

சனியாஸ்னைன் கான்
தாயிஃப் நகரத்தைவிட்டு வெளியேறிய இறைத்தூதர், வழியில் தன் வளர்ப்பு மகன் ஹாரித்தாவுடன் ஒரு திராட்சைத் தோட்டத்தில் அமர்ந்து இளைப்பாறினார். அந்தத் திராட்சைத் தோட்டம் உத்பா, ஷ்யாபா என்ற இரண்டு சகோதரர்களுடையது. அவர்கள் மக்கா நகரவாசிகள். அந்தத் திராட்சைத் தோட்டத்தில் அமர்ந்து இளைப்பாறியபோது, அவர் இறைவனிடம் தன் இயலாமையையும் வேதனைகளையும் பகிர்ந்துகொண்டார். நபிகள் தன் கைகளை உயர்த்தி அல்லாவிடம் வேண்டினார்:
“அல்லாவே என் ஆதரவின்மை, ஏழ்மை, மக்களுக்கு என் மீதிருக்கும் மரியாதைக் குறைவு ஆகியவற்றைக் கருணை கூர்ந்து கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். ஓ, கருணை நிறைந்த இறைவனே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இறைவனே, நீங்களே என் இறைவன். என் விதி உங்கள் கைகளில் இருக்கிறது. என் விதியை என்னை அவமதிக்கும் அந்நியர்களின் கைகளில் விடமுடியாது.
என்மீது நீங்கள் கோபப்படக் கூடாது என்று வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன். என் ஒரே குறிக்கோள் உங்களை அகத்தை மகிழவைப்பதுதான். உங்கள் நம்பிக்கை ஒளி இருளை அகற்றிவிடும். இந்த உலகமும் வானுலகமும் உங்கள் தெய்விக ஒளியைத்தான நம்பியிருக்கின்றன. அந்த ஒளியில்தான் நானும் அடைக்கலமாகியிருக்கிறேன். என் மீது உங்கள் சீற்றத்தைக் காட்டக் கூடாது என்று வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். என் மீது குற்றம்சாட்டவும் தண்டனையளிக்கவும் உங்களுக்கு மட்டும்தான் உரிமையிருக்கிறது. உங்களது வல்லமை, ஆற்றலை யாரும் கொண்டிருக்கவில்லை.”
திராட்சைத் தோட்ட உரிமையாளர்கள் இறைத்தூதர் கடுமையான வலியில் இருப்பதைக் கவனித்தனர். அவர்மீது கருணை கொண்டனர். அவர்கள் தங்கள் பணியாள் அத்தாஸிடம் இறைத்தூதருக்கு அளிக்கும்படி, திராட்சைப் பழங்களைத் தட்டில்வைத்துக்கொடுத்து அனுப்பினர்.
அல்லாவின் பெயரால்
திராட்சைப் பழங்களை உண்பதற்குமுன், “அல்லாவின் பெயரால்” என்று சொன்னார் இறைத்தூதர்.
“இங்கு இப்படிச் சொல்லமாட்டார்கள்,” என்று குறிப்பிட்டார் அத்தாஸ். அத்தாஸ் எங்கிருந்து வருகிறார், எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று கேட்டார் இறைத்தூதர். “நான் நினிவே நகரத்தைச் சேர்ந்தவன். நான் ஒரு கிறிஸ்தவன்,” என்றார் அத்தாஸ். மத்தேயுவின் மகன் நீதிமான் யோனாவின் நகரத்தைச் சேர்ந்தவரா?” என்று ஆவலுடன் கேட்டார் இறைத்தூதர்.
அத்தாஸ், ஆச்சர்யத்தில் ஆழ்ந்துபோனார். “மத்தேயுவின் மகன் யோனாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டார் அவர். “அவர் என் சகோதரர்,” என்று பதிலளித்தார் இறைத்தூதர். “அவர் ஒரு உண்மையான இறைத்தூதர், என்னைப் போலவே”, என்றார் இறைத்தூதர். பெஞ்சமின் இனத்தைச் சேர்ந்த இறைத்தூதர் யோனா, கி.மு. 800-ல், நினிவே நகரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். டைகிரிஸ் ஆற்றுக்கு அருகில் அமைந்திருந்த பழமையான நகரம் அது.
இறைத்தூதர் யோனா, அந்நகர மக்களைத் தங்கள் பழைய பழக்கங்களைவிட்டு, அல்லாவின் வழிகளைப் பின்பற்றும்படி வலியுறுத்தினார். ஆனால், அம்மக்கள் அவரின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் அவரைப் பரிகாசம் செய்தனர். அவர்களின் பரிகாசம் இறைத்தூதர் யோனாவைக் கோபப்படுத்தியது. அவர் தன் இறைப்பணிகள் தோல்வியடைந்ததால், ஊக்கமிழந்து கப்பலில் ஏறி அந்தநகரத்தைவிட்டுச் சென்றார்.
ஆனால், அந்தக் கப்பல் கடும்புயலில் சிக்கிக்கொண்டது. யோனா, புயலால் கடலுக்குள் வீசியெறியப்பட்டார். அவர் பெரிய மீனால் விழுங்கப்பட்டு, தன் தவறை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்புக் கேட்கும்வரை, மீனின் வயிற்றிலேயே தங்கியிருந்தார். இறைத்தூதர் சொன்ன இந்தக் கதையைக் கேட்ட அத்தாஸ், அவரின் கைகளை முத்தமிட்டுக் கால்களில் விழுந்து வணங்கினார். அந்தக் கணத்திலேயே அத்தாஸ் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார்.
- பயணம் தொடரும்
தமிழில்: என். கௌரி
(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்’ குட்வர்ட்)