

யுகன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் சென்னை கேரள சமாஜமும் இணைந்து நடத்திய தென்னிந்திய மக்கள் நாடக விழாவில் இன்குலாப் எழுதி அ. மங்கை நெறியாள்கை செய்திருக்கும் மரப்பாச்சி குழுவின் `ஔவை’ நாடகம் அரங்கேறியது.
ஆத்திச்சூடி பாடிய ஓவையார் யாராக இருக்கும், அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் இருந்து பெற்ற ஔவை யாராக இருக்கும் என்னும் கேள்விக்கான பதில்கள், நாடகத்தின் காட்சிகள் வாயிலாகவும் கதாபாத்திரங்களின் உரையாடல் வாயிலாகவுமே இயல்பாக ரசிகர்களுக்கு கடத்தப்பட்டது நாடகத்தின் சிறப்பு. விளையாட்டு, பாட்டு, கள் குடுவை, களி நடனம் என ஔவையின் அறிமுகமே அட்டகாசமாக இருந்தது.
சாதாரண கொச்சை கலந்த பேச்சு மொழியில் அமைந்த வசனங்களையும் ஆங்கிலம் கலந்த `தமிங்கிலீஷ்’ வசனங்களையும் மட்டுமே கேட்டு அலுத்துப் போன ரசிகர்களின் காதுகளில், “ஔவையே… நீ மட்டும் தகடூரில் இருந்தால், வாளுக்குப் பதில், உன்னுடைய யாழே பகைவர்களுக்கு பதில் சொல்லும்” என்பது போன்ற வசனங்கள், தமிழை மறந்த காதுகளில் தேன் பாய்ச்சிய அனுபவத்தைத் தந்தன! எளிய பொருட்கள், மிதமான பாவனை, செறிவூட்டும் வசனங்கள், நளினமான உடைகள், ஒளி அமைப்பு, இசை இவற்றைக் கொண்டே சங்க காலக் காட்சிகளை மேடையில் தத்ரூபமாக காட்டியிருந்தனர்.
போர்மேகம் சூழ்ந்த தகடூரை குறிப்பால் உணர்த்தும் அந்த நடுகற்கள் காட்சி ஒன்றே போதும். ஔவையாகத் தோன்றிய தமிழரசியும், அஷ்வினியும், ஈழ ஔவையாகத் தோன்றிய மிருதுளாவும் கவனம் ஈர்த்தனர்.
ஔவையின் மூலமாக பாணர் குலத்தின் வாழ்க்கை முறை, தமிழ்ச் சிந்தனை மரபில் வேரூன்றிய ஐந்தினைக் கூறுகள் சார்ந்த பெண் உலகம் என இரண்டு விதமான மீள்பார்வையையும் தன்னுடைய நெறியாள்கையின் மூலமாக அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார் அ.மங்கை.