

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
29.10.2019 முதல் 13.11.2020 வரை
நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள் கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்ல பட்சத்து பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோகத்தில் சந்திரன் ஓரையில் பஞ்சபட்சியில் காகம் துயில் பயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்ணிய காலத்தில் வர்ஷருதுவில், அதிகாலை 3 மணி 40 நிமிடத்திற்கு சூரிய உதயம் நாழிகை 54.09க்கு கன்னி லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னத்தில் தங்கத்துக்கும், தலைமைக்கும் உரிய கிரகமான வியாழன் எனும் குருபகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசில் சென்று அமர்கிறார். 28.3.2020 முதல் 01.06.2020 வரை அதிசாரமாகவும், 2.6.2020 முதல் 6.7.2020 வரை வக்கிரமாகவும் நீசவீடான மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.
குருபகவானின் இந்தப் பெயர்ச்சியில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். பாகிஸ்தான்- சீன எல்லைகள் பலப்படுத்தப்படும். கல்வித்துறை நவீனமாகும். ஆள்மாறாட்டம் செய்யமுடியாதபடி நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகளுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.
போர்தளவீடான தனுசில் குரு அமர்வதால் இந்தியா அதி நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும். சாமியார்கள், ஆன்மிகவாதிகள் பாதிப்படைவார்கள். தேசத்தைப் பாதித்த நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவிற்கு வரும். அமைச்சர்கள், சாமியார்கள் வழக்குகளில் சிக்குவார்கள். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போராடுவார்கள். அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும்.
ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் தங்கம் விலை குறையும். உலகமெங்கும் பொருளாதார மந்தநிலை (Recession) அதிகரிக்கும். 2020-ல் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் அடி வாங்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறை அதிக லாபம் ஈட்டும். கச்சா எண்ணெய் விலை அதிகமாகும்.
சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயரும். இந்தியாவில் கோவா, குஜராத், பம்பாய் பகுதிகளில் வியாபாரம் பாதிக்கும். வடக்கு, கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் நில நடுக்கம் வரும். ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதி, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம் பகுதிகளில் கலவரம் வெடிக்கும். வடகொரியா, மங்கோலியா, கனடா, பாகிஸ்தானில் கலவரம் பரவும். தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், ஈரோடு, கடலூர் உளுந்தூர் பேட்டை பகுதிகள் பாதிக்கும்.
தனுசு ராசி வாசகர்களே
கொள்கையை விட்டுக் கொடுக்காமல், மனசாட்சிக்கு மதிப்பளித்து வாழ்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12-வது வீட்டில் அமர்ந்து கொண்டு கைமீறிய செலவுகளையும், வீண்பழி, பகை, மன உளைச்சல் என்று உங்கள் நிம்மதியை சீர்குலைத்துக் கொண்டிருந்த குருபகவான் இப்பொழுது 29.10.2019 முதல் உங்கள் ராசிக்குள் நுழைந்து 13.11.2020 வரை ஜென்மகுருவாக அமர்வதால் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
யோகா, தியானம், உணவு கட்டுப்பாடும் அவசியம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்குள் வீண் விவாதம், சண்டை சச்சரவு, சந்தேகத்தால் பிரிவு வரக்கூடும். குலதெய்வக் கோயிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள். உதவிக் கேட்டு வரும் உறவினர், நண்பர்களுக்கு வாக்குறுதி எதுவும் தரவேண்டாம்.
உங்களால் முடிந்ததை மட்டும் செய்யுங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் குரு பகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளிடமிருந்த பிடிவாதக் குணம் மறையும். மகன் கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவார். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். இளைய சகோதரர் உங்களின் பாசத்தை உணர்வார். தங்கைக்கு நல்லவிதத்தில் திருமணம் முடியும். டி.வி, ப்ரிட்ஜ், வாஷிங் மிஸினை மாற்றுவீர்கள். சொந்த ஊரில் மரியாதை கூடும். விலையுயர்ந்த நகை வாங்குவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள்.
குரு பகவான் உங்களின் 7-ம் வீட்டையும் பார்ப்பதால் அடிமனத்திலிருந்த பய உணர்வு நீங்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வீர்கள். கணவன் மனைவிக்குள் ஓரளவு நெருக்கம் உண்டு. வீட்டில் தள்ளிப்போன திருமணம் இனி தடபுடலாக நடக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் உதவியுண்டு. பணப் பற்றாக் குறையினால் பாதியிலே நின்ற வீடு கட்டும் வேலையை முழுமையாக முடிப்பதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். உங்களின் பாக்கிய வீடான 9-ம் வீட்டை குரு பார்ப்பதால் ஓரளவு வருமானம் உயரும். அதிக வட்டிக்கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். தந்தையாரின் ஆரோக்கியம் மேம்படும். அவர் வழிச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். ஆனால் குடும்ப ரீதியான அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
29.10.2019 முதல் 31.12.2019 வரை குருபகவான் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை, சற்றே உடல் நலக்குறைவு வந்து நீங்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்தவை தாமதமானாலும், எதிர்பாராத சில வேலைகள் முடியும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். ஒரு சொத்தை விற்று சில பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு மனஉளைச்சல் அதிகமாகும்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் உங்கள் செயலில் வேகம் கூடும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வீடு, வாகன வசதிப் பெருகும். பணப்புழக்கம் அதிகமாகும். பங்கு வர்த்தகத்தில் பணம் வரும். என்றாலும் வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு தோலில் நமைச்சல், தடிப்பு வந்து போகும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குருபகவான் உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறமை அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வேலைக் கிடைக்கும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். தந்தையில் ஆரோக்கியம் சீராகும். அவர்வழியில் உதவிகளும் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து போகும்.
28.03.2020 முதல் 6.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் திடீர் யோகம், பணவரவு, மகிழ்ச்சியெல்லாம் உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவியும் கிட்டும். புதிய வேலை கிடைக்கும்.
07.07.2020 முதல் 30.7.2020 வரையிலான காலகட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஊர் பொது காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விலகுவீர்கள்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் தொண்டை வலி, கணவன் மனைவிக்குள் பிரிவு, வீண் வாக்குவாதம், வாகனப் பழுது, பணப்பற்றாக்குறை வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். புது பதவிகளை யோசித்து ஏற்பது நல்லது. வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு பெரிய முதலீடு செய்வீர்கள். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
வேலையாட்களிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். பதவி உயர்வுக்காகத் தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். சம்பளமும் கூடும். இந்த குருப் பெயர்ச்சி வீண் சந்தேகம், வேலைச்சுமையால் உங்களை அலைகழித்தாலும் போராட்ட குணத்தாலும் விடாமுயற்சியாலும் வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்
தேனி மாவட்டம், வேதபுரியில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரஜ்ஞா தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். கொண்டைக்கடலை தானம் கொடுங்கள். தடைகள் அகலும்.