகை 54.09க்கு கன்னி லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னத்தில் தங்கத்துக்கும், தலைமைக்கும் உரிய கிரகமான வியாழன் எனும் குருபகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசில் சென்று அமர்கிறார். 28.3.2020 முதல் 01.06.2020 வரை அதிசாரமாகவும், 2.6.2020 முதல் 6.7.2020 வரை வக்கிரமாகவும் நீசவீடான மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.
குருபகவானின் இந்தப் பெயர்ச்சியில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். பாகிஸ்தான்- சீன எல்லைகள் பலப்படுத்தப்படும். கல்வித்துறை நவீனமாகும். ஆள்மாறாட்டம் செய்யமுடியாதபடி நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகளுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.
போர்தளவீடான தனுசில் குரு அமர்வதால் இந்தியா அதி நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும். சாமியார்கள், ஆன்மிகவாதிகள் பாதிப்படைவார்கள். தேசத்தைப் பாதித்த நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவிற்கு வரும். அமைச்சர்கள், சாமியார்கள் வழக்குகளில் சிக்குவார்கள். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போராடுவார்கள். அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும்.
ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் தங்கம் விலை குறையும். உலகமெங்கும் பொருளாதார மந்தநிலை (Recession) அதிகரிக்கும். 2020-ல் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் அடி வாங்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறை அதிக லாபம் ஈட்டும். கச்சா எண்ணெய் விலை அதிகமாகும்.
சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயரும். இந்தியாவில் கோவா, குஜராத், பம்பாய் பகுதிகளில் வியாபாரம் பாதிக்கும். வடக்கு, கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் நில நடுக்கம் வரும். ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதி, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம் பகுதிகளில் கலவரம் வெடிக்கும். வடகொரியா, மங்கோலியா, கனடா, பாகிஸ்தானில் கலவரம் பரவும். தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், ஈரோடு, கடலூர் உளுந்தூர் பேட்டை பகுதிகள் பாதிக்கும்.
ரிஷப ராசி வாசகர்களே
என்கடன் பணி செய்து கிடப்பதே என்று உழைத்துக்கொண்டே இருப்பவர்களே! இதுவரை உங்கள் ராசியை நேருக்குநேர் பார்த்துக் கொண்டிருந்த குருபகவான் இப்போது 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் சென்று மறைகிறார். 8-ல் நிற்கும் குருவால் எல்லாம் காரியங்களும் தட்டிக்கொண்டே போகுமே, தெளிவில்லாமல் முடிவெடுக்க நேரிடுமே, இருப்பதை எல்லாம் இழக்க வேண்டியது வருமே என்று கலங்காதீர்கள். குரு 8-ல் மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்கள் குறையும். அன்னியோன்யம் அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். ஆனால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். வறட்டு கௌரவத்திற்காக தடபுடலாகச் செலவு செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை.
நள்ளிரவுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஆனால் குருபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பேச்சில் தடுமாற்றம் நீங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வீண் பயம் விலகும். மனைவிவழி உறவினர்கள் கொடுத்த சங்கடங்கள் தீர்ந்து நல்லது நடக்கும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் சோர்வு, வீண் அலைச்சல், படபடப்பு விலகும். அம்மாவுடனான மனஸ்தாபங்கள் நீங்கும்.
அவர்வழிச் சொத்து கைக்கு வரும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். குரு பன்னிரெண்டாம் வீட்டை பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். முன்னோர்கள் விட்டுச் சென்றவற்றைப் பாதுகாக்க முயல்வீர்கள். இந்த ஒரு வருடத்துக்குப் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. வீண் பேச்சில் நேரத்தை வீணடிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது.
29.10.2019 முதல் 31.12.2019 வரை குருபகவான் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சிலர் உங்கள் உழைப்பைப் பயன்படுத்தி முன்னேறுவார்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் ஓரளவு பணம் வரும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.
சோப்பு, ஷாம்புவை மாற்றாதீர்கள். ஒவ்வாமை வரக்கூடும். திருமணம் கூடி வரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சாரச் சாதனங்கள் வாங்குவீர்கள். 6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குருபகவான் உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் எதிர்ப்புகள் குறையும். தாயாருடன் வீண் விவாதங்கள், அவருக்கு அசதி, சோர்வு வந்துப் போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.
வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாய்வழி உறவினர்களான அத்தை, அம்மான் வகையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாய்வழி சொத்துப் பிரச்சினை தலைத்தூக்கும். மற்றவர்களுக்காக உத்தரவாதக் கையொப்பமிட வேண்டாம்.
28.03.2020 முதல் 6.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தி லும் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதக் குணம் தளரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
07.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். புது வேலை தொடர்பில் நல்ல பதில் வரும்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் நீண்ட நாட்களாகத் தடைப்பட்டு, தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். கணவன் மனைவிக்குள் பனிப்போர் நீங்கும்.
மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் பரவும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்ய குறைந்த வட்டிக்கு கடன் வாங்குவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை அதிகப்படியாக வரவழைப்பீர்கள். பங்குதாரர்களிடம் இருந்து வந்த கூச்சல், குழப்பங்களெல்லாம் நீங்கும். உத்தியோ கத்தில் மேலதிகாரிக்கு நெருக்க மாவீர்கள். சக ஊழியர்களிடம் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங் களைப் பற்றிப் பேச வேண்டாம். புது வேலைக்கு மாறும்போது யோசித்துச் செயல்படுங்கள். இந்தக் குருப்பெயர்ச்சி முன்னெச்சரிக்கை உணர்வாலும், எதார்த்தமான பேச்சாலும் உங்களை வளர்ப்பதுடன் பணத்தின் அருமையையும் அரிய வைக்கும்.
பரிகாரம்
அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் அருகில் உடையவர் தீயனூரில் வீற்றிருக்கும் அமிர்தாம்பிகை உடனுறை ஸ்ரீஜமதக்னீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வழிபடுங்கள். வேர்க்கடலை தானமாகக் கொடுங்கள். நோய்கள் பூரணமாக குணமாகும்.