81 ரத்தினங்கள் 21: அகம்வேத்மி என்றேனோ விசுவாமித்திரரைப் போலே

81 ரத்தினங்கள் 21: அகம்வேத்மி என்றேனோ விசுவாமித்திரரைப் போலே
Updated on
1 min read

உஷாதேவி

ரிஷி விசுவாமித்திரர் அயோத்யா அரண்மனைக்கு வருகிறார். அவரை இருகரம் நீட்டி வரவேற்று பாதபூஜை செய்து மகிழ்ந்தார் தசரதர். விசுவாமித்திரர், தான் செய்யும் யாகத்துக்குத் தடை செய்துவரும் தாடகை, மாரீசன், சுபாஹீ போன்ற ராட்சதர்களை அழிப்பதற்காக ராமனைக் கேட்டு தசரதரின் உதவியை நாடி வந்திருந்தார்.

தசரதருக்கு தன் உயிருக்கு உயிரான ராமனை அனுப்ப மனமில்லை. தானே வந்து யாகத்தைக் காத்துப் பூர்த்தியடையச் செய்வதாகக் கூறி தன் மகனை அனுப்ப மறுத்தார். ராமன் இன்னும் சிறுபிள்ளை என்றும் பயந்தார்.

ஆனால் விசுவாமித்திரரோ, ஸ்ரீராமன் அகம்வேத்மி (நிறைவான தெய்வம்) அவனே யாகத்தைக் காக்க வரவேண்டும் என்கிறார். சூரியகுல இளவரசன் ராமரின் மூதாதையரான அரிச்சந்திரன் அரசாண்டபோது, அவனுக்குச் சத்திய சோதனை கொடுத்து மனைவி சந்திரமதியைப் பிரிந்து பல துயரங்களை அடைவதற்கு விசுவாமித்திரரே காரணமாக இருந்தார். அதற்குப் பிரதியுபகாரமாகவே அந்த சந்ததியில் வந்த உத்தமன் ராமனுக்கும் ஜனகனின் மகளும் உத்தமியுமான சீதைக்கும் மணமுடித்து வைக்க எண்ணினார். தசரதர், ராமனை மனவருத்தத்துடன் அனுப்பி வைத்தார்.

ஸ்ரீராமனுடன் லட்சுமணரும் சேர்ந்து விசுவாமித்திரருடன் செல்கின்றனர். தாடகை வதம் முடித்து மிதிலைச் சென்று சிவதனுசை உடைத்து பரசுராமரின் கர்வம் தணித்து ராமன் சீதையை மணந்தார். தசரதரிடம் ராமன் அகம்வேத்மி என்று தெளிவுபடுத்திக் கூறினார் ரிஷி விஸ்வாமித்ரர். அந்த ரிஷியைப் போலே நான் ராமனை தெய்வம் என்று உணரவில்லையே சுவாமி என்று மனம் வருந்துகிறாள் நம் திருக்கோளுர் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in