

வா.ரவிக்குமார்
தென்னிந்தியப் பின்னணிப் பாடகர்களில் இந்துஸ்தானி இசையை முறையாகக் கற்றுக்கொண்டு சூஃபி, கஸல் பாணியில் சிறப்பாகப் பாடக் கூடிய கலைஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்ரீநிவாஸ். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி தபஸம் அவர் வாழ்ந்த காலத்திலேயே மிகவும் போற்றப்பட்ட கவி.
அவருடைய புகழ் பெற்ற பாடலான `தேரே பஸ்ம் மெய்ன்’ பாடலை மெஹதி ஹசன் பாடி உலகம் முழுவதும் இருக்கும் இசை ரசிகர்களை பரவசப்படுத்தினார். அதே பாடலை தற்போது பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் தன்னுடைய காந்தக் குரலில் பாடிப் பதிவேற்றியிருக்கிறார்.
பாரம்பரியமான ஹீர் பாணியில் சிந்துபைரவி ராகத்தில் மந்திர ஸ்தாயியில் தொடங்கி படிப்படியாக உத்வேகம் கொள்கிறது ஸ்ரீநிவாஸின் குரல். பாடலைப் பாடியிருக்கும் விதத்தைப் பற்றி ஸ்ரீநிவாஸிடம் கேட்டபோது, “அந்த ஸ்கேலில் பாடும்போது யார் பாடினாலும் உருக்கமாகத்தான் இருக்கும்.
காஷ்மீரைச் சேர்ந்த கவி சூபி தபஸம். பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானுக்கு போய்விட்டார். கொச்சின் போயிருந்தபோது, நான் பாடிய இந்த கஸலைக் கேட்டு காஷ்மீரில் இருப்பது போல் உணர்ந்தேன்” என்றார் ஒரு ரசிகர்.
ஒரு பெண்ணை வர்ணிப்பதுதான் இந்தப் பாடலின் வரிகளாக மேம்போக்காகத் தெரிந்தாலும், அது கடவுளைப் பற்றிய விஷயமாகவும் இருக்கும். தெய்விகமாக இருக்கும். கவியின் வார்த்தைகளும் அவருடைய இசையும் நம்மை வேறு ஓர் உலகத்துக்குக் கொண்டு செல்லும் வல்லமை கொண்டவை.
பொறாமை, சண்டை எதுவுமே தேவையில்லை என்பதை இந்தப் பாடலைப் பாடும்போது என்னுடைய உள் மனதில் நான் உணர்ந்தேன். இந்த உணர்ச்சி இந்தப் பாடலைக் கேட்கும் எல்லோருக்கும் நிச்சயம் ஏற்படும். நான் பாடுவதால் அல்ல, அதுதான் அந்தக் கவியின் வார்த்தைகளுக்கு இசைக்கு இருக்கும் பலமாக நான் பார்க்கிறேன்.
நான் பெரிதும் மதிக்கும் மெஹதி ஹசனுக்கு இந்தப் பாடலை நான் அர்ப்பணித்திருப்பதற்குக் காரணம், அவர் இந்தப் பாடலை மிகவும் நேர்த்தியாகப் பாடியிருப்பார். அவரை முன்னுதாரணமாகக் கொண்டுதான் இந்தப் பாடலைப் பாடினேன். அவர் மீதான என்னுடைய அளப்பரிய மரியாதையை வெளிப்படுத்தும் சிறு முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன்” என்றார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்களே, அதுதான் இந்தப் பாடல்!
`தேரே பஸ்ம் மெய்ன்’ பாடலைக் காண: